என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா செக்குப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நடராஜ் (வயது 56). இவர் கூடசேரியில் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
- நடராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா செக்குப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நடராஜ் (வயது 56). இவர் கூடசேரியில் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது சுவற்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹாலோ பிளாக் சிமெண்ட் கல் நடராஜின் காலில் விழுந்தது.
இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வியாபாரம் செய்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கல் விழுந்து அடிபட்ட கால் வீங்கி இருந்தது.
அதனால் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 கிட்னிகளும் பழுதடைந்து விட்டதாக கூறி நடராஜை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நடராஜின் மனைவி வசந்தி (43) நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 20-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.114 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.
கடந்த 20-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.114 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- சசிகுமார் (வயது 27). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.
- அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் என கூறப்படுகிறது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. சசிகுமாரின் தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சசிகுமாரின் தாய் உறவினர் திருமணத்திற்காக பல்லடம் சென்று விட்டார். அன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தனது வாட்ஸ் அப்பில் சோகமான ஸ்டேடஸ்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்து சந்தேகமடைந்த இவரது நண்பர்கள் சசிகுமார் வீட்டிற்கு வந்தனர். அங்கு அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
- பருத்தி, எள் மற்றும் கடலைக்காய் ஏலம் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,732 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.
இதில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,469 முதல் ரூ.7,520 வரையிலும், சுரபி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,300 முதல் ரூ.8,100 வரையிலும் விலை போனது. இதன்படி ரூ.45 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
எள்
இதேபோல் 10 மூட்டை எள் ஏலத்திற்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ரூ.122 முதல் ரூ.169 வரையிலும், சிகப்பு எள் கிலோ ரூ.126 முதல் ரூ.173 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.143 முதல் ரூ.176 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
அடுத்த பருத்தி, எள் மற்றும் கடலைக்காய் ஏலம் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
- 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
மண்டல இணை இயக்குனர் நடராஜன் தலைமையில் துணை இயக்குனர் அருண் பாலாஜி மற்றும் பசுமை தமிழகம் இயக்கத்தின் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ் கண்ணன் முன்னிலையில் 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட வனத்துறையால் வழங்கப்பட்ட வாகை,சீமை அகத்தி, கொடுக்கா புளி உள்ளிட்ட மரக்கன்றுகளை திருச்செங்கோடு செங்குந்தர் கலை, அறிவியல் கல்லூரியைச் சார்ந்த என்.எஸ். எஸ் மற்றும் என்.சி.சி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர்கள் சசிகுமார், சதீஷ்குமார் ஆகியோரும், கல்லூரியின் என்.சி.சி அலுவலர் ராமசாமி, என்.எஸ். எஸ் திட்ட அலுவலர் மைதிலி மற்றும் கால்நடை மருத்துவத் துறையினரும் கலந்து கொண்டனர்.
- பொய்யேரிக்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செல்லிபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மகன் பெரியசாமி (வயது 37). கட்டிட மேஸ்திரி. இருவருக்கு பிரேமா என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பிரேமாவுக்கு திடீரென காதில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியை அழைத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மோகனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பெரியசாமி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பொய்யேரிக்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த பெரியசாமி மனைவி கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி பிரேமா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரும்பு சக்கையில் இருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 2011-ல் இணை மின் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
- 60 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது
பரமத்தி வேலூர்
மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டத்தை செயல்படுத்த மேலும் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை துறை சார்பில் கரும்பு சக்கையில் இருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 2011-ல் இணை மின் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். 60 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேஷ் குமார் எம்.பி. முயற்சியை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து இணை மின் திட்ட பணிகளை செயல்படுத்த மேலும் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமை பெற்று செயல்பாட்டிற்கு வந்தால் சர்க்கரை ஆலைக்கு 3 மெகாவாட் யூனிட் மின்சாரம் பயன்பாட்டிற்கும் மீதமுள்ள 12 மெகா வாட் மின்சாரம் விற்பனை செய்யப்படும்.
இதனால் சர்க்கரை ஆலைக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
- மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடத்துகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலை வாய்ப்பு
நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளா கத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடத்துகிறது.
இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பொருத்த மான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சி மற்றும் தனியார் நிறுவ னங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.
பதிவு
முகாமில் பங்கேற்று பணியா ளர்களை தேர்வு செய்ய விரும்பு கிற தனியார் நிறுவனங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தங்களது நிறுவனத்தின் பெயரை வருகிற 1-ந்தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- மாட்டு வியாபாரியான இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார்.
- அந்த வழியாக வந்த அரசு பஸ் வரதராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மரூர்பட்டி அடுத்த குமாரகவுண்டனூரை சேர்ந்தவர் முனியன் மகன் வரதராஜ் (வயது 72).
மாட்டு வியாபாரி
மாட்டு வியாபாரியான இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது பொம்மைகுட்டை மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் வரதராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபா ளையம் போலீசார் வரத ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் சாவு
இதேபோல் ஜேடர்பா ளையம் மணல்மேடு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மைதீஸ்வரன் (21). கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்த முருகானந்தன் மகன் சுரேந்திரன் (23) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாமக்கல் - பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வள்ளிபுரம் மேம்பாலம் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த டாரஸ் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மைதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வழக்கு
சுரேந்திரன் பலத்த காய மடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சுரேந்திரனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனார். பின்னர் அவர் மேல்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்திட்டத்தின் கீழ் ஆமணக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது.
- இதில் ஒய்ஆர்சிஎச் -1 வீரிய விதைகள் உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், வரிசை முறையில் விதைப்பு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்திட்டத்தின் கீழ் ஆமணக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஒய்ஆர்சிஎச் -1 வீரிய விதைகள் உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், வரிசை முறையில் விதைப்பு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஆமணக்கு சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை உதவி இயக்குநர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் போலீசார் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழகன் பங்கேற்று மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுறைகளை வழங்கினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் போலீசார் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழகன் பங்கேற்று மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுறைகளை வழங்கினார்.
பெண் குழந்தைகளை பாதுகாப்பாகவும் இயல்பாகவும் வாழ்வதை உறுதி செய்வது குறித்தும் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவா குமாரி மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- நாளை (23-ந்தேதி) காலை 10 மணிக்கு மஞ்சள் சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
- இப்பயிற்சியில் மஞ்சள் ரகங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (23-ந்தேதி) காலை 10 மணிக்கு மஞ்சள் சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மஞ்சள் ரகங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து விளக்கம் அளிக்கப்படும். தகுதியான விவசாயிகள், ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் ெதரிவித்துள்ளது.






