search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை பெண்ணிடம் 25 பவுன் தங்க நகையை திருடிய 3 பெண்கள் கைது
    X

    சென்னை பெண்ணிடம் 25 பவுன் தங்க நகையை திருடிய 3 பெண்கள் கைது

    • பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார்.
    • போலீசார் 3 பெண்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

    பரமத்திவேலூர்:

    சென்னை மேற்கு வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமாகனகராஜ்( 58). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் வீட்டு திருமணத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை கரூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார். அப்போது பஸ்சில் அவருடன் நோட்டமிட்டு வந்த 3 பெண்கள் சில்லறை காசுகளை கீழே போட்டு உமாகனகராஜ் கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.

    அப்போது கைப்பேக்கில் மணிபர்சில் உமாகனகராஜ் வைத்திருந்த 25 பவுன் தங்க செயினை திருடி கொண்டனர். உமாகனகராஜ் திடீரென கை பேக்கில் இருந்த மணிபர்ஸை பார்த்தபோது 25 பவுன் தங்கச் செயின் இருந்த மணி பர்சை காணவில்லை. திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த உமா கனகராஜ் இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 25 பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் திருடிச் சென்ற 4 ரோடு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நகை திருட்டுகளில் ஈடுபடும் பெண்களின் பழைய குற்றப்பதிவுகளை ஆராய்ந்தனர். பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர்களை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஒரு கடைக்கு அருகில் 3 பெண்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மூன்று பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து உமா கனகராஜ் பேக்கில் இருந்த 25 பவுன் தங்க நகையை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருடைய மனைவிகள் அமுதா (36), நந்தினி( 30), மற்றும் தேவா என்பவரது மனைவி பூமிகா என்கிற பரிமளா (25) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இவர்கள் அனைவரும் தற்பொழுது கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ரோடு பெத்தனப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் 3 பேரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×