என் மலர்
நீலகிரி
- 1 மணி நேரத்திற்கும் மேலாக யானை சாலையிலேயே சுற்றி திரிந்தது.
- யானை சென்ற பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஊட்டி:
தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அமைந்துள்ளது.
கூடலூரில் இருந்து தொரப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலம் மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை ஆண் காட்டு யானை சாலையின் நடுவே நின்று கொண்டது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. 1 மணி நேரத்திற்கும் மேலாக யானை சாலையிலேயே சுற்றி திரிந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிகள் விரட்டினர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. யானை சென்ற பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தமிழ்நாடு-கர்நாடகா தேசிய நெடுஞ்சாலையில் சாலையை யானை வழி மறித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
- கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில்கள் நிறைந்தும், சுற்றுலா தலங்கள் நிறைந்தும் காணப்படும் பகுதியாகும்.
இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.
குறிப்பாக ஏப்ரல், மே உள்ளிட்ட கோடை மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனையொட்டி ஆண்டுதோறும் கோடை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடைவிழா கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி பழ கண்காட்சியுடன் முடிவடைந்து விட்டது.
கோடைவிடுமுறை முடிந்த பின்னரும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று கூட விடுமுறையை கழிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்திருந்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு மலர் மாடத்தில் காட்சி வைக்கப்பட்டு இருந்த பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். அதன் பின்னணியில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுதவிர சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகைக்குள் சென்று பல்வேறு வகையான பெரணி செடிகளை அருகில் சென்று பார்த்து கண்டு ரசித்து செல்கின்றனர். இதே போன்று ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் தலையாகவே காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நேற்று ஊட்டி சாலை, குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை, தொட்டபெட்டா மலைசிகரம் செல்லும் சாலை, தாவரவியல் பூங்கா சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் மெல்ல மெல்லவே அடியெடுத்து வாகனத்தை ஓட்ட முடிந்தது.
கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
- பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்ற மாவட்ட நிா்வாகம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை
- கால்நடையை இழந்துள்ள விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் எடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பை முறையாக அகற்றப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பள்ளி, இளித்தொரை, பெட்டட்டி ஆகிய பகுதிகளில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குப்பைக் கழிவுகளை உண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்கதையாகி உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் திடீரென இறந்துபோன பசுவை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அதன் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை பார்த்தனர். உடனடியாக கால்நடை டாக்டர்கள் அதனை அகற்றினர்.
இதுகுறித்து குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவா் மனோகரன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில்,
பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்ற மாவட்ட நிா்வாகம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதையே இது மாதிரியான கால்நடைகளின் இறப்புகள் காட்டுகின்றன. இதற்கு காரணமானவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கால்நடையை இழந்துள்ள விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
- மண்புழு உரம் தயாரித்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
- இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாநில அளவிலான காய்கறி பயிர்களில் உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் அமைத்தல் குறித்த பயிற்சி கோவையில் நடைபெற்றது.
இதில் குளித்தட்டு முறையில் நாற்றங்கால் அமைத்தல், நிழல் வலை கூடாரத்தில் நாற்றங்கால் அமைத்தல், நாற்றங்காலில் பயன்படுத்தபடும் அங்கக இடுபொருட்கள் குறித்து வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பான சூழலில் காய்கறி சாகுபடி, நுண்ணீர் பாசனத்தின் மூலம் நீர் மற்றும் உரங்களை வழங்குதல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சர்க்கியூட் பஸ்களில் பெரியவர்களுக்கு ரூ.100 , குழந்தைகளுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
- போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது.
ஊட்டி,
கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
சுற்றுலா பயணிகள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளாக சர்க்கியூட் பஸ் சேவை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது.
குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. சர்க்கியூட் பஸ்களில் பெரியவர்களுக்கு ரூ.100 , குழந்தைகளுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இம்முறை சீசன் தொடக்கத்தில் 4 பஸ்கள் இயக்கப்பட்டன.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தை தொடர்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்ட மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் 40 பஸ்கள் வரை இயக்கப்பட்டது.
தொடர்ந்து, இம்முறை பள்ளிகள் திறக்க தாமதம் ஏற்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்ததால், தொடர்ந்து சர்க்கியூட் பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று மாலை வரை இந்த சர்க்கியூட் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
கடந்த 2 மாதங்களில் சர்க்கியூட் பஸ்கள் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளனர்.
