என் மலர்
நாமக்கல்
- பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர்.
- மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். மரவள்ளி கிழங்குகளை சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக சவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர். மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே போல் சவ்வரிசி விலை உயரும் போதும், விலை வீழ்ச்சி அடையும் போதும் சேகோசர்வ் மூலம் மரவள்ளி கிழங்குகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர்.
சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ13000 க்கு வாங்கிச் சென்றனர். நேற்று சவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ. 12ஆயிரத்து 700-க்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ 14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர்.
- பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல மாதங்களாக வருவாய்த்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் கவர்கல்பட்டி, சென்றாயன்பாளையம், வி.மன்னார்பாளையம், டி.பெருமாபாளையம் ஆகிய கிராமங்களில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல மாதங்களாக வருவாய்த்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வாழப்பாடி வட்டத் தலைவர் பழனிமுத்து தலைமையில் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், ராமமூர்த்தி, பி.தங்கவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாழப்பாடி தாலுகா செயலாளர் தங்கவேலு மற்றும் சீனிவாசன், ராஜா, கணேசன், விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் கோரிக்கை மனு பெற்றுக் கொண்ட தாசில்தார் ஜெயந்தி தலைமையிலான வருவாய்த்துறையினர், விவசாயிகள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 113 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
- முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 106 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.95 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதை அனைத்து பண்ணையாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 113 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 106 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது.
- இதற்கு கர்நாடக மாநிலத்தில் விளையும் பவானி அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுவதே காரணமாகும்.
பரமத்திவேலூர்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் விளையும் பவானி அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுவதே காரணமாகும்.
விறுவிறுப்பு
ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது.
பரமத்திவேலூர், சுல்தான்பேட்டையில் விறகுகளில் நெருப்பு மூட்டி மண் அடுப்பில் வைத்து தயார் செய்யப்படும் பொரி சுவையாக இருக்கும். இதனால் மக்கள் இந்த பொரிகளையே விரும்பி வாங்குகின்றனர். மொத்த ஆர்டர்களும் குவிகின்றது.
ரூ.450 ஆக உயர்வு
அதே சமயம் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக ஒரு மூட்டை பொரி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சுல்தான்பேட்டை பொரி உற்பத்தியாளர் ராமசாமி கூறியதாவது:-
பரமத்திவேலூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொரியை நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
சுவை மிகுந்தது
உப்பு, சோடா, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பொரி தயார் செய்யப்படுகிறது. அதனால் மற்ற பகுதிகளில் தயார் செய்யப்படும் பொரியை காட்டிலும் இங்கு தயாராகும் பொரியின் சுவை அலாதியாக இருக்கும். கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பவானி நெல்லை கொள்முதல் செய்து பொரி தயாரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சீசன் நெருங்கும் சமயத்தில் அதன்விலை 400 ரூபாயாக உயரும்.
ஆனால் நடப்பாண்டில் தற்போதே விலை உயர்ந்து ஒரு மூட்டை பொரி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கும் சமயத்தில் இதன் விலை 550 ரூபாய் வரை ஏற்றம் காண வாய்ப்புள்ளது. இந்த விலையேற்றத்துக்கு அரிசி விலை உயர்வு முக்கிய காரணம்.
ரூ.1500 செலவாகிறது
கர்நாடகாவில் இருந்து நெல்லை கொண்டு வந்து பொரி தயாரிப்பதற்கான செலவு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் பொரி விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தை வீடு அருகே உள்ள லைன் வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.
- தனபாலின் குடும்பத்தினரை பற்றி கார்த்திகேயன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). எலக்ட்ரீசியன்.
இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தை வீடு அருகே உள்ள லைன் வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.
குடிப்பழக்கம் காரணமாக கார்த்திகேயன் தினமும் வீட்டிற்கு போதையில் வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பரான தனபால் (45) மற்றும் சிலருடன் கார்த்திகேயன் மது குடித்துள்ளார். அப்போது தனபாலின் குடும்பத்தினரை பற்றி கார்த்திகேயன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
போதை தலைக்கேறிய தனபாலுக்கு குடும்பத்தை இழிவாக பேசிய கார்த்திகேயன் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். அவர் வெளியே வந்ததும் குடும்பத்தினரை பற்றி இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கும்படி கூறியுள்ளார். ஆனால், கார்த்திகேயன் மறுத்துவிட்டார்.
இதனால் மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டுக்கொண்டனர். இதில் வீட்டு வாசலில் தடுமாறி விழுந்த கார்த்திகேயனை தனபால் கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு ஓடிவிட்டார். அப்போது கார்த்திகேயன் கதறி துடித்துள்ளார். ஆனால், போதையில் வழக்கம்போல் கூச்சல் போடுவதாக நினைத்து அருகில் வசிப்பவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சிறிது நேரத்தில் கார்த்திகேயன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கார்த்திகேயன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தவமணி, கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பெயிண்டர் வேலை பார்க்கும் தனபால் உள்பட 2 பேரை பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.
- 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.
சம்பவத்தன்று காலை ஷட்டரை பாதியளவு மூடிவிட்டு அங்குள்ள பணியாளர்கள் பொருட்கள் பாக்கெட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சுமார் 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.
இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.
கல்லாவில் இருந்த பணம் காணாமல் போனதால் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பணியாளர்கள் பார்த்தனர். அதில் சிறுவன் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.
அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் சிறுவனையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
- வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வண்ண மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
- இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். குறைந்தது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவாது:-
நாமக்கல் மோகனூர் ரோட்டில் கால்நடை மருத்து வக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வண்ண மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், முதுநிலை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம்.
இதேபோல் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இம்மாத இறுதியில் கிராமப்புற இளைஞர்களுக்கான எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சானக் கொல்லிகள் உற்பத்தி செய்தல் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி அட்மா திட்டத்தின் நிதியுதவியுடன் 6 நாட்கள் இலவசமாக நடைபெற உள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். குறைந்தது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
மேற்கண்ட பயிற்சிகளில் கலந்துகொள்ள விரும்பு பவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ முன்பதிவு செய்து கொள்ள லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.
- அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் தொழில் நுட்ப பணியாளர்கள் (கல்லூரி ஆய்வக உதவியாளர்கள்) மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது உறுதியளித்தார். அந்த சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.
ஆனால் அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது. அதே நேரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும், ஆய்வக உதவியாளர்களையும் அரசு அலட்சியப்படுத்துகிறது.
தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு, அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- பிரீத்தி சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
- திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு பாலசுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரீத்தி (27).
இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பா ளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 1/2 வருடங்களாக நர்சாக பணியாற்றி வந்தார். இவர் சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பால்காரர் அழைத்தபோது பால் வாங்குவதற்காக பிரீத்தி மாடியில் இருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரீத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரீத்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரீத்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகு றித்து பிரீத்தியின் சகோதரர் ராதா (51) நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பார்த்தசாரதி வீட்டில் சிலிண்டரை தனியார் கியாஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவர் மாற்றி உள்ளார்.
- தீ விபத்தில் தனலட்சுமி, அருண்குமார் ஆகிய இருவரும் உடல் கருகி படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள நரசிம்மர் சன்னதி தெருவில் கோபால்சாமி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.
இதில் ஒரு வீட்டில் தனலட்சுமி (வயது 62) என்பவரும் மற்றொரு வீட்டில் பார்த்தசாரதி (70) என்பவரும் வசித்து வந்தனர். இவர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஊழியராக பணியாற்றி வந்தனர்.
இன்று காலை பார்த்தசாரதி வீட்டில் சிலிண்டரை தனியார் கியாஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவர் மாற்றி உள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டில் இருந்த தனலட்சமி தனது வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரில் கியாஸ் கசிவு இருப்பதாக கூறி சோதனை செய்து பார்க்கும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து அருண்குமார் சமையல் அறைக்கு சென்று கியாஸ் கசிவு ஏற்பட்ட சிலிண்டரை மாற்ற முயற்சி செய்தார். அருகில் தனலட்சுமி நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதிகமாக கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் கொளுந்து வீட்டு எரிந்தது. கதவு, ஜன்னல், துணிகள் அனைத்தும் எரிந்தது.
இந்த தீ விபத்தில் தனலட்சுமி, அருண்குமார் ஆகிய இருவரும் உடல் கருகி படுகாயம் அடைந்தனர்.
தனலட்சுமியின் வீட்டில் பிடித்த தீ மளமளவென பக்கத்து வீட்டை சேர்ந்த பார்த்தசாரதி வீட்டில் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதில் பார்த்தசாரதியும் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வீட்டிற்குள் தீயில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த தனலட்சுமி, கியாஸ் நிறுவன ஊழியர் அருண்குமார், பார்த்தசாரதி மற்றும் இவரது மனைவி லதா ஆகியோரை மீட்டு போலீசார் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனலட்சுமி, பார்த்தசாரதி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். அருண்குமார், லதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ பிடித்த வீட்டின் அருகே யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது.
- கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார்.
நாமக்கல்:
நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது. கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். செயலாளர் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் வரவேற்கிறார். நிர்வாகிகள் நல்லுசாமி, கோபால், சரவணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி, தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மதுரை பேராசிரியர் சுந்தரத்துக்கு கம்பர் விருதும், பெங்களூரு ராமசாமிக்கு கம்பர் மாமணி விருதும் வழங்கப்படுகிறது.
என்.பி.எஸ்.சுந்தராஜன், டாக்டர். ராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சார்பில் கல்லாதது கம்பன் அளவு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து ராசிபுரம் பரமேஸ்வரனுக்கு நற்றமிழ் நாயகர் விருதும், கந்தசாமிக்கு சமூக ஆர்வலர் விருதும், இயற்கை விவசாயி கண்ணகிக்கு வேளாண் வித்தகர் விருதும், கிருஷ்ணமூர்த்திக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.
வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடுவர் ராஜா தலைமையில் இலங்கை வேந்தன் ராவணனின் வீழ்ச்சிக்கு காரணம் முடிவில்லா ஆனவமா, முறையற்ற காமமா என்ற தலைப்பி ல் பட்டி மன்றம் நடக்கிறது.
அதில் ராஜ பாளையம் ராஜ்கு மார், திருச்சி மாது, மதுரை ரேவதி சுப்புலட்சுமி, சென்னை பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் கம்பன் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
- நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேக மாக வந்த கார் பழனி மீது மோதியது.
- இதில் பழனிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). கூலிதொழிலாளி.
விபத்தில் பலி
இவர் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பரமத்திவேலூர்- நாமக்கல் செல்லும் சாலையை கடந்த போது நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேக மாக வந்த கார் பழனி மீது மோதியது. இதில் பழனிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனி பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் ஓட்டம்
விபத்து ஏற்பட்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்து டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றார்.






