search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூர் மலை ரெயில் தடம் புரண்டது எப்படி?- ரெயில் என்ஜின் டிரைவர், ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை
    X

    குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான மலைரெயில் தடம் புரண்டு, தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி நிற்பதை காணலாம்.

    குன்னூர் மலை ரெயில் தடம் புரண்டது எப்படி?- ரெயில் என்ஜின் டிரைவர், ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை

    • மலை ரெயில் தடம் புரண்டது தொடர்பாக விசாரணை நடத்த சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து 3 அதிகாரிகள் குன்னூருக்கு வந்தனர்.
    • தடம்புரண்ட பெட்டியில் ஏதாவது குறைபாடுகள் இருந்தா? என்பதையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    குன்னூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இந்த ரெயிலில் பயணிக்க விரும்புவார்கள்.

    தற்போது கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் இந்த மாதம் இறுதி வரை மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்கின்றனர்.

    நேற்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 174 சுற்றுலா பயணிகளுடன் மலை ரெயில் புறப்பட்டது. மலை ரெயில் குன்னூர் வந்தடைந்ததும், சிறிது நேரம் நின்றுவிட்டு, மாலை 3.30 மணிக்கு குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டது.

    குன்னூரில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில் திடீரென மலை ரெயிலின் கடைசி பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டது.

    இதனை அந்த பெட்டியில் இருந்த பிரேக்மேன் பார்த்து சத்தம் போடவே ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக நிறுத்தி விட்டார். இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்

    தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மலை ரெயிலை தொடர்ந்து இயக்குவதில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு பஸ் மூலமாக மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பொக்லைன் மற்றும் கிரேன் மூலம் பெட்டிகளை மீட்கும் பணி நடந்தது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெட்டிகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்தது.

    தற்போது மலைப்பாதையில் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் இன்று காலை வழக்கம் போல மலைரெயில் இயங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம் போல குன்னூருக்கு இன்று காலை மலைரெயில் சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இதேபோல் குன்னூர்-ஊட்டி மலை ரெயிலும் இயக்கப்பட்டது.

    இதற்கிடையே மலை ரெயில் தடம் புரண்டது தொடர்பாக விசாரணை நடத்த சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து 3 அதிகாரிகள் குன்னூருக்கு வந்தனர்.

    அவர்கள் இன்று காலை ரெயில் நிலையம் சென்றனர். அங்கு ரெயில் தடம் புரண்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து ரெயில் நிலையத்திற்கு வந்து, அங்கு ரெயில் தடம் புரண்டபோது ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், ரெயில் என்ஜின் டிரைவர், பிரேக் மேன், பொறியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிக்னலில் ஏதும் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரித்தனர். மேலும் தடம்புரண்ட பெட்டியில் ஏதாவது குறைபாடுகள் இருந்தா? என்பதையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    அந்த சம்பவத்தின் கோர முகடுகள் மறைவதற்குள் தற்போது நீலகிரியில் மலைரெயில் தடம் புரண்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×