என் மலர்
நீலகிரி
- ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன.
- கால்நடைகளை ரோட்டில் விட்டால் சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம்
ஊட்டி,
தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாதலங்களில் குறிப்பிட்டத்தக்கது ஊட்டி, இங்கு உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு சவாரி இல்லம், காட்சி முனையம் மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகள் ஆகியவை சுற்றுலாபயணிகளை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.
சமவெளி பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் ஊட்டியில் எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையே நிலவும். இதனால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்து, அங்கு உள்ள குளிர்ச்சியான சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவித்து செல்கிறார்கள். இதனால் அங்கு கோடைகாலம் மட்டுமின்றி எப்போதும் கூட்டம் அலைமோதும்.
எனவே ஊட்டியில் எப்போதும் வாகன நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மேலும் ஒருசில மாடுகள், சுற்றுலா பயணிகளை முட்ட வருகின்றன. எனவே அவர்கள் ஒருவித அச்சத்துடன் வெளியே சென்று திரும்ப வேண்டி உள்ளது.
ஊட்டி சாலையில் கால்நடைகளின் கழிவுகள் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. ஊட்டி குளிர்பிரதேசம் என்பதால் இங்கு மூடுபனி இருக்கும். பக்கத்தில் வந்தால் தான், எதிரில் நிற்பது யார் என்பது தெரிய வரும். ஊட்டி சாலையில் திரியும் கால்நடைகளால், வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
கால்நடைகளும் படுகாயம் அடைகின்றன. இதுதவிர ரோட்டில் திரியும் கால்நடைகள் வேறுவழியின்றி சாலையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு வருகின்றன. இதனால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே ஊட்டி சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை போக்குவரத்து ரோட்டில் திரியவிடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளருக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
அதன்பிறகும் போக்குவரத்து சாலையில் கால்நடைகளின் நடமாட்டம் குறையவில்லை. எனவே நகராட்சி ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஊட்டி ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து, மார்க்கெட் பகுதியில் கட்டி வைத்தனர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி கால்நடைகளை மீட்டு செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் எவரும் அபராதம் செலுத்த முன்வரவில்லை. இதற்கிடையே ஊட்டி மார்க்கெட் பகுதியில் அடைத்து வைத்து இருந்த கால்நடைகளை மாநகராட்சியால் சரிவர பராமரிக்க முடியவில்லை. எனவே அவை வேறுவழியின்றி திறந்து விடப்பட்டன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊட்டியில் மார்க்கெட், பஸ் நிலையம், காபிஹவுஸ் சதுக்கம் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் நடமாட்டம் அதிகம் தென்படுகிறது. இதேபோல ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலை, ஹில்பங்க், பைக்காரா, தலைகுந்தா, பைன் பாரஸ்ட் ஆகிய பகுதிகளில் மாடுகள் உடன் குதிரைகளும் சர்வசாதாரணமாக நடுரோட்டில் ஹாயாக படுத்து கிடப்பதை பார்க்க முடிகிறது. எனவே ஊட்டியில் சுற்றி திரியும் கால்நடைகளின் தொல்லைக்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து ஊட்டி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டியை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆனாலும் இவற்றுக்கு அவர்களால் உரிய நேரத்தில் தீனி போட முடியவில்லை.
எனவே கால்நடைகளை தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விட்டு விடுகின்றனர். காலை-மாலை நேரங்களில் மட்டும் பசு மாடுகளை ரோட்டில் இருந்து வீட்டுக்கு கூட்டிசென்று பால் கறந்து கொள்கின்றனர். அதன்பிறகு அவர்கள் பசுமாடுகளை கண்டுகொள்வது இல்லை.
ஊட்டியை சேர்ந்த விவசாயிகள் மலைக்காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்காக குதிரைகளை வளர்த்து வருகின்றனர். அறுவடைகாலம் முடிந்த பிறகு, குதிரைகள் அப்படியே விடப்படுகின்றன. இதனால் அவை சாலையில் அனாதையாக திரியும் நிலை ஏற்பட்டு உள்ளது.போக்குவரத்து சாலைகளில் கால்நடைகளை திரிய விடாமல் வீட்டில் கட்டிவைத்து வளர்க்க வேண்டும். ஆனால் இங்கு வசிக்கும் பலர் அப்படி செய்வது இல்லை. எனவே அவை வேறுவழியின்றி போக்குவரத்து ரோட்டில் சுற்றி திரிகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊட்டி ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து மார்க்கெட்டில் கட்டி வைத்து அபராதம் விதிக்க முயன்றோம். ஆனால் எவரும் கால்நடைகளை மீட்க வரவில்லை. எனவே அவற்றை மீண்டும் அவிழ்த்துவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே ஊட்டி சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அங்கு கொண்டு சென்று பராமரிப்பது என்று முடிவு செய்து உள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர்.
