என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குன்னூர்-கோத்தகிரி சாலையில் வண்டிசோலை பகுதியில் ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்து கிடப்பதையும், அதனை தீயணைப்பு துறையினர் வெட்டி அப்புறப்படுத்துவதையும் காணலாம்.
ஊட்டி, குன்னூரில் பலத்த மழை- மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- எல்லநள்ளியிலிருந்து கேத்தி செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
- ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
குன்னூர்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் அவ்வப்போது மிதமானது முதல் பலத்த மழையும் பெய்து வருகிறது.
குன்னூர் நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று மதியம் முதல் பலத்த மழை பெய்தது. இரவிலும் மழை தொடர்ந்ததால் குன்னூர்-கோத்தகிரி சாலை, ஊட்டி சாலை உள்பட முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.
தொடர் மழைக்கு குன்னூர்-கோத்தகிரி சாலையில் வண்டி சோலை பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக குன்னூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதனிடையே எல்லநல்லி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்து கனமழையால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் எல்லநள்ளியிலிருந்து கேத்தி செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் மழை நின்றவுடன் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
இதேபோல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக எருமாடு கிராம நிர்வாக அலுவலகம் அருகே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதேபோல் உப்பட்டி, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, சேரம்பாடி, கரியசோலை உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.






