என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நீலகிரியில் மழை பெய்து வருகிறது.
    • வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

     குன்னூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நீலகிரியில் மழை பெய்து வருகிறது.

    கூடலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

    இந்த மழையால் பல இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு, தேவா்சோலை பேரூராட்சி, புழம்பட்டி பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவரது வீட்டின் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில் அவரது வீடு முழுவதும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை.

    இதேபோல் குன்னூர்-கோத்தகிரி சாலை டாஸ்மாக் குடோன் அருகே மரம் முறிந்து அங்கு நிறுத்தப்பட்ட லாரி மீது விழுந்தது. இதில், லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது.

    மேலும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்பு போக்குவரத்து சீரானது.

    இதற்கிடையே தென் மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில், வீடுகளுக்கு அருகில், பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டவும், விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

    • ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர்.
    • 24 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா உல்லத்தி ஊராட்சியில் பன்னிபுரா, ஏக்குனி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் மலைவேடர் இனத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. இதில் ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர். அப்போது பன்னிபுரா, ஏக்குனி பகுதி மலைவேடர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஏக்குனி பள்ளிக்கூடத்தை காலை 10 மணிக்கு திடீரென முற்றுகையிட்டனர்.

    மேலும் அப்பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை வகுப்புகளில் இருந்து வெளியே அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மலை வேடர் இன மக்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள பழனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மலை வேடர் இன மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 1999-ம் ஆண்டு வரை எங்களுக்கு இந்து மலைவேடர் பழங்குடியினர் என குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் அதன் பின்னர் 24 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்க வில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எங்களின் குழந்தைகள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் படித்து என்ன பயன். லட்சியத்துடன் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது, இதனால் பள்ளிக்கூடங்களில் படிக்கும் எங்கள் குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பங்கள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினர்.

    தகவல் அறிந்த ஊட்டி வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து மலைவேடர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மலை வேடர் இன மக்கள் தெரிவித்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.
    • பலா மரங்களில் உள்ள பலாப் பிஞ்சுகளை உண்பதற்காக யானை சுற்றி திரிகிறது.

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. கோடை சீசன் துவங்கிய நிலையில் இந்த பலா மரங்களில் தற்போது பலாப்பழங்கள் காய்க்கத் தொடங்கி உள்ளன.

    கடந்த மாதம் முதல் சீசன் காரணமாக பலா மரங்களில் பலாக் காய்கள் காய்த்து குலுங்கத் தொடங்கி உள்ளன. பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்துள்ள யானைகள் இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளதுடன், சாலையோரங்களில் உள்ள பலா மரங்களில் உள்ள பலாப் பிஞ்சுகளை உண்பதற்காக கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அடிக்கடி உலா வருகின்றன.

    இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவிற்கு அருகே குட்டியுடன் 2 பெண் யானைகள் நின்றுக் கொண்டிருந்தன.

    அரை மணி நேரம் சாலையில் உலா யானைகளைக் கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தினர். இதன் காரணமாக சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காட்டு யானைகள் குட்டியை பாதுகாப்பாக நடுவில் நிறுத்தி வைத்துக் கொண்டு சாலையோரம் இருந்த செடி,கொடிகளை தின்றுக் கொண்டிருந்தது.

    பின்னர் அந்த யானைகள் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது. யானை அங்கிருந்து சென்ற பின்னரே அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. யானை சாலையில் நின்றதால் அந்த சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் எச்சரிக்கை இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- தற்போது குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதிகளில் பலாப் பழ சீசன் காரணமாக, பழங்களை தின்பதற்காக காட்டு யானைகள் அங்கு முகாமிட்டுள்ளதுடன், சாலைகளில் அடிக்கடி உலா வருகின்றன.

    அவ்வாறு யானைகளைக் கண்டால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவற்றை புகைப்படம் எடுக்க முயற்சி செய்யக் கூடாது. மேலும் அவற்றிற்கு தொல்லை அளிக்கக் கூடாது. ஒலிப்பான் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கறிக்கோழிகளை ஏற்றி லாரி ஒன்று பந்தலூர் பஜாருக்கு வந்து கொண்டு இருந்தது.
    • லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது.

    கூடலூர்

    பந்தலூர் அருகே உள்ள எருமாடு பஜாரில் இருந்து கறிக்கோழிகளை ஏற்றி லாரி ஒன்று பந்தலூர் பஜாருக்கு வந்து கொண்டு இருந்தது.

