என் மலர்
நீலகிரி
- நீலகிரியில் 60 சதவீத சிறுதேயிலை விவசாயிகள் உள்ளனர்.
- தரம் குறைந்த தேயிலை, தவறான குறியீடு உள்பட 32 வழக்குகள் பதிவாகியுள்ளன.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் உப்பாசி கூட்டரங்கில் தேயிலை வாரியம் சார்பில் விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
இதில் அதிகாரிகள் தரப்பில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார், மாவட்ட கலெக்டர் அம்ரித், இண்கோ சர்வ் முதன்மை செயல் அதிகாரி மோனிக்காராணா, நீலகிரி தேயிலை சங்கங்கள் சார்பில் நெலிகொலு சிறுவிவசாயிகள் மேம்பாட்டு சங்கம், மலை மாவட்ட விவசாயிகள் சங்கம், சிறுதேயிலை விவசாயிகள் சங்கம், தேயிலை உற்பத்தியாளர் சங்கம், நீலகிரி தேயிலை உற்பத்தியாளர் சங்கம், நீலகிரி வயநாடு சங்கம், தேயிலை தரகர்- ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே சிறுதேயிலை விவசாயிகள் அதிகம் உள்ள மாவட்டம் நீலகிரி. இங்கு 60 சதவீதம் சிறுதேயிலை விவசாயிகள் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் தேயிலை விற்பனை சந்தையில் சிறப்பாக செயல்பட்டு சிறந்த தரத்துடன் அதிக லாபம் பெற முடியும். நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா, தேயிலை ஆகிய இரண்டும் கண்கள் ஆகும்.
எனவே அங்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.150 கோடி மதிப்பில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். பொதுமக்களின் வாழ்வாதாரமும் உயரும். நீலகிரியில் கலப்பட தேயிலைத்தூள் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வு நடத்தி உள்ளனர். இந்த வகையில் 11 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 6 வழக்குகளில் தொடர்பு உடையவர்களுக்கு ரூ.1.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர தரம் குறைந்த தேயிலை, தவறான குறியீடு உள்பட 32 வழக்குகள் பதிவாகி, அதில் 16 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.52,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கலப்பட தேயிலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சாரிபில் தேயிலை வியாபா ரிகளின் கோரிக்கைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
அரவேணு,
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவரங்களும் நன்றாக வளருவதற்கு உகந்த குளுகுளு காலநிலை நிலவுகிறது. இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள பாண்டியன் பார்க் பகுதியில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
மஞ்சள் வண்ணத்தில் வசீகரிக்கும் மலர்கள், காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் அமைந்து உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்களுக்கு மத்தியில் நின்று, குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
- கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
- சிக்கிள் செல் அனீமியா நோயைத் தடுக்கும் வகையில் பழங்குடியின மக்கள் 50 பேருக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
ஊட்டி,
சோலூர்மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 30- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று சிகிச்சைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இதனால், கெங்கரை ஊராட்சி மற்றும் சமூக நல கூட்டமைப்பின் மூலம் சுகப்பிரசவத்தை முன்னெடுக்கும் விதமாக பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான. நிகழ்ச்சி சோலூர் மட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், தனியார் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் சிவக்குமார் பொன்னுசாமி, கீழ் கோத்தகிரி ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சமூக நல கூட்டமைப்பின் நிர்வாகி முகம்மது பாருக் மக்களுக்கு சுகப்பிரசவம் குறித்து விளக்கிப் பேசினார். கனடா நாட்டிலிருந்து வந்திருந்த சமூக ஆர்வலர் இக்பால் அலி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் இணைந்து இ.சி.ஜி எந்திரம், சக்கர நாற்காலி உள்பட ரூ. 3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை டாக்டர் ரம்யாதேவியிடம் வழங்கினர்.
தொடர்ந்து சிக்கிள் செல் அனீமியா நோயைத் தடுக்கும் வகையில் பழங்குடியின மக்கள் 50 பேருக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாபு, விவேக், ஆசிரியர் தர்மராஜ், நம் சந்தை உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சண்முகநாதன் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- லாரியில் இருந்த சுமார் 4 டன் மரங்கள், உருண்டு வந்தன.
- முதியோர் இல்லம் முன்பு கனரக லாரிகளை நிறுத்துவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி ராமச்சந்த் பகுதியில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் முதியோர் இல்லம் நடத்தி வருகிறது. இங்கு பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், உடல்நலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர்கள் உள்பட சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இந்த நிலையில் மரம் ஏற்றி வந்த ஒரு லாரி இன்று காலை முதியோர் இல்லம் அருகே வந்தது. அப்போது பாரம் தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. எனவே லாரியில் இருந்த சுமார் 4 டன் மரங்கள், உருண்டு வந்தன.
எனவே இல்லத்தில் இருந்த முதியோர் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். எனவே அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி பிழைத்தனர்.
இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், முதியோர் இல்லத்தின் முன்பு உள்ள போக்குவரத்து சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குறுகலாக இருந்தது. எனவே நெடுஞ்சாலைத்துறை சமீபத்தில் விரிவுபடுத்தியது.
அதன்பிறகு அங்கு கனரக வாகனங்களின் வரத்து அதிகமாக உள்ளது. ஒருசிலர் பாரம் ஏற்றிய லாரிகளை கொண்டு வந்து நிறுத்துகின்றனர். இரவு நேரங்களில் அங்கு ஒருசிலர் உட்கார்ந்து மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு முன்பு முதியவர்கள் நடைப்பயிற்சி சென்றனர். அந்த நேரத்தில் லாரி கவிழ்ந்து இருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். முதியோர் இல்லம் அருகே இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே முதியோர் இல்லம் முன்பு கனரக லாரிகளை நிறுத்துவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் அருகில் ஒரு ராட்சத மரம் வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்.
இதற்கிடையே கோடநாடு சாலை புதூர் அருகே, ஒரு மரம் முறிந்து சாலையில் விழுந்தது இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது எனவே தீயணைப்பு படை போலீசார் உரிய குழுவினருடன் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
- நீலகிரி மாவட்ட விவசாயிகள் கந்துவட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- அரசியல் கட்சிகள் தேயிலைக்கு உரிய விலை வாங்கி தருவதாக கூறி விவசாயிகளை ஏமாற்றுகின்றனர்.
அரவேணு,
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொது செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகி ரமேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :-
தற்போது கடந்த சில மாதங்களாக தேயிலை விலை குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் பெயரளவில் மட்டும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் கந்துவட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பச்சை தேயிலைக்கு நிரந்தர விலை வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
ஆனால் அரசியல் கட்சிகள் தேயிலைக்கு உரிய விலை வாங்கி தருவதாக கூறி விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். இந்நிலையில்
அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேகர் நன்றி கூறினார்.
- இந்த ஆண்டு கடந்த 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது.
- மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் 70 ஆயிரம் கார்னேசன் மலர்களால் ஆன மயில் உருவம் செய்யப்பட்டிருந்தன.
ஊட்டி,
சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தை மேலும் சில நாட்களுக்கு வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆண்டுதோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது.
மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் 70 ஆயிரம் கார்னேசன் மலர்களால் ஆன மயில் உருவம், 80 ஆயிரம் மலர்களான ஊட்டி 200 வடிவம், 125வது மலர் கண்காட்சி வடிவம் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
இது தவிர நுழைவு வாயிலில் 10 அலங்கார வளைவுகள், செல்பி ஸ்பாட்டுகள், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர்களை கொண்ட மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த மலர் அலங்காரங்களை கடந்த இரு வாரமாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.
அதேசமயம் மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு வில்லியம், மேரி கோல்டு உட்பட பல்வேறு மலர் தொட்டிகளை கொண்ட மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறையாமல் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேலும் சில நாட்களுக்கு மாடங்களில் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த வாரம் இறுதி வரை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது.
- ரூ.5 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் பகுதியில், உணவகம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
- நடப்பாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை சுமார் 29 லட்சம் பேர் வருகை தந்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
இதன் ஒரு பகுதியாக படகு இல்லத்தில் சாகச விளையாட்டு அமைய உள்ளது. இதற்காக தமிழக அரசு ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிலையில் தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஊட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது ஊட்டி படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில், தனியார் பொது கூட்டு திட்டத்தின் கீழ் அமைய உள்ள ஜிப் லைன், ஜிப் மிதிவண்டி, பங்கி ஜம்பிங், தொங்கு பாலம் ஆகிய பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அடுத்தபடியாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் பகுதியில், உணவகம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து ரூ.3.25 மதிப்பீட்டில் தயாராகி வரும் கெம்ப்ளிங் சாகசம், மரவீடு ஆகியற்றின் கட்டுமான பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து தமிழக சுற்றுலா அமைச்சர் கா. ராமச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. எனவே இங்கு ஆண்டுதோறும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளை மேலும் குஷிப்படுத்தும் வகையில், சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவு றுத்தி உள்ளார்.
இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா வளர்ச்சி அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 2022-வது ஆண்டு சுமார் 24 லட்சம் சுற்றுலாப்பணிகள் வருகை தந்தனர். ஆனால் நடப்பாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை சுமார் 29 லட்சம் பேர் வருகை தந்து உள்ளனர்.
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், சாகச பூங்கா அமைப்பதற்காக ரூ.10 கோடியும், கோடப்ப மந்து கால்வாய் பணிக்காக ரூ.10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஊட்டி படகு இல்லத்தில், சாகச சுற்றுலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பொது கூட்டு திட்டத்தின் கீழ் அமைய உள்ளது.
