என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி கோழிப் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி கோழிப் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 14-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விலை படிப்படியாக குறைந்து 450 காசுகளாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

    கோழிவிலை

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 123 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று பல்லடத்தில் கறிகோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 123 ரூபாயில் இருந்த கறிக்கோழி விலை 118 ரூபாயாக குறைந்தது . முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக நீடிக்கிறது.

    • பரமத்திவேலூர் -கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.
    • கடும் வெயில் காரணமாக முளைத்திருந்த புற்கள், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் -கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. அதன் அருகே விவசாயம் செய்யப்படாமல் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்துள்ளது. கடும் வெயில் காரணமாக முளைத்திருந்த புற்கள், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் அந்த செடி, கொடிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியது. அதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்களும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    • மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • வருகிற 25-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

    நாமக்கல்:

    அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5- ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

    அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகள் மற்றும் 15 வட்டாரத்தில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் 773 அரசு பள்ளிகளில் 32 ஆயிரத்து 467 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளன. திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தோறும் உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ேதாறும் கிச்சடி, புதன்கிழமை பொங்கல் வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து நாட்களும் காய்கறி சாம்பார் வழங்கப்பட உள்ளன. கொல்லிமலையில்உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • செந்தில்குமார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் தலையில் தாக்கினார்.
    • போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது மல்லசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் வந்து மது வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை சிவக்குமார் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை, ஏ.டி.எம். கார்டு தான் உள்ளது, மிஷினில் ஸ்வைப் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அதற்கு விற்பனையாளர் ஸ்வைப்பிங் மிஷின் பழுதடைந்துள்ளதால் பணமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். திடீரென செந்தில்குமார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் ராசிபுரம் அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதேபோல் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறி செந்தில்குமாரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின்பேரில் எலச்சிப்பாளையம் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசு மற்றும், தமிழக கவர்னரை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி, மருத்துவர் அணி, மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசு மற்றும், தமிழக கவர்னரை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தனர். இளைஞரணி மாநில துணை செயலாளர் ஆனந்த்குமார் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் நீட்தேர்வை கொண்டு வர வேண்டும். தமிழக ஆளுநர் ரவி இடையூறாக இருக்க கூடாது என வலியுறுத்தினர்.

    போராட்டத்தில் பார் இளங்கோவன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர் இளம்பருதி, மருத்துவர் அமைப்பாளர் தீபக்குமார் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, துணை அமைப்பாளர்கள் சுந்தர், நவலடி ராஜா , கதிர், ஜெகதீசன், மருத்துவரணி தலைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கபிலர்மலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்திற்கு வட்டார தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கபிலர்மலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு வட்டார தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டாரத் துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார்.வட்டாரச் செயலாளர் கண்ணன் தீர்மானங்களை விளக்கி இயக்க உரையாற்றி னார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வகுப்பறை கற்றல் கற்பித்தலில் நடைமுறை சாத்தியமற்ற மாணவர்க ளிடையே கற்றல் இடை வெளியை உருவாக்கும் எண்ணும்-எழுத்தும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தமிழக அரசு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணை யான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்.

    கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண்டர், அக விலைப்படி உயர்வு, நிலுவைத் தொகை போன்றவற்றை தமிழக அரசு திருப்பி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்டார பொருளாளர் ஜோதி நன்றி கூறினார்.

    • பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் பரமத்தி வேலூர் பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி. சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம், ஜேடர்பா ளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரைப்பா ளையம், கண்டிப்பாளையம், வடுகபாளையம், நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சிறுநல்லி கோவில், கள்ளுக்கடை மேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், குரும்பல மகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பள்ளம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது

    நல்லூர்

    அதேபோல் நல்லூர் துணை மின் நிலையத்தில் வரும் 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நல்லூர், கந்தம்பாளையம்,கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல் கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளை யம், ஆகிய பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    • பூவன் வாழை, பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
    • பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    நாமக்கல்: 

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், ஜேடர் பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன் வாழை, பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.வாழைத்தார் முதிர்ச்சி அடைந்ததும் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய வாழைத்தார்கள் வியாபாரிகள் நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும்,மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.800-க்கும் விற்ப னையானது. வாழைத்தார் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது.

    • இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் வயரை பிடித்துள்ளது.
    • அப்போது மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தில் உள்ள ஒரு தம்பதியினரின் ஒரு வயது குழந்தை சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் வயரை பிடித்துள்ளது. அப்போது மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து எழுந்த பெற்றோர் மின்சாரம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை உடனடியாக மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடந்த ஒரு வாரமாக சுயநி னைவு சுயநினைவு இல்லாமல் இருந்த அக்குழந்தை இறந்து விட்டது. இது குறித்த செய்தி வாட்ஸ் அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தைகள் உள்ள வீட்டில் மின் உபகரணங்களை பயன்படுத்தும் போது குழந்தை களுக்கு எட்டாத வகையில் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம் என மின்சார துறையினர் கேட்டு கொண்டு உள்ளனர்.

    • சாலையின் இருபுறமும் இருந்த அனைத்து புளிய மரங்களையும் அகற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.
    • பாதசாரிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விரைவில் இப்பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை நான்கு ரோட்டில் இருந்து பொத்தனூர் எம்.ஜி.ஆர்., சிலை வரை சாலையில் இரு புறமும் விரிவாக்க பணிக்காகவும் மற்றும் சாக்கடை வசதி அமைக்கும் பணிக்காகவும் சாலையின் இருபுறமும் இருந்த அனைத்து புளிய மரங்களையும் அகற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.இந்த சாலை பரமத்திவேலூரில் இருந்து பொத்தனூர். பாண்டமங்கலம். வெங்கரை. ஜேடர்பாளையம், சோழசிராமணி மற்றும் சோழசிராமணி வழியாக ஈரோடு செல்லும் முக்கிய சாலையாக திகழ்கிறது.

    சுமார் 60-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் மற்றும் இதர மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். இப்பணி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காலை முதல் மாலை வரை மின்சாரமும் தினசரி தடை செய்து வருகின்றனர். தினசரி மின் வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணியால் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை கடக்கும் பாதசாரிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விரைவில் இப்பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தினசரி மரங்களை வெட்டி நடுரோட்டில் சாய்த்து வருவதால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகள்ம ணிக்கணக்கில் நின்று அந்த வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை தினமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மரங்களை வெட்டி அகற்றும் பணியை இரவு நேரத்தில் செய்து தங்கு தடை இன்றி வாகனங்கள் செல்ல வாகன ஓட்டிகளுக்கு உதவ வேண்டும். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 60 அடி உயர முள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார்பாளையத்தில் சுமார் 60 அடி உயர முள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டாலபிஷேகத்தை முன்னிட்டு 48 நாட்கள் தினந்தோறும் முனியப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    நேற்று மண்டலாபிஷேக நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முனியப்பசாமி கோவில் வளாகத்தில் அக்னிகுண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் சேளூர் சாணார்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முனியப்பசாமியை வழிபட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்நிலையில் கோவிலின் பக்தர்கள் அபிஷேகம் நிறைவுற்றதை முன்னிட்டு வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளனர்.

    மேலும் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் முதல் தேதி அசைவ அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மாசி மாதம் முதல் தேதி அசைவ அபிஷேகம், அன்னதானமும் வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • இளம்பெண் வள்ளியம்பட்டியில் உள்ள கணவர் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
    • உறவினர்கள் பரமத்திவேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வள்ளியம்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

    வாலிபர் கேட்டரிங் முடித்து அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் நிலையில் இளம்பெண் வள்ளியம்பட்டியில் உள்ள கணவர் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் இளம்பெண் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் அவரது மாமனார் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரமத்திவேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார், அதை கண்டு கொள்ளாத மாமியார் மற்றும் கணவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் கைது செய்ய அவர்களது வீட்டிற்கு போலீசார் சென்றபோது அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×