என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
    • பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் வாலிபர் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் மதுபோதையில் பட்டா கத்தியுடன் ஒருவர் சுற்றி திரிவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    அதன் தகவலின் பேரில், பரமத்திவேலுார் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, மதுபோதையில் பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையைச் சேர்ந்த முத்து (வயது 32) என்பதும், தற்போது சமையல் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    இவர் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால், அடிக்கடி இப்பகுதிக்கு வந்து சென்றதாக கூறியுள்ளார்.

    மேலும் அந்த பெண்ணை, சில நாட்களாக முத்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்காததால், அந்த பெண்ணை பார்ப்பதற்காக நேற்று பரமத்திவேலூருக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த ஒரு பெரிய பட்டா கத்தி மற்றும் ஒரு சிறிய கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, முத்துவை கைது செய்த போலீசார், எதற்காக அவர் பட்டாக் கத்தியுடன் பரமத்திவேலூர் வந்தார்? தொடர்ந்து போன் செய்தும், அந்த பெண் போனை எடுக்காததால் அவரை கொலை செய்ய கத்தியுடன் வந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதை தொடர்த்து கைது செய்யப்பட்ட வாலிபரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் வாலிபர் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ. 6.50 வரை விற்கப்படுகிறது.
    • கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.143, முட்டை கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதனால் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக உயர்ந்தது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ. 6.50 வரை விற்கப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 8 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்வு, உற்பத்தி குறைவு போன்றவை முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.143, முட்டை கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    • அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கத்தின், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
    • மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கத்தின், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் வரவேற்றார். துணைத் தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் நடராஜன், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், பொது வினியோகத்திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், சரியான எடையில் பொட் டலமாக வழங்க வேண்டும். சரியான எடையில் வழங் காமல், ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். மகளிர், மகளிர் சுயஉதவிக் குழு ரேசன் கடைகளை அரசே ஏற்று நடத்தி, அப்பணியா ளர்களுக்கு, முறையான சம்பளம் வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரேசன் அரிசி எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிய ஏரி தூசூர் ஏரியாகும்.
    • சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிய ஏரி தூசூர் ஏரியாகும். இது நாமக்கல்-துறையூர் ரோட்டில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தூசூர் ஏரியின் மூலம் சுமார் 1000 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி நீர் மூலம் இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் மழை பெய்யும் போது அங்கிருந்து காட்டாற்றின் வழியாக வரும் வெள்ள நீர், காரவள்ளி, நடுக்கோம்பை, சின்னக் குளம், பெரியக் குளம், பழையபாளையம் உள்ளிட்ட 6 குளங்கள் முதலில் நிரம்பும். பின்னர் வழிந்தோடும் உபரி நீர் தூசூர் ஏரிக்கு வந்தடையும்.

    இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் பின்னர் ஆண்டாபுரம் வழியாக திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காவிரியில் சென்று கலக்கும். ஏரியில் ஒப்பந்த அடிப்படையில் மீன் வளர்ப்பும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, நாமக்கல் நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை வழியாக வந்து தூசூர் ஏரியில் கலக்கிறது.

    இதனால் ஏரி நீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏரி நீர் மட்டுமல்லாது இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்படுகிறது.

    தூசூர் ஏரியில் கழிவு நீர் ஏரியில் கலப்பதைக் கண்டித்தும், அதை தடை செய்யக்கோரியும், தூசூர் ஏரிக்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட உதவி செயலாளர் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

    • அரசு டாஸ்மாக் கடை அருகே அனு மதியின்றி மது விற்பனை நடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக் டர் சுப்ரமணியன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு டாஸ்மாக் கடை அருகே அனு மதியின்றி மது விற்பனை நடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், அங்காளக் கோட்டையை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் ரகுபதிராஜா(25) என்பவரை கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்களை பரமத்தி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகேசன் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார்.
    • டிராக்டர் திடீரென முருகேசன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மொபட்டுடன் முருகேசன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கபிலர்மலையில் வேலை செய்துவிட்டு மாலையில் மொபட்டில் வீடு திரும்பினார். எட்டிக்கம்பாளையத்தில் உள்ள சூரம்பாளையம் பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்னால் அதிவேகமாக டிராக்டர் வந்தது. இந்த டிராக்டர் திடீரென முருகேசன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மொபட்டுடன் முருகேசன் தார் சாலையில் கீழே விழுந்தார். அ

    தில் முருகேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முருகேசனின் மகன் கனகராஜ் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சித்தம்பூண்டி பகுதியை சேர்ந்த நல்லமுத்து (50) என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வ முள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட் டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர் நெட் மூலம் விண்ணப் பிக்கவும், https://www.tnesevai.tn.gov.in/ என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வ முள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட் டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர் நெட் மூலம் விண்ணப் பிக்கவும், https://www.tnesevai.tn.gov.in/ என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

    வருகிற 30-ந் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப் புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்பக்க கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

    விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி என்ற ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேசனை பயன்படுத்திக் காணலாம். அல்லது https://tnega.tn.gov.in என்ற வெப்சைட் முகவரியிலும் காணலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • வில்லிபாளையம் அருகே உள்ள சுண்ணாம்பு கரட்டையில் திருநாகேஸ்வர் நீரேற்று பாசன சங்கம் உள்ளது.
    • பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி தண்ணீரை பெறுவதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 300 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன நீர் கேட்டு தலா ஒரு லட்சம் வீதம் முன் பணமாக கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, வில்லிபாளையம் அருகே உள்ள சுண்ணாம்பு கரட்டையில் திருநாகேஸ்வர் நீரேற்று பாசன சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக நாமக்கல் தாலுகா, கீரம்பூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2020- ஆம் ஆண்டு ஜேடர்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி காவேரி ஆற்றில் இருந்து நீரேற்று பாசன திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைத்து அதன் மூலம் குச்சிபாளையம், கீரம்பூர், வரப்பாளையம், வில்லியம்பாளையம் மற்றும் பிள்ளைகளத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி தண்ணீரை பெறுவதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 300 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன நீர் கேட்டு தலா ஒரு லட்சம் வீதம் முன் பணமாக கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பணம் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பாசனத்திற்கான காவேரி தண்ணீரை பெற்றுத்தர எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தண்ணீருக்காக பணம் கொடுத்த விவசாயிகள் பாசன சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு பலமுறை கேட்டுள்ளனர்.ஆனால் பணத்தை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் நேற்று கீரம்பூரில் உள்ள கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் போலீசார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கோபாலகிருஷ்ணன் விவசாயிகளிடம் பெற்ற முன் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100- க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

    • கருப்புசாமி(வயது 40). இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஒரு கல்கு வாரியில் வேலை செய்து வருகிறார்.
    • அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் தீப்பிடித்து வீட்டின் மேற்கூரையில் பற்றி எரிந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செங்கரப் பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி(வயது 40). இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஒரு கல்கு வாரியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கெங்காரப் பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று மீன்களை பிடித்து வந்துள்ளார். பின்னர் ஏரியில் பிடித்து வந்த மீன்களை பொறிக்க வேண்டி அடுப்பை பற்ற வைத்து எண்ணெயை ஊற்றி வைத்துவிட்டு மறந்து வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது.

    அப்பொழுது அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் தீப்பிடித்து வீட்டின் மேற்கூரையில் பற்றி எரிந்தது.இது குறித்து அங்கிருந்தவர்கள் நாமக்கல் தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்துள் ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக எழுந்து கொண் டிருந்த தீயை தண்ணீர் பீச்சி அடித்து அணைத்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கு மேலும் பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் மற்றும் பொருட்கள் சேதமடையாமல் தடுக்கப்பட்டது.சம்பவம் குறித்து வேலகவுண் டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக இருந்தது.
    • 14-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக இருந்தது. 14-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 15-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்ட ஒரு முட்டை ரூ.5.25 ஆனது. 16-ந் தேதி மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை ரூ. 5.30 ஆனது.

    17-ந்தேதி 5 பைசா உயர்த்தப்பட்ட ஒரு முட்டை விலை ரூ. 5.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 18-ந் தேதி மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ. 5.40 ஆனது. முட்டை விலை தொடர் உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்):- சென்னை-600, பர்வாலா-463, பெங்களூரு-590, டெல்லி-483, ஹைதராபாத்-525, மும்பை-585, மைசூர்-590, விஜயவாடா-510, ஹொஸ்பேட்-550, கொல்கத்தா-572.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 148 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோ ளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிரா கவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
    • மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளை யம், சோளசிராமணி, குரும்பலமகாதேவி, கொத்த மங்கலம், சிறுநல்லிக்காவில், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, வடகரை யாத்தூர், பெரிய சோளி பாளையம், இருக்கூர், ஆனங்கூர், அய்யம்பாளை யம், பிலிக்கல்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் தங்க ளது நிலத்தில் மக்காச்சோ ளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிரா கவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மக்காச்சோளத்தை விற்பனை செய்து வருகின்ற னர். சில வியாபாரிகள் மக்காச் சோளக் கதிரை வாங்கி உள்ளூர் பகுதிக ளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    அதை வாங்கிய பொது மக்கள் சோளக்கதிரை உப்பு போட்டு வெகவைத்து சாப்பிடுகின்றனர். பல இடங்களில் மக்காச்சோ ளத்தை வாங்கி பாப்கான் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்ற னர். மக்காச் சோளத்தை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் மக்காச்சோள மாவு தயாரிக்கும் அலைகளுக்கும், மாடு, கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும், அதேபோல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலை யில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறை வால் ஒரு கிலோ மக்காச்சோ ளம் ரூ.23 வரை விற்பனை யானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் அருகிலுள்ள போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திய தாக 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலை மையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் அருகிலுள்ள போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திய தாக 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. அந்த வழியே வந்த ஜே.சி.பி வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்யப்பட்டதில் அந்த வாகனத்திற்கு ஆண்டு வரி செலுத்தப்படாதது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த வாகனத்திற்கு அபராத தொகையுடன் சேர்த்து ரூ.13ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டது. மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனத்திற்கு ரூ.30 ஆயிரம் இணக்க கட்டணம் வசூலிக்கும் பொருட்டு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

    மேலும் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமலும் அனுமதி சீட்டு இல்லாமலும் அந்த வழியாக வந்த கனரக வாகனம் சிறை பிடிக்கப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×