என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சேலத்தில் இருந்து மதுரைக்கு செல்ல, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர்
    • அதிவேகமாக வந்த லாரி ஒன்று, சேட்டு ஓட்டி சென்ற டிராக்டர் மீது மோதியது.

    பரமத்திவேலூர்

    உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா, சார்க்கான் பகுதியை சேர்ந்தவர் பிரகலாத்சிங். இவரது மகன் சேட்டு (வயது 21). இவர் நேற்று புதிய டிராக்டர் ஒன்றை டெலிவரி செய்வதற்காக சேலத்தில் இருந்து மதுரைக்கு செல்ல, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியில் வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, சேட்டு ஓட்டி சென்ற டிராக்டர் மீது மோதியது. இதில் சேட்டு தூக்கி வீசப்பட்டதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார், சேட்டுவின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்.

    மேலும் டிராக்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மொபட்டில் வைத்திருந்த நிலம் கிரைய ஆவண பத்திரங்கள் காணவில்லை என புகார் மனு அளித்தார்.

    இந்த புகார் அளித்தும் கடந்த 6 மாதங்கள் ஆகியும், காணாமல் போன பத்திரத்தை கண்டு பிடித்து வழங்காததால் மனமுடைந்த காந்தியவாதி ரமேஷ், நேற்று கிரைய ஆவன பத்திரத்தை கண்டுபிடித்து தராத, வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தை கண்டித்து, நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து நடைபயணமாக புறப்பட்டார்.

    அவர் சிறிது தூரம் சென்ற நிலையில், மொபட்டில் சென்று வேலகவுண்டன்பட்டி போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவரிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் அவரது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, ரமேஷ் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து சென்றார்.

    • மனைவி விஜயா மற்றும் மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் இறந்து விட்டனர்.
    • கடந்த சில மாதங்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர், பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 50). கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி விஜயா மற்றும் மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதனால் குணசேகரன் மட்டும் தனியாக வசித்து வந்தார். மனைவி மற்றும் மகன் இறந்து விட்டதால், குணசேகரன் கடந்த சில மாதங்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் விரக்தியில் தனிமையாக இருந்த குணசேகரன், விஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூக்கள் தினசரி ஏல 2 மார்க்கெட்டிற்கும் கொண்டு வருகின்றனர்.
    • வரத்து குறைந்ததால், பூக்கள் விலை உயர் வடைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியான தண்ணீர் பந்தல், வட கரை யாத்தூர், காளிபாளையம், ஆனங்கூர், பாகம்பாளை யம், சின்ன மருதூர், பெரிய மருதூர், நாக பாளையம், செல்லப்பம் பாளையம், அண்ணா நகர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை பூ, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை, விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூர் பஸ் நிலையம் மற்றும் அருகில் உள்ள பூக்கள் தினசரி ஏல 2 மார்க்கெட்டிற்கும் கொண்டு வருகின்றனர்.

    இதனை வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.280-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.380-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.220-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது.

    வரத்து குறைந்ததால், பூக்கள் விலை உயர் வடைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 10-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் மற்றும் பல வணிக ரீதியான கடைகள், கோவில் அருகே வழித்தடங்களை ஆக்கிரமிப்பு
    • திருக்கோவில்களின் அருகில் உள்ள வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த, கடைகளின் முகப்புகளை அகற்றியுள்ளோம்.

    நாமக்கல்

    நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்ச நேயர் மற்றும் நரசிம்மர் திருக்கோவில்களின் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைக்கப் பட்டுள்ளதாகவும், இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளதாகவும், நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து கலெக்டர் உமா உத்தரவின்பேரில், நாமக்கல் சப்-கலெக்டர் சரவணன் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் மற்றும் பல வணிக ரீதியான கடைகள், கோவில் அருகே வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்து அமைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதேபோல் நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், கடை வீதி பகுதிகளிலும் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

    இதுகுறித்து நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் திருக்கோவில்களின் அருகில் உள்ள வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த, கடைகளின் முகப்புகளை அகற்றியுள்ளோம்.

    இதே போல் பஸ் ஸ்டாண்ட், கடைவீதிகளிலும் ஆக்கிரப்புகளை அகற்றி வருகிறோம்.

    கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து அவரவர் கடைகளுக்கு, அருகில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட, கடைகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • இந்த ஏலத்தில் 1278 பருத்தி மூட்டைகள் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது. இங்கு பருத்தி ஏலம் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு முத்துக்காளிப்பட்டி, புதுச்சத்திரம், மசக்காளிப்பட்டி, குட்டலா டம்பட்டி, சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கவுண்டம்பாளை யம், அனைப்பாளையம், வடுகம், குள்ளப்பநாயக்கனூர், சிங்களாந்த புரம், தேங்கல்பாளையம், கரடியானூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    அதேபோல் ராசிபுரம், ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர்.

