என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 1.40 மணி அளவில் திடீரென அதிபயங்கர சத்தத்துடன் வெடி வெடிப்பது போன்ற சத்தம் ஏற்பட்டது.
    • இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, பரமத்தி, ஒத்தக்கடை, கீரம்பூர், மணியனூர், கந்தம்பாளையம், நல்லூர், பெருங்குறிச்சி, ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், வடகரை யாத்தூர், சோழசிராமணி, கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 1.40 மணி அளவில் திடீரென அதிபயங்கர சத்தத்துடன் வெடி வெடிப்பது போன்ற சத்தம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

    மேலும் ஜன்னல்கள் , கண்ணாடிகள் அதிர்ந்தன. கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உனர்ந்தனர். ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வருவாய்த்துறையி னரிடம் கேட்டபோது அதி வேக ஜெட் விமானம் தாழ்வாக பறந்து செல்லும் போது வழக்கமாக இது போன்ற வெடிச்சத்தம் போல் அடிக்கடி கேட்பதாக தெரிவித்தனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்ப கவுண்டர். இவர் இறந்து விட்டார்.
    • இவருக்கு பட்ட ணம் கலரம்பள்ளியில் உள்ள 2 ஏக்கர் 20 செண்ட் நிலத்தை 1996-ல் ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கு வதற்காக அரசு கையகப் படுத்தியது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்ப கவுண்டர். இவர் இறந்து விட்டார். இவருக்கு பட்ட ணம் கலரம்பள்ளியில் உள்ள 2 ஏக்கர் 20 செண்ட் நிலத்தை 1996-ல் ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கு வதற்காக அரசு கையகப் படுத்தியது.

    அதற்காக அப்போது வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்றும் அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தனர். தற்போது ராசிபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுமார் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தொகையை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதால் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை அமுல்படுத்தா ததால் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து நேற்று கோர்ட்டு ஊழி யர்கள் ஜப்தி செய்ய தாசில்தார் அலுவல கத்திற்குச் சென்றனர்.

    ஆனால் தாசில்தார் சுரேஷ், மாவட்ட கலெக்ட ரிடம் எடுத்துச் சொல்லி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது ஜப்தி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதால் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

    தாசில்தார் அலுவல கத்தை கோர்ட்டு ஊழியர் கள் ஜப்தி செய்ய சென்ற தால் ராசிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளி கிராமம் பிளிக்கல்மேடு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
    • இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளி கிராமம் பிளிக்கல்மேடு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னதாக வீரமரணமடைந்த விவசாய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. போராட்டத்தை மாநில சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் அவினாசி சதீஷ் குமார் தொடங்கி வைத்தார். கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தங்கவேல் சிறப்புரையாற்றினார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வருவாய்துறை வட்டாட்சியர் (திருசெங்கோடு), உதவி இயக்குநர் (வேளாண்மை) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயமணி, கிழக்கு மாவட்ட செயலாளர் உழவர் ஆனந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து போராட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தினர். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மலைக் கிராமங்களுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை.
    • கடந்த 2016-ம் ஆண்டு போதமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை என 3 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை.

    அங்குள்ள மலைவாழ் மக்கள் ராசிபுரம் போன்ற ஊர்களுக்கு கரடு முரடான பாதை வழியாகத்தான் வந்து செல்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு போதமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டது.

    இந்நிலையில் தரை மட்டத்திலிருந்து 6 கி.மீ. உயரத்தில் உள்ள கீழூரில் இயங்கி வந்த டிரான்ஸ்பார்மர் கடந்த 20 நாட் களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

    பழுதடைந்த டிரான்ஸ் பார்மரை மலைவாழ் மக்களே கீழே கொண்டு வந்து மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மின்வாரிய அதிகாரிகள் புதிய ட்ரான்ஸ்பார்மரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு கீழூருக்கு கொண்டு செல்வதற்காக போதமலை அடிவாரத்தில் வைத்திருந்தனர். மலைப்பகுதியில் உள்ள கீழூருக்கு கரடு முரடான பாதையில் கொண்டு செல்வதற்கு போதிய ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று போதமலை அடிவாரத்தில் இருந்து கீழூருக்கு 750 கிலோ எடையுள்ள புதிய டிரான்ஸ்பர்மரை 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தோளில் சுமந்து சென்றனர்.

    வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆர்.எம். துரைசாமி, ராசிபுரம் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர்கள் நாமகிரிப்பேட்டை ரவி, புதுப்பட்டி விக்னேஷ்வரன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகரன், வனிதா உள்பட அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை அனுப்பி வைத்தனர்.

    இன்னும் 3 அல்லது 4 நாட்களில் புதிய டிரான்ஸ்பார்மர் கீழூர் பகுதியில் வைக்கப்பட்டு மின் விநியோகம் நடைபெறும் என்று மின்வாரியத் துறையினர் தெரிவித்தனர். இதனால் 20 நாட்களாக மின் வசதி இல்லாமல் இருந்த கீழூர் பகுதி மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார்.
    • பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்.

    நாமக்கல்:

    பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவராக உள்ளார்.

    அவர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளையராஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சாமி தரிசனம் செய்த மனீந்தர் ஜீத் பிட்டாவுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், சால்வை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் நினைவு பரிசாக ஆஞ்சநேயர் படம் வழங்கப்பட்டது.

    பின்னர் மனீந்தர் ஜீத் பிட்டா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான், ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்வதற்காக நாமக்கல் வந்துள்ளேன். மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, ராமேஸ்வரம் செல்கிறேன். சில அரசியல் கட்சிகள், ராமர் கட்டிய பாலம் இல்லை என சொல்கின்றனர்.

    அது கற்பனை. அவ்வாறு இருந்திருந்தால், அந்த பாலம் உடைந்து விட்டது என கூறுகின்றனர். ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருக்கிறது என்பதை நான் நிரூபிப்பேன். இந்த உடலில் உயிர் இருக்கின்ற வரையில், நான் அதை நிரூபித்துவிட்டுத்தான் செல்வேன்.

    இலங்கைக்கு செல்ல சேது பாலம் கட்டும்போது, ராமருக்கு ஆஞ்சநேயர் எப்படி உறுதுணையாக இருந்தாரோ, அதேபோல், பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 30-ந்தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • கடந்த ஜூலை 1-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆனது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த 30-ந்தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. கடந்த ஜூலை 1-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆனது, 2-ந் தேதி மீண்டும் 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 3-ந்தேதி மேலும் 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.20 ஆனது. 4-ந் தேதி மீண்டும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இன்று அதிரடியாக 30 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 5 நாட்களில் ஒரு முட்டைக்கு 80 பைசா விலை சரிவு ஏற்பட்டதால் கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால், தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகும் நாமக்கல் மண்டலத்தில், கோழிப்பண்ணை தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை-560, பர்வாலா-421, பெங்களூரு-540, டெல்லி-465, ஹைதராபாத்-470, மும்பை-560, மைசூர்-570, விஜயவாடா-450, ஹொஸ்பேட்-500, கொல்கத்தா-520.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 108 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
    • இதில் 120 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் இயக்கப்பட்ட 3 கார்கள், 1 மேக்சி கேப், 3 கனரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    இதில் 120 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் இயக்கப்பட்ட 3 கார்கள், 1 மேக்சி கேப், 3 கனரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் அதிக வேகம், அதிக பாரம் ஏற்றி வந்தது, ஹெல்மெட் அணியாதது, செல்போன் டிரைவிங், சீட் பெல்ட் அணியாதது, சிக்னல்களை முந்துதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காக 57 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு, ஓட்டுனர் உரிமம் தற்காலிக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

    இதுபோல் சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், அவ்வாறு இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் வாகனம் சிறை பிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் எச்சரித்துள்ளார்.

    இதனிடையே கடந்த ஜூன் மாதத்தில் தொடர் வாகனத் தணிக்கை மேற்கொண்டதில் சுமார் 630 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 121 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.

    வரி மற்றும் இணக்க கட்டணமாக ரூ.9 லட்சத்து 40 ஆயிரம் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்திற்கு கபிலர்மலை ஒன்றியத்த லைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு கபிலர்மலை ஒன்றியத்த லைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சந்திரகாந்தா வரவேற்புரை ஆற்றினார். ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக தூய்மைப் பணியா ளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும்.