இங்கு சாகச விளையாட்டுகளான இழைவரிக்கோடு (நிப் லைன்), விதானப் பயணம் (கேனோபி டூர்), இழைவரி சுழற்சி (ஜிப் சைக்கிள்), மாபெரும் ஊஞ்சல் (ஜெயண்ட் ஸ்விங்), ரோலர் கோஸ்டர் ஜிப்லைன் , பங்கீ ஜம்பிங், ராக்கெட் எஜேக்டர் ஆகிய பணிகள் நடந்து வருகின்றது. அடுத்தபடியாக ஊட்டி கூடுதல் படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.3.25 லட்சம் மதிப்பீட்டில், சாகச மற்றும் கெம்ப்ளிங், மரவீடு உணவகம், வாகனம் நிறுத்தும் வசதி ஆகியவை அமைய உள்ளன. இதன் மூலம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இனிவரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும்.
ஊட்டியை மேலும் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான பணிகள் முடிந்த பிறகு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மென்மேலும் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட சுற்றுலா அதிகாரி உமா சங்கர், உதவி செயற்பொறியாளர் குணசேகரன், ஊட்டி படகு இல்ல மேலாளர் சாம்சன் கனகராஜ் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
- மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பாஜக எம்.பி பிரிட்ஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரியும், நீதி கேட்டு போராடிய வீராங்கனைகளை தாக்கிய டெல்லி போலீசாரைகண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் யோகராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மணிகண்டன், இடைகமிட்டி தலைவர் சுகந்தன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- 10 நிமிட தாமதத்திற்கு பிறகு ஊட்டி புறப்பட்டு சென்றது.
- 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக மலை ெரயில் சேவை திகழ்ந்து வருகிறது. இது அடா்ந்த வனப் பகுதி வழியாக குறைந்த வேகத்தில் செல்லும். எனவே மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்த நிலையில் அந்த ரெயில் நேற்று காலை குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டது. அப்போது டிரைவர் கணேசன் ரெயிலை இயக்கினார். குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில் வெலிங்டன் மேம்பாலப் பகுதி அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன. இதனை தற்செயலாக பார்த்த டிரைவர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக பிரேக் போட்டு மலை ெரயிலை நிறுத்தினாா். அதன்பிறகு அவா் ரயிலில் இருந்து இறங்கி சென்று தண்டவாளத்தின் குறுக்கே நின்ற காட்டு எருமைகளை காட்டு ப்பகுதிக்குள் விரட்டி னாா். அதன்பிறகு குன்னூ ரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில், சுமார் 10 நிமிடம் தாமதமாக ஊட்டி க்கு புறப்பட்டு சென்றது.
- உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- ஓடைகளை மாணவ-மாணவிகள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
ஊட்டி,
ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை கமாண்டா் பிரிகேடியா் எஸ்.கே.யாதவ் தொடங்கி வைத்தாா்.இதில் ராணுவ வீரா்கள், பள்ளி மாணவ-மாணவிகள், தேசிய மாணவா் படை உள்பட பலர் கலந்து கொண்டனா். இதைத் தொடர்ந்து ராணுவ மையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள போக்குவரத்து சாலைகள் மற்றும் ஓடைகளை மாணவ-மாணவிகள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இங்கு ஒருவார காலத்துக்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும், அதன்பிறகு இந்த பகுதியில் சுமாா் 700 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது.
- இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இன்று காலை தொடங்கியது.
மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநாடு தொடங்கியவுடன் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தேசிய கீதம், பாரதியார் பாடல் இசைக்கப்பட்டு மாநாடு தொடங்கப்ப ட்டது. மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி, துணை வேந்தர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு பேசினார்.
கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி முறையை இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தேசிய கல்வி கொள்கையில், இளைஞர்களுக்கு, அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்பது கிடைப்பது இல்லை. இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் பெரும்பாலும் ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப தமிழகத்தில் கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இதுதவிர பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்த மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தமிழ்மொழியில் கிடைக்காத பாடப்புத்தகங்கள், குறிப்பு புத்தகங்கள், ஆய்வு பொருட்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் காணொலி மூலம் பங்கேற்று துணை வேந்தர்களுடன் கலந்துரையாடினார்.
பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் தலைவர் நாகேஸ்வரராவ் மற்றும் அனுவாதினி மொழி பெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்க ழகத்தின் துணை வேந்தர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணை வேந்தர்கள், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு நாளையும் நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினமே கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு வந்துவிட்டார். ஊட்டி ராஜ்பவனில் வருகிற 9-ந் தேதி வரை தங்கியிருக்கும் கவர்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, முக்கிய கோவில்களுக்கும் செல்ல உள்ளதாக தெரிகிறது. இதனையொட்டி ஊட்டியில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