இதன்மூலம், போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது. நேற்றும் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக சர்க்கியூட் பஸ்கள் மற்றும் பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில், ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
- நிகழ்ச்சிக்கு வனசரகர் சஞ்சீவி தலைமை தாங்கினார்.
- பொம்மை கலைகுழுவினரின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊட்டி,
கூடலூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கூடலூர் வன கோட்ட உதவி வன பாதுகாவலர் வழி காட்டுதலின் படி பந்தலூர் வன சரகத்தில் மனித விலங்கு மோதல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு வனசரகர் சஞ்சீவி தலைமை தாங்கினார். வனவர் செல்லதுரை, வனக்காப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யானைகள் மனித மோதலை பற்றியும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் பொம்மை கலைகுழுவினரின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொன்னுர், கைதக்கொல்லி, தேவாலா அட்டி, வாழவயல், கண்ணா கடை, டேன்டீ 4, அத்திமாநகர், கூமூலா, மாங்கோ ரேஞ்சு ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வேட்டை தடுப்பு காவலர்கள் யானை கண்காணிப்பு குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள், தேயிலை தோட்டதொழிலாளர்கள், வட மாநில தொழிலாளர்கள், ஜீப் ஆட்டோ டிரைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- யானை சுற்றி திரிந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது.
இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் மலைப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. மலைப்பகுதிகளில் உள்ள தேயிலை, காபி தோட்டங்களில் யானை கூட்டங்கள் முகாமிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புகள், சாலை பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பகல் நேரங்களில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை நேற்று இரவு மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தட்டப்பள்ளம் மலைப்பாதையில் சுற்றி திரிந்தது.
காட்டு யானை 2 மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே அங்கும் இங்குமாக உலா வந்து வாகனங்கள் செல்ல வழி விடாமல் நீண்ட நேரம் சாலையிலேயே நின்றது. இதனால் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒற்றை காட்டு யானை நீண்ட நேரம் சுற்றி திரிந்த தால் வாகன ஓட்டிகள் என்ன செய்வ தென்று தெரியாமல் வாகனத்தி லேயே 2 மணி நேரத்திற்கு மேலாக முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தொடர்ந்து தட்டப்பள்ளம் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவது வாடிக்கையாக இருக்கும் நிலையில் வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மங்குஸ்தான் பழம் மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும்.
- தென்னிந்தியாவில் மலைப்பகுதிகளில் தோட்ட பயிராக மங்குஸ்தான் பழத்தை வளர்க்கின்றனர்.
ட்டி,
மலை மாவட்டமான நீலகிரியில் தற்போது பரவலாக மங்குஸ்தான் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் மங்குஸ்தான் பழங்கள் மார்கெட் கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் விற்கும் அளவிற்கு மக்களின் விருப்பத்திற்குரிய பழமாக மாறி உள்ளது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். மங்குஸ்தான் பழத்தில் எண்ணற்ற சத்துகள் உள்ளன.
பொதுவாக மலைவாசஸ்தலங்களில் விளையும் பழம் மங்குஸ்தான். இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப் பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். தோல் பகுதியை பிளந்தால் 3 அல்லது 4 சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் விரும்பி சாப்பி டப்படும் ஒரு பழமாகவும் மங்குஸ்தான் பழம் இருக்கிறது. இப்ப ழத்தின் தாயகம் மலேசியா ஆகும்.
ஆரம்பகாலத்தில் தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகம் பயிரிடப்பட்டு வந்தன. தற்போது மங்குஸ்தான் இந்தியாவிலும் பயிரிடப்பட்டு வருகின்றது.
பல்வேறு நன்மைகள்
இப்பழம் மிகவும் சுவையுடன் கூடிய ஆரோக்கியம் நிறைந்ததாகவும் பல்வேறு நன்மைகளை அளிப்பதாகவும் உள்ளது. அதிகமான வெப்ப காலங்களில் உடலில் ஏற்படும் அதிக தாகம், அதிக வெப்பம் போன்ற வற்றை தீர்க்கிறது. இந்த பழங்கள் ஊட்டியில் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் குவித்து வைத்து விற்கபடுகின்றன. பலர் சுவைக்காகவும் பலர் இதன் பயன்கள் அறிந்தும் வாங்கி செல்கின்றனர்.