    தமிழ் மொழியில் கல்வி பயின்றோருக்கு தமிழ்நாடு அரசுப்பணிகளில் 100 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • இதில் விரலி ரகம் 350 மூட்டைகளும், உருண்டைய ரகம் 150 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரகம் 350 மூட்டைகளும், உருண்டைய ரகம் 150 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன.

    விரலி ரகம் ஒரு குவிண் டால் குறைந்தபட்சமாக ரூ.5,852-க்கும், அதிகப்பட்சமாக ரூ.10,199-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சமாக ரூ.5,302-க்கும், அதிகபட்சமாக ரூ.7,779-க்கும், பனங்காலிநாமகிரிப்பேட்டையில்

    ரூ.25 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் ரகம் குறைந்தபட்சமாக ரூ.2,769-க்கும், அதிகப்பட்சமாக ரூ.15,066-க்கும் ஏலம் போனது. இதன்படி, மொத்தம் 520 மஞ்சள் மூட்டைகள், ரூ. 25 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் போலீஸ் நிலையம் பின்புறம் 50 ஏக்கர் பரப்பளவில் அகரம் ஏரி அமைந்துள்ளது.
    • இந்த ஏரியை சுற்றி சூரப்புலி அம்மன் கோவில் முதல் அகரம் ஏரிக்கரை பிள்ளையார் கோவில் வரை உள்ள சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் போலீஸ் நிலையம் பின்புறம் 50 ஏக்கர் பரப்பளவில் அகரம் ஏரி அமைந்துள்ளது.

    இந்த ஏரியை சுற்றி சூரப்புலி அம்மன் கோவில் முதல் அகரம் ஏரிக்கரை பிள்ளையார் கோவில் வரை உள்ள சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மண் சாலையாக இருந்து வருகிறது.

    இச்சாலையை தார்சாலையாக மாற்றம் செய்யக்கோரி, அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் பலனாக கடந்த 2018-19-ம் ஆண்டு சாலை அமைக்க ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும், 5 ஆண்டுகளாகியும் இது வரை சாலை அமைக்கப்படவில்லை.

    தவிர, சாலையின் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் இருப்பதால் அவ்வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைக் காலங்களில் மண்சாலை சேறும் சகதியுமாக மாறுவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதனால் இச்சாலையை பயன்படுத்தும் கொத்தம்பாளையம். அகரம் கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இச்சாலையை விரைந்து தார்சாலையாக மாற்ற வலியுறுத்தி வந்தனர்.

    இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் மற்றும் பி.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பொறுமையிழந்த கிராம மக்கள், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில், சி.பி.எம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டுசாமி ஆகியோருடன் ஏரிக்குள் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், ஒன்றிய பொறியாளர் ஆனந்தி, கிராம நிர்வாக (பொறுப்பு) அலுவலர் சத்யராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கடிதம் அளித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இச்சம்பவதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 5105 முதல் ரூ. 6510 வரை விலை போனது. 580 மூட்டைகள் ரூ.11 லட்சத்து 64 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 5105 முதல் ரூ. 6510 வரை விலை போனது. 580 மூட்டைகள் ரூ.11 லட்சத்து 64 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எள் 40 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதில் கருப்பு எள் கிலோ ரூ.129 முதல் ரூ.139 வரையிலும் சிகப்பு எள் கிலோ ரூ.129 முதல் ரூ.149 வரையிலும் வெள்ளை எள் கிலோ ரூ.153 முதல் ரூ.159 வரையிலும் விலை போனது. மொத்த தொகை ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், கற்பூர வள்ளி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை களை பயிர் செய்துள்ளனர்.
    • வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், கற்பூர வள்ளி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை களை பயிர் செய்துள்ளனர்.

    வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூர் கரூர் பழைய பை-பாஸ் சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வாழைத்தார்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்க ளுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.400-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.500-க்கும் விற்பனையானது.

    நேற்று பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.350-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர். வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

    ×