என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூடலூர்-மைசூர் சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டு யானை
- 1 மணி நேரத்திற்கும் மேலாக யானை சாலையிலேயே சுற்றி திரிந்தது.
- யானை சென்ற பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஊட்டி:
தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அமைந்துள்ளது.
கூடலூரில் இருந்து தொரப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலம் மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை ஆண் காட்டு யானை சாலையின் நடுவே நின்று கொண்டது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. 1 மணி நேரத்திற்கும் மேலாக யானை சாலையிலேயே சுற்றி திரிந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிகள் விரட்டினர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. யானை சென்ற பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தமிழ்நாடு-கர்நாடகா தேசிய நெடுஞ்சாலையில் சாலையை யானை வழி மறித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