- 20 அடி பள்ளத்தில் ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்த டிரைவர் நவீன்குமாா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நோயாளி ஒருவரை அழைத்துக் கொண்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தனா். ஆஸ்பத்திரியில் நோயாளியை சோ்த்து விட்டு மீண்டும் மசினகுடிக்கு ஆம்புலன்ஸ் திரும்பி வந்து கொண்டிருந்தது. கல்லட்டி மலைப் பாதையில் 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் நவீன்குமாா் (39), மருத்துவ உதவியாளா் பிரகாஷ் (29) ஆகியோா் காயமடைந்தனா். இதில் டிரைவர் நவீன்குமாா் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாகன நெரிசல் ஏற்பட்டு காா்பன் வாயு அதிக அளவில் வெளியாகிறது.
- 80 சதவீத மரக் கன்றுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக வளா்ந்துள்ளன.
ஊட்டி,
ஊட்டியில் காா்பன் மாசில்லா மாவட்டம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலா் சுப்ரியா சாஹூ கூறியதாவது: நீலகிரியில் வனப்பகுதி அதிகம் உள்ளதாலும் பல்லுயிா் பாதுகாப்பு மண்டலமாக இருப்பதாலும் இந்த மாவட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே காா்பன் மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது நடைபெற்ற மாநாட்டில் சுற்றுசூழல் வல்லுநா்கள், சா்வதேசப் பிரமுகா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அவா்கள் சில பரிந்துரைகளை வழங்கி யுள்ளனா். அதில், நீலகிரி மாவட்டத்துக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு காா்பன் வாயு அதிக அளவில் வெளியா கிறது. இதைக் கட்டுப்படுத்த மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது, வனப்பகுதியை அதிக ரிப்பது, பிளாஸ்டிக்கை தவிா்ப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட் டுள்ளன. நீலகிரி மாவட் டத்தில் எவ்வளவு காா்பன் வாயு வெளியேறுகிறது, அதை எப்படிக் குறைப்பது என்ற ஒருங்கிணைந்த திட்டம் 3 மாதங்களுக்குள் தயாரிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் கடந்த ஆண்டு நடப்பட்ட 3 கோடி மரக்கன்றுகளில் 80 சதவீத மரக் கன்றுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக வளா்ந்துள்ளன. தமிழகத்தில் 40 சதுர கிலோ மீட்டா் பரப்பில் உள்ள சதுப்பு நிலக் காடுகள் பாதுகாக் கப்பட்டுள்ளன.
தற்போது புதிதாக 14 மாவட்டங்களில் 60 சதுர கிலோ மீட்டா் பரப்பில் உள்ள சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து அதைப் பாதுகாக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா். இதில் சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் இயக்குநா் தீபக் பில்ஜி, கலெக்டர் அம்ரித், தமிழக அரசின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- மரக்கன்று நடும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
- மரம் நாட்டுக்கும், வீட்டுக்கும் ஒரு முக்கியமான ஒன்றாகும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், தும்ம னட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுவீடு கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத் தார்.
பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்' என்ற கலைஞரின் சொல் லிற்கிணங்க, தமிழக முதல்-அமைச்சர், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றார். இதனால் மாநில நெடுஞ்சா லைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-2024-ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க நாளான அன்று தமிழக முதல்-அமைச்சர் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகள் நடும் பணியானது ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்திகிரி மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் மகாகனி மரக்கன்றுகள், நாவல் மரக்கன்றுகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வளரக்கூடிய மரக்கன்றுகள் என மொத்தம் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் மரங்களை வளர்ப்பதின் மூலம் தேவையான காற்று கிடைக்கிறது. காற்று கிடைப்பதன் மூலம் நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. மரம் நாட்டுக்கும், வீட்டுக்கும் ஒரு முக்கியமான ஒன்றாகும். ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொரு வரும் மரத்தினை வளர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜூ, உதவி பொறியாளர் ஸ்டாலின், ஊட்டி வட்டாட்சியர் ராஜ சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன.
- கால்நடைகளை ரோட்டில் விட்டால் சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம்
ஊட்டி,
தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாதலங்களில் குறிப்பிட்டத்தக்கது ஊட்டி, இங்கு உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு சவாரி இல்லம், காட்சி முனையம் மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகள் ஆகியவை சுற்றுலாபயணிகளை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.