- சில சுற்றுலா பயணிகள் மது அருந்தியும் பாட்டில்களை உடைத்தும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வனத்துறையினர் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுக்கின்றனர்.
அரவேணு,
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீர்வீழ்ச்சியின் காட்சி முனை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சில சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அடர்ந்த வனப்பகுதியில் சென்று கடந்து தனியார் தேயிலை தோட்டம் வழியாக நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்கின்றனர்.
அங்கு அவர்கள் ஆபத்தை உணராமல் நீர் வீ்ழ்ச்சி பகுதியில் குளித்து வருகின்றனர். சில சுற்றுலா பயணிகள் மது அருந்தியும் பாட்டில்களை உடைத்தும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் சுழலில் சிக்கி பலர் இறந்துள்ளனர். இந்நிலையில் அந்தபகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி குளிப்பது மன வேதனை அளிக்கிறது என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் அங்கு வனவிலங்குகள் அதிகமாக இருந்து வருகிறது. திடீரென சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து நேரிடவும் வாய்ப்பு உள்ளது.
இதனை மனதில் கொண்டு வனத்துறையினர் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுக்கின்றனர்.
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- மெக்ஐவா் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தாா்.
ஊட்டி,
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகள் அப்போது தொடங்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு 1867-ல் பணி நிறைவடைந்தது.
சுமாா் 19 ஆண்டுகள் அயராது உழைத்து அரசு தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக திகழ்ந்த மெக்ஐவா் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தாா்.
ஊட்டியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் ஆலயத்தில் அவரது நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு நாளில் தோட்டக்கலைத் துறை சாா்பில் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவருடைய 147-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்க ப்பட்டது. இதையொட்டி தோட்டக் கலைத்துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி மற்றும் அதிகாரிகள் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் ஆலய பங்குத் தந்தை சிறப்புப் பிராா்த்தனை நடத்தினாா்.
- மலை ரெயில் தடம் புரண்டது தொடர்பாக விசாரணை நடத்த சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து 3 அதிகாரிகள் குன்னூருக்கு வந்தனர்.
- தடம்புரண்ட பெட்டியில் ஏதாவது குறைபாடுகள் இருந்தா? என்பதையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குன்னூர்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இந்த ரெயிலில் பயணிக்க விரும்புவார்கள்.
தற்போது கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் இந்த மாதம் இறுதி வரை மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்கின்றனர்.
நேற்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 174 சுற்றுலா பயணிகளுடன் மலை ரெயில் புறப்பட்டது. மலை ரெயில் குன்னூர் வந்தடைந்ததும், சிறிது நேரம் நின்றுவிட்டு, மாலை 3.30 மணிக்கு குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டது.
குன்னூரில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில் திடீரென மலை ரெயிலின் கடைசி பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டது.
இதனை அந்த பெட்டியில் இருந்த பிரேக்மேன் பார்த்து சத்தம் போடவே ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக நிறுத்தி விட்டார். இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்
தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மலை ரெயிலை தொடர்ந்து இயக்குவதில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு பஸ் மூலமாக மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பொக்லைன் மற்றும் கிரேன் மூலம் பெட்டிகளை மீட்கும் பணி நடந்தது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெட்டிகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்தது.
தற்போது மலைப்பாதையில் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் இன்று காலை வழக்கம் போல மலைரெயில் இயங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம் போல குன்னூருக்கு இன்று காலை மலைரெயில் சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இதேபோல் குன்னூர்-ஊட்டி மலை ரெயிலும் இயக்கப்பட்டது.
இதற்கிடையே மலை ரெயில் தடம் புரண்டது தொடர்பாக விசாரணை நடத்த சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து 3 அதிகாரிகள் குன்னூருக்கு வந்தனர்.
அவர்கள் இன்று காலை ரெயில் நிலையம் சென்றனர். அங்கு ரெயில் தடம் புரண்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ரெயில் நிலையத்திற்கு வந்து, அங்கு ரெயில் தடம் புரண்டபோது ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், ரெயில் என்ஜின் டிரைவர், பிரேக் மேன், பொறியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சிக்னலில் ஏதும் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரித்தனர். மேலும் தடம்புரண்ட பெட்டியில் ஏதாவது குறைபாடுகள் இருந்தா? என்பதையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அந்த சம்பவத்தின் கோர முகடுகள் மறைவதற்குள் தற்போது நீலகிரியில் மலைரெயில் தடம் புரண்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
நீலகிரி:
ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. மலை ரெயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.
