என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
- சில சுற்றுலா பயணிகள் மது அருந்தியும் பாட்டில்களை உடைத்தும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வனத்துறையினர் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுக்கின்றனர்.
அரவேணு,
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீர்வீழ்ச்சியின் காட்சி முனை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சில சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அடர்ந்த வனப்பகுதியில் சென்று கடந்து தனியார் தேயிலை தோட்டம் வழியாக நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்கின்றனர்.
அங்கு அவர்கள் ஆபத்தை உணராமல் நீர் வீ்ழ்ச்சி பகுதியில் குளித்து வருகின்றனர். சில சுற்றுலா பயணிகள் மது அருந்தியும் பாட்டில்களை உடைத்தும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் சுழலில் சிக்கி பலர் இறந்துள்ளனர். இந்நிலையில் அந்தபகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி குளிப்பது மன வேதனை அளிக்கிறது என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் அங்கு வனவிலங்குகள் அதிகமாக இருந்து வருகிறது. திடீரென சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து நேரிடவும் வாய்ப்பு உள்ளது.
இதனை மனதில் கொண்டு வனத்துறையினர் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுக்கின்றனர்.