சமவெளி பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் ஊட்டியில் எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையே நிலவும். இதனால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்து, அங்கு உள்ள குளிர்ச்சியான சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவித்து செல்கிறார்கள். இதனால் அங்கு கோடைகாலம் மட்டுமின்றி எப்போதும் கூட்டம் அலைமோதும்.
எனவே ஊட்டியில் எப்போதும் வாகன நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மேலும் ஒருசில மாடுகள், சுற்றுலா பயணிகளை முட்ட வருகின்றன. எனவே அவர்கள் ஒருவித அச்சத்துடன் வெளியே சென்று திரும்ப வேண்டி உள்ளது.
ஊட்டி சாலையில் கால்நடைகளின் கழிவுகள் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. ஊட்டி குளிர்பிரதேசம் என்பதால் இங்கு மூடுபனி இருக்கும். பக்கத்தில் வந்தால் தான், எதிரில் நிற்பது யார் என்பது தெரிய வரும். ஊட்டி சாலையில் திரியும் கால்நடைகளால், வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
கால்நடைகளும் படுகாயம் அடைகின்றன. இதுதவிர ரோட்டில் திரியும் கால்நடைகள் வேறுவழியின்றி சாலையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு வருகின்றன. இதனால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே ஊட்டி சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை போக்குவரத்து ரோட்டில் திரியவிடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளருக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
அதன்பிறகும் போக்குவரத்து சாலையில் கால்நடைகளின் நடமாட்டம் குறையவில்லை. எனவே நகராட்சி ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஊட்டி ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து, மார்க்கெட் பகுதியில் கட்டி வைத்தனர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி கால்நடைகளை மீட்டு செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் எவரும் அபராதம் செலுத்த முன்வரவில்லை. இதற்கிடையே ஊட்டி மார்க்கெட் பகுதியில் அடைத்து வைத்து இருந்த கால்நடைகளை மாநகராட்சியால் சரிவர பராமரிக்க முடியவில்லை. எனவே அவை வேறுவழியின்றி திறந்து விடப்பட்டன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊட்டியில் மார்க்கெட், பஸ் நிலையம், காபிஹவுஸ் சதுக்கம் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் நடமாட்டம் அதிகம் தென்படுகிறது. இதேபோல ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலை, ஹில்பங்க், பைக்காரா, தலைகுந்தா, பைன் பாரஸ்ட் ஆகிய பகுதிகளில் மாடுகள் உடன் குதிரைகளும் சர்வசாதாரணமாக நடுரோட்டில் ஹாயாக படுத்து கிடப்பதை பார்க்க முடிகிறது. எனவே ஊட்டியில் சுற்றி திரியும் கால்நடைகளின் தொல்லைக்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து ஊட்டி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டியை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆனாலும் இவற்றுக்கு அவர்களால் உரிய நேரத்தில் தீனி போட முடியவில்லை.
எனவே கால்நடைகளை தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விட்டு விடுகின்றனர். காலை-மாலை நேரங்களில் மட்டும் பசு மாடுகளை ரோட்டில் இருந்து வீட்டுக்கு கூட்டிசென்று பால் கறந்து கொள்கின்றனர். அதன்பிறகு அவர்கள் பசுமாடுகளை கண்டுகொள்வது இல்லை.
ஊட்டியை சேர்ந்த விவசாயிகள் மலைக்காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்காக குதிரைகளை வளர்த்து வருகின்றனர். அறுவடைகாலம் முடிந்த பிறகு, குதிரைகள் அப்படியே விடப்படுகின்றன. இதனால் அவை சாலையில் அனாதையாக திரியும் நிலை ஏற்பட்டு உள்ளது.போக்குவரத்து சாலைகளில் கால்நடைகளை திரிய விடாமல் வீட்டில் கட்டிவைத்து வளர்க்க வேண்டும். ஆனால் இங்கு வசிக்கும் பலர் அப்படி செய்வது இல்லை. எனவே அவை வேறுவழியின்றி போக்குவரத்து ரோட்டில் சுற்றி திரிகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊட்டி ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து மார்க்கெட்டில் கட்டி வைத்து அபராதம் விதிக்க முயன்றோம். ஆனால் எவரும் கால்நடைகளை மீட்க வரவில்லை. எனவே அவற்றை மீண்டும் அவிழ்த்துவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே ஊட்டி சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அங்கு கொண்டு சென்று பராமரிப்பது என்று முடிவு செய்து உள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர்.






