search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "production busy"

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது.
    • இதற்கு கர்நாடக மாநிலத்தில் விளையும் பவானி அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுவதே காரணமாகும்.

    பரமத்திவேலூர்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் விளையும் பவானி அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுவதே காரணமாகும்.

    விறுவிறுப்பு

    ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது.

    பரமத்திவேலூர், சுல்தான்பேட்டையில் விறகுகளில் நெருப்பு மூட்டி மண் அடுப்பில் வைத்து தயார் செய்யப்படும் பொரி சுவையாக இருக்கும். இதனால் மக்கள் இந்த பொரிகளையே விரும்பி வாங்குகின்றனர். மொத்த ஆர்டர்களும் குவிகின்றது.

    ரூ.450 ஆக உயர்வு

    அதே சமயம் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக ஒரு மூட்டை பொரி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சுல்தான்பேட்டை பொரி உற்பத்தியாளர் ராமசாமி கூறியதாவது:-

    பரமத்திவேலூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொரியை நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    சுவை மிகுந்தது

    உப்பு, சோடா, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பொரி தயார் செய்யப்படுகிறது. அதனால் மற்ற பகுதிகளில் தயார் செய்யப்படும் பொரியை காட்டிலும் இங்கு தயாராகும் பொரியின் சுவை அலாதியாக இருக்கும். கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பவானி நெல்லை கொள்முதல் செய்து பொரி தயாரிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சீசன் நெருங்கும் சமயத்தில் அதன்விலை 400 ரூபாயாக உயரும்.

    ஆனால் நடப்பாண்டில் தற்போதே விலை உயர்ந்து ஒரு மூட்டை பொரி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கும் சமயத்தில் இதன் விலை 550 ரூபாய் வரை ஏற்றம் காண வாய்ப்புள்ளது. இந்த விலையேற்றத்துக்கு அரிசி விலை உயர்வு முக்கிய காரணம்.

    ரூ.1500 செலவாகிறது

    கர்நாடகாவில் இருந்து நெல்லை கொண்டு வந்து பொரி தயாரிப்பதற்கான செலவு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் பொரி விலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×