    நேற்று காலை 5.30 மணி அளவில் பந்தலூர் பஸ்நிலையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதேப்பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் வீட்டின் மீது கவிழ்ந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். லாரி கவிழ்ந்ததில் வீடு பலத்த சேதமடைந்தது. இதுபற்றி அறிந்ததும் பந்தலூர் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கிரேன் வரவழைக்கப்பட்டு வீட்டின் மீது விழுந்து கிடந்த லாரி மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி பந்தலூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்

    • அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தினை பரிட்சார்த்தமாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்.
    • ராகி நார்ச்சத்து, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கிறது.

    ஊட்டி,

    ஊட்டி தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் கூட்டுறவுத்துறை, பொது வினியோக திட்டம், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாவடட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதா வது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது வினியோக திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவின்படி கூட்டுறவுத்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் ஆகியோர் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தினை பரிட்சார்த்தமாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்.

    ராகி நார்ச்சத்து, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கிறது. சிறுதானியங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் சிறந்த தற்காப்பு கருவியாக உள்ளன. எனவே பொதுமக்களிடம் ராகியை வாங்கி பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் பொதுமக்களுக்கு நல்ல தரமான அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எல்லநள்ளியிலிருந்து கேத்தி செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
    • ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    குன்னூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் அவ்வப்போது மிதமானது முதல் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    குன்னூர் நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று மதியம் முதல் பலத்த மழை பெய்தது. இரவிலும் மழை தொடர்ந்ததால் குன்னூர்-கோத்தகிரி சாலை, ஊட்டி சாலை உள்பட முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.

    தொடர் மழைக்கு குன்னூர்-கோத்தகிரி சாலையில் வண்டி சோலை பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனடியாக குன்னூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனிடையே எல்லநல்லி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்து கனமழையால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் எல்லநள்ளியிலிருந்து கேத்தி செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் மழை நின்றவுடன் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

    இதேபோல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக எருமாடு கிராம நிர்வாக அலுவலகம் அருகே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதேபோல் உப்பட்டி, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, சேரம்பாடி, கரியசோலை உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    • சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்
    • சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சியில் உள்ள வாழவயல் குடோன் பகுதியில் இருந்து ஆஷிக் அய்யா வீடு வரை செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக போடப்படாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் அவசர கால தேவைகளுக்காக ஆஸ்பத்திரிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். நெல்லியாலம் நகராட்சியில் தொடர்ந்து சாலையை சீரமைக்க மனு அளித்தும் இதுவரை சாலையை சீரமை க்காமல் காலம் தாழ்த்தி வருவதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் கிராம மக்கள் முடிவு எடுத்து குண்டும் குழியுமாக உள்ள 100 மீட்டர் சாலையை ஒவ்வொரு வீடாக பணம் வசூல் செய்து கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது பள்ளிகள் தொடங்க உள்ளது. மேலும் பருவமழை தொடங்க உள்ளதால் சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவே கிராமத்தினரே சொந்த பணத்தை வைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நெல்லியாளம் நகராட்சியிடம் சாலை போடுவதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. அதனால் தங்கள் சொந்த பணத்தை வைத்து சாலையை புதிதாக அமைத்துள்ளோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மீண்டும் சுழற்சி முறையில் உற்பத்தி செய்யவும் பயன்படுத்த வேண்டும்.
    • தூய்மை பணியில் பல்வேறு அமைப்பினர் பொது மக்கள் பங்கேற்றனர்.

    ஊட்டி,

    உல்லத்தி ஊராட்சி தலைகுந்தா பகுதியில் அனைத்து தரப்பினரும் இணைந்து மாபெரும் தூய்மை பணி முகாமை நடத்தினர். கலெக்டர் அம்ரித் தூய்மைப்பணிகளை தொடங்கி வைத்து தூய்மை பணியினை மேற்கொ ண்டார்.

    இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கையுறை, குப்பைகளை சேகரிக்கும் சாக்குப்பை ஆகியவை வழங்கபட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    தூய்மை பாரத இயக்க த்தின் முக்கிய நோக்கமே ஒட்டுமொத்தமாக சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்தெடுத்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மீண்டும் சுழற்சி முறையில் உற்பத்தி செய்யவும் பயன்படுத்த வேண்டும்.