- சுற்றுலா பயணிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சகஜமாக பேசிய பேடி சென்றார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி பகுதிக்கு செல்கிறார்.
ஊட்டி:
கவர்னர் ஆர்.என். ரவி 7 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 3-ந் தேதி தனது மனைவியுடன் நீலகிரிக்கு வந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் தொடங்கி வைத்தார்.
கடந்த 6-ந் தேதி ஊட்டி தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சென்றார். அங்கு இயற்கை காட்சிகளையும், அதன் அழகினையும் கண்டு ரசித்தார்.
நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் ஊட்டி ரெயில் நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து மலை ரெயிலில் குன்னூர் சென்றார்.
அப்போது ஊட்டி-குன்னூர் இடையே கேத்தி பள்ளத்தாக்கின் இயற்கை காட்சி, படகு இல்லம், குகை பகுதிகளை கடந்து ரெயில் சென்றதை பார்த்து பரவசம் அடைந்தார். மேலும் நீலகிரியின் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்தார்.
அப்போது சுற்றுலா பயணிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சகஜமாக பேசியபடி சென்றார். மேலும் குன்னூர் ரெயில் நிலையம் சென்றதும், ரெயில்வே ஊழியர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி பகுதிக்கு செல்கிறார். அங்குள்ள மீன் பண்ணை, அவலாஞ்சி மின் நிலையம் உள்ளிட்டவற்றையும் கவர்னர் பார்வையிடுகிறார்.
தொடர்ந்து அவலாஞ்சி அணைக்கு சென்று, அணையின் அழகினையும், அதனை சுற்றியுள்ள காட்டின் இயற்கை காட்சிகளையும் கவர்னர் பார்த்து ரசிக்கிறார். கவர்னர் வருகையையொட்டி அங்கு வனத்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஊட்டி,
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குன்னூரில் உள்ள சகாயமாதா முதியோர் இல்லத்தில் நகர திமுக சார்பில் கழக செயலாளர் ராமசாமி தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், ஜாகிர், குமரேசன், தி.மு.க. பிரமுகரும், சமூகசேவகருமான கோவர்தணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பா.ஜனதா எம்.பி பிரிட்ஜ் பூசன் சரண்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்,
- மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தேர்தலை ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக நடத்த வேண்டும்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் சீண்டலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் (வாகன பிரிவு) தலைவர் சுப்பிரமணி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி மணி. இந்திய மாணவர் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் யோகராஜ், இந்திய பொதுவுடமை மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மன்னரசன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், இணைச் செயலாளர் வெங்கட், பொருளாளர் ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜனதா எம்.பி பிரிட்ஜ் பூசன் சரண்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்,
மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தேர்தலை ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் அதிகாரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.
- புகைப்படம் எடுத்தவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- வனப்பகுதியில் அத்துமீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர், கோவைக்கு 3-வது போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள், கெத்தை வழியாக கோவைக்கு சென்று வருகின்றன. கோவையில் இருந்தும் தினசரி 4 தடவைகள் மஞ்சூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார்-சுற்றுலா வாகனங்களும் சென்று வருகிறது.
மஞ்சூர் போக்குவரத்து வழித்தடத்தில் உள்ள கெத்தை, அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு பழ மரங்கள் அதிகம் உண்டு. எனவே இங்கு பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வன விலங்குளை பார்க்க முடியும். அந்த நேரங்களில் சாலையோரமாக திரியும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இதற்காக அவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துகின்றனர். ஒருசிலர் வனவிலங்குகளை நேரில் கண்ட பிரமிப்பில், அச்சத்துடன் கூச்சலிடுகின்றனர்.
இது விலங்குகளுக்கு தொந்தரவு தருகிறது. எனவே முள்ளி வழியாக, சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த வாகனங்கள் காரமடை மேட்டுப்பாளையம், காட்டேரி வழியாக ஊட்டிக்கு திருப்பி விடப்படுகிறது.
எனவே குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர் வழியாக வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் வழித்தடத்தில் தற்போது 6 காட்டு யானைகள் கெத்தை பகுதியில் சாலையோரம் முகாமிட்டு உள்ளன. எனவே அவற்றை சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
எனவே அவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் சுற்றுலா பயணிகள் சாலையை கவனமாக பயன்படுத்தி, தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதனை விடுத்து வனப்பகுதியில் அத்துமீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் கிலோ ஆகும்.
- மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும்
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் கமர்சியல் சாலை, பூங்கா சாலை, லோயர் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அதிகம் உள்ளன. இங்கு தூய்மைப்பணியாளர்கள் அதிகாலை, இரவு நேரங்களில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
அங்கு பழத்தோல், முட்டை ஓடுகள், காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள் ஆகிய மக்கும் குப்பைகள், பிளாஸ்டிக், பாட்டில் உள்ளிட்ட மக்காத குப்பைகள், மருந்து மாத்திரைகள், ஊசி, சானிட்டரி நாப்கின் போன்ற தீங்கு விளைவிக்கும் குப்பைகள் ஆகியவை 3 வகைளில் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.
ஊட்டியில் தினமும் சராசரியாக சுமார் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. கோடை சீசனில் கடந்த 2 மாதங்களில் மட்டும் தினமும் 24 லட்சம் கிலோ குப்பைகள் வீதம் சேகரிக்கப்பட்டு உள்ளது.
இதில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் கிலோ ஆகும். இந்த நிலையில் ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளில் ஒருசிலர் சமூக பொறுப்பின்றி குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். எனவே அவற்றை தரம் பிரித்து சேகரிக்க அதிக நேரம் ஆகிறது.
எனவே தூய்மை பணியாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று குப்பைகளை சேகரிக்க கால தாமதம் ஆகிறது அதிலும் குறிப்பாக ஊட்டியின் முக்கிய வர்த்தக பகுதிகளான மெயின்பஜார் அப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் பிரிக்கப்படாத குப்பைகள் குவிந்து கிடப்பதை பார்க்க முடிகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
- சோலார் மட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை இரைதேடி தேயிலை தோட்டத்துக்குள் சுற்றி திரிந்தது.
- ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெரும்பாலான பகுதிகள், காட்டுப்பகுதியில் அமைந்து உள்ளது. இது ஈரோடு மாவட்டம் வரை பரந்து விரிந்து உள்ளது.
இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்ெடருமை, மான் போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் காட்டெருமை, கரடி ஆகியவை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டது.
இந்த நிலையில் கோத்தகிரி அருகில் உள்ள சோலார் மட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை இரைதேடி தேயிலை தோட்டத்துக்குள் சுற்றி திரிந்து உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலை தளத்தில் பதிவு செய்து உள்ளார்.
கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஒரு சிறுத்தை இரைதேடி முகாமிட்டு உள்ள சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வனத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுபோன்று வன விலங்குகளும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது குடியிருப்பு வாசிகளை கலக்கமடைய செய்துள்ளது. இதில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த தேயிலை தோட்டத்திற்குள்ளே உணவு தேடி சுற்றிவந்துள்ளது.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
- நீலகிரியில் 60 சதவீத சிறுதேயிலை விவசாயிகள் உள்ளனர்.
- தரம் குறைந்த தேயிலை, தவறான குறியீடு உள்பட 32 வழக்குகள் பதிவாகியுள்ளன.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் உப்பாசி கூட்டரங்கில் தேயிலை வாரியம் சார்பில் விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
இதில் அதிகாரிகள் தரப்பில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார், மாவட்ட கலெக்டர் அம்ரித், இண்கோ சர்வ் முதன்மை செயல் அதிகாரி மோனிக்காராணா, நீலகிரி தேயிலை சங்கங்கள் சார்பில் நெலிகொலு சிறுவிவசாயிகள் மேம்பாட்டு சங்கம், மலை மாவட்ட விவசாயிகள் சங்கம், சிறுதேயிலை விவசாயிகள் சங்கம், தேயிலை உற்பத்தியாளர் சங்கம், நீலகிரி தேயிலை உற்பத்தியாளர் சங்கம், நீலகிரி வயநாடு சங்கம், தேயிலை தரகர்- ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே சிறுதேயிலை விவசாயிகள் அதிகம் உள்ள மாவட்டம் நீலகிரி. இங்கு 60 சதவீதம் சிறுதேயிலை விவசாயிகள் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் தேயிலை விற்பனை சந்தையில் சிறப்பாக செயல்பட்டு சிறந்த தரத்துடன் அதிக லாபம் பெற முடியும். நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா, தேயிலை ஆகிய இரண்டும் கண்கள் ஆகும்.
எனவே அங்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.150 கோடி மதிப்பில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். பொதுமக்களின் வாழ்வாதாரமும் உயரும். நீலகிரியில் கலப்பட தேயிலைத்தூள் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வு நடத்தி உள்ளனர். இந்த வகையில் 11 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 6 வழக்குகளில் தொடர்பு உடையவர்களுக்கு ரூ.1.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர தரம் குறைந்த தேயிலை, தவறான குறியீடு உள்பட 32 வழக்குகள் பதிவாகி, அதில் 16 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.52,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கலப்பட தேயிலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சாரிபில் தேயிலை வியாபா ரிகளின் கோரிக்கைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.