    ஏலத்திற்கு ஆர்.சி.எச் ரக பருத்தி 1270 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 8 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன. இதில் 1 குவிண்டால் ஆர்.சி.எச். பருத்தி குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 399 முதல் அதிகபட்சமாக ரூ. 6 ஆயிரத்து 885-க்கும்,

    கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்து 500 முதல் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 50-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 1278 பருத்தி மூட்டைகள் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
    • விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங் களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர்

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடை யாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப் பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங் களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர், பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் , பாண்டமங்கலம் விநாயகர், ,ஆனங்கூர் விநாயகர், அய்யம் பாளையம் விநாயகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • குமாரபாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
    • அவற்றை பிடிக்க பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் நாய்கள் தொந்தரவு அதிகம் இருப்பதால், சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒவ்வொரு நகராட்சி கூட்டங்களிலும் அனைத்து கவுன்சிலர்களும் புகார் கூறி வருகின்றனர்.

    பிரதான சாலைகளான சேலம் சாலை, பள்ளிபா ளையம் சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர், வயதானவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள், விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட பணிகளுக்கு செல்வோர் உள்ளிட்ட பலர் இந்த நாய்க ளால் பெறும் அவஸ்தைக்கும், அச்சத்திற்கும் ஆளாகி வருகிறார்கள்.

    சில நேரங்களில் சாலையில் செல்வோரை நாய்கள் துரத்துவதோடு கடித்தும் விடுகின்றன. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நேற்று அதிகாலை 2-ம் கால யாக பூஜை
    • சாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம்

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், செட்டியார் தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாள் மற்றும் கஜலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு கடந்த 5-ந் தேதி காலை ஆலய சம்வத்சரா பிஷே கமும், காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து வருதலும், மாலை மகா கணபதி பூஜை, முதற்கால யாக பூஜையும், யாகவேள்வி மற்றும் பூர்ணாகுதியும் நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 2-ம் கால யாக பூஜையும், மகாபூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ வல்லபா விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீ சுந்தரராஜபெருமாள், ஸ்ரீ கஜலட்சுமி தாயாருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில், சாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    18 ஆயிரத்து 958 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    பரமத்திவேலூர்

    பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தை கடந்த வாரம் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதால் ஏலம் நடைபெறவில்லை. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 18 ஆயிரத்து 958 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.74.99-க்கும், குறைந்த பட்சமாக ரூ.56.69-க்கும், சராசரியாக ரூ.72.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 941-க்கு ஏலம் போனது.

    • சம்பவத்தன்று இவரது கடைக்கு மர்ம நபர்கள் 3 பேர் சென்றனர்.
    • பயந்து போன செல்லத்துரை இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லவில்லை

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி ரோடு இ.பி. ஆபிஸ் பின்புறம் வசித்து வருபவர் செல்ல துரை (வயது 52). இவர் நாமக்கல் பொய்கேரிக்கரை ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது கடைக்கு மர்ம நபர்கள் 3 பேர் சென்றனர். அவர்கள் தாங்கள் கியூ பிரான்ச் போலீஸ் என்றும், உங்களிடம் அதிக அளவில் பணம் உள்ளதாக புகார் வந்துள்ளது எனவும், பணத்தை கொடுக்காவிட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவதாகவும் மிரட்டினர்.

    இதனால் பயந்து போன செல்லத்துரை அவர்களை வங்கிக்கு அழைத்து சென்று ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பயந்து போன செல்லத்துரை இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லவில்லை.

    இதனிடையே அவரது மகள், போலீசுக்கு சொன்ன தகவலின்பேரில் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில், போலீஸ் என ஏமாற்றி ரூ.3 லட்சத்தை பறித்து சென்ற நபர்கள், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த சபரி என்ற சபரிநாதன் (39), சேலம் ஏற்காடு மெயின் ரோடு கோரிமேடு பகுதி யைச் சேர்ந்த இலியாஸ் (38), திருச்செங்கோடு இழுப்புலி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (33) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    தலை மறைவான அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகி றார்கள். போலீசார் என கூறி டீக்கடை உரிமை யாளரிடம் ரூ.3 லட்சத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    • படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில், தங்களின் கோரிக்கைகள் குறித்த 22 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட, மாவட்ட கலெக்டர், மனுக்களை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் செண்பகவள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×