    எனவே தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் உங்கள் பகுதியில் குப்பைகளை சேகரித்து வைத்தால் அதனை வந்து வாகன ங்களில் எடுத்துச் செல்வா ர்கள். எனவே நீங்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஊர் சுத்தமானால் தான் நாடு சுத்தமாகும். எனவே அனை வரும் குப்பையில்லா நகரை உருவாக்க பாடுபட வேண் டும் என வலியுறு த்தினார்.

    இதில் கோட்டாசியர் துரைசாமி, பேருராட்சி களின் உதவி இயக்குநர் இப்ராகிம் ஷா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ,ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், நந்தகுமார், ஊட்டி நகரா ட்சி சுகாதார அலு வலர் டாக்டர் ஸ்ரீதரன் உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோ ஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

    அனைவரும் இணைந்து சாலை ஓரம் மற்றும் வனப்ப குதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பை களை சேகரித்தனர்.

    இந்த தூய்மை பணியில் பல்வேறு அமைப்பினர் சமூக ஆர்வ லர்கள் பொது மக்கள் தூய்மை பணியா ளர்கள் என திரளானோர் கலந்து கொண்டு தூய்மை பணி யினை மேற்கொ ண்டனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு சேலை- வேட்டி மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது.
    • தேயிலை தோட்ட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெணவுகரை ஊராட்சி கொட்டக்கம்பை, முல்லை நகர், அனந்தகிரி, பாட்டி மட்டம் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்ட பணியாளர்கள் மற்றும் கெணவுக்கரை ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலை- வேட்டி மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கெணவுகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா ஹரிஹரன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்கள் மற்றும் தேயிலை தோட்ட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் கணபதி, ராஜேந்திரன் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தூய்மைப்பணி யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.
    • பொதுமக்கள், ஊழியர்கள் பிளாஸ்டிக்கை ஒழிக்க உறுதிமொழி ஏற்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு ஜெகதளா பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி திட்டத்தில் குடியிருப்பு பகுதி, சிறு குடியிருப்பு பகுதி, தொழிற்சாலை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மருத்துவக் கழிவுகள் கட்டிடக்கழிவுகள் போன்றவற்றை பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களுடன் இணைந்து தூய்மை செய்தனர்.

    மேலும் தூய்மை மக்கள் இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி அருவங்காடு பஸ் நிலையத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணை தலைவர் ஜெய்சங்கர், மற்றும் செயல் அலுவலர் சதாசிவம், 7-வது வார்டு உறுப்பினர் யசோதா, 9-வது மரியராஜன், 12-வது வார்டு உறுப்பினர் மோசஸ், 4-வது வார்டு உறுப்பினர் ஆஞ்சலின், 14-வது வார்டு உறுப்பினர் ராஜலட்சுமி, மற்றும் அலுவலக அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஆகியோர் என் நகரத்தை நாங்கள் தூய்மையாக வைத்துக் கொள்வோம் என உறுதிமொழி ஏற்றனர். மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் போன்ற உறுதி மொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.
    • அத்தனை கோரிக்கைகளும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் தும்பூர் போஜன், தர்மன், ராஜு மற்றும் விவசாயிகள், தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். அப்போது அவர்கள் தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யக் கோரியும், நீண்டகாலமாக தீர்க்கப்படாத தேயிலை விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் விரிவாக எடுத்துக் கூறினர்.அவர்களின் அத்தனை கோரிக்கைகளும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், தேயிலை சாகுபடி செய்யும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் அனைவருக்கும், பாதுகாப்பையும், ஆதரவையும், பா.ஜனதா தொடர்ந்து வழங்கும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்தார். இந்தச் சந்திப்பின்போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் நீலகிரி மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 1 மணி நேரத்திற்கும் மேலாக யானை சாலையிலேயே சுற்றி திரிந்தது.
    • யானை சென்ற பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    ஊட்டி:

    தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அமைந்துள்ளது.

    கூடலூரில் இருந்து தொரப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலம் மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று காலை கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை ஆண் காட்டு யானை சாலையின் நடுவே நின்று கொண்டது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.

    இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. 1 மணி நேரத்திற்கும் மேலாக யானை சாலையிலேயே சுற்றி திரிந்தது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிகள் விரட்டினர்.

    இதனைத் தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. யானை சென்ற பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    தமிழ்நாடு-கர்நாடகா தேசிய நெடுஞ்சாலையில் சாலையை யானை வழி மறித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×