என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் ரவுண்டானா பகுதியில் சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மரக்கட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

    அப்போது காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ் கட்டு பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் உரசியது.

    இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டைகள் பஸ்சின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தது. மேலும் பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    பஸ்சில் இருந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 36 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1824 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • தப்பியோடிய சாராய வியாபாரி ஆரோக்கியமேரியை தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக வெளிமாநில மது விற்பனை நடந்து வந்தது.இதனை கண்காணித்து மது குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்டம், கீழையூர் பகுதியில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் வாசுதேவன், உதவி மேலாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஆனந்தம் நகரில் ஆரோக்கிய மேரி என்பவரது வீட்டில் புதுச்சேரி மாநில மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த வீட்டுக்கு வந்த டாஸ்மார்க் அதிகாரிகளை கண்டதும், ஆரோக்கியமேரி தப்பி ஓடினார்.

    தொடர்ந்து காலணி வீட்டில் 36 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதுவை மாநில 1824 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் சரக்கு வாகனம் மூலம் கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்களை நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ள நிலையில் தப்பியோடிய சாராய வியாபாரி ஆரோக்கியமேரியை தேடி வருகின்றனர்.

    • இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
    • சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, மருதூர்தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வட்டார அளவிலான சுகாதார விழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.

    சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், இணை இயக்குனர் அமுதா, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் மாலதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், பழனிச்சாமி மற்றும் வருவாய் துறை, சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, முகாம் அரங்கில் காய்கறி பழங்கள் மற்றும் முதல்-அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    முகாமில், சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்கான அறிவுரையும் வழங்கப்பட்டது. முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

    • 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள்.
    • ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்ககிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம், வடமழை மணக்காடு, கரியாபட்டினம், பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதியில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் எந்திரம் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு அறுவடை எந்திரம் போதுமானதமாக வராததால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரத்து 100 கூலி கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.

    ஆனால், இந்த ஆண்டு அறுவடை எந்திரம் கூடுதலாக வந்துள்ளதால் தற்போது ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,800 மட்டும் கூலியாக பெறுகின்றனர்.

    இந்த ஆண்டு நெல் விளைச்சல நன்றாக இருப்பதாகவும், ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்ககிறது எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும், அரசு நெல் மூட்டைகளை காலதாமதம் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாநில அரசுகளுக்கு போட்டியாக கவர்னர்கள் தனி அரசாங்கத்தை நடத்துகிறார்கள்.
    • அனைத்து கவர்னர்கள் மீதும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் நாகூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியல் சட்ட வரம்பை மீறி சட்டத்தை அவமதித்து தமிழக கவர்னர் செயல்பட கூடாது. கவர்னர் ரவி மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் போன்று செயல்படும் அனைத்து கவர்னர்கள் மீதும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநில அரசுகளுக்கு போட்டியாக கவர்னர்கள் தனி அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அவர்களுடைய குறிக்கோள் மாநில அரசுகளுடன் போட்டி போடுவது மட்டும் தான்.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். பா.ஜனதாவுக்கு மாநில கட்சிகள் அகில இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் பா.ஜனதாவுக்கு எதிராக மாற்று திட்டத்தை எதிர்க்கட்சியினர் முன்மொழிய வேண்டும்.

    ஆனால் எதிர் அணியை அமைக்க நினைக்கும் யாரும் பா.ஜனதாவை எதிர்க்கக்கூடிய மாற்று திட்டத்தை உருவாக்க முன்வரவில்லை.

    ஒரே நாடு பாரதம், ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே மதம் இந்து மதம் என்று சொல்லி வரும் பா.ஜனதா, இந்தியாவை இந்து நாடாக மாற்ற துடிக்கிறது. பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் மாற்று திட்டத்தை கையாளாவிட்டால் எதிர்காலத்தில் பா.ஜனதாவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி அரசினர் மேல்நிலை பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வட்டார அளவிலான கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் லியாக்கத் அலி வரவேற்றார்.

    முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்டு மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் திட்டச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    இதில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கீதா, தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கரி, பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வை–யாளர் கற்பகம் நன்றி கூறினார்.

    • கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.
    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.

    நாகப்பட்டினம்:

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனங்கள் சார்பாக தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், கண் தானம் செய்ய வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தொடக்கி வைத்தார். பேரணி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை சென்றது.

    இறுதியில் பேரணியை திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் முடித்து வைத்தார்.

    பேரணியில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாத்மாகாந்தி, பண்டிதர் ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தேச தலைவர்கள் வேடமிட்டு சென்றனர்.

    கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.

    முன்னதாக தேசிய கொடி ஏற்றியும், தேசபக்தி பாடல்கள் பாடியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் வெங்கட்ராஜு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கல்வி குழுமத்தின் இயக்குநர் விஜயசுந்தாரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்தரா மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.10 லட்சம் செலவில் கல்வெட்டு பாலம் கட்டப்பட்டது.
    • ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்பதேவன்காடு பகுதிலிருந்து அருகிலுள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் இணைப்பு சாலையில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தையும், அதே பகுதியில் ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடத்தையும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், நகராட்சி கவுன்சிலர் நமசிவாயம், முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு, ராஜகிளி, மாரியப்பன் உள்பட பிரமுகர்கள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    • சேதமடைந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
    • புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டும் சிறப்பு திட்டம் 2022-23 கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய பொறியாளர் சுரேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்த வல்லி, ஊராட்சி செயலர் அன்பழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
    • வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.

    இவர்கள் பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதுடன் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் இன்றும் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுககளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாதம் நடைபெற உள்ளது.
    • கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடல் படையால் நவிக்பொது மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக நடைபெற உள்ளது.

    இதில் கலந்துகொள்ள தகுதியான மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி, விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களிலும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், ரேசன் கடைகள் ஆகிய இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அருகாமையில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார்.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.

    மேலும், பயிற்சிகளுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் தலா ரூ. 1000 வழங்கப்படும். எனவே, 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களிலும் கூட்டு தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இத் தகவல் இந்திய கடலோர காவல் படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணி நடந்து வருகிறது.
    • வசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது இங்கு அறுவடை பணி நடைபெற்று வருகிறது.அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டது.இந்நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி காரையூர் பகுதியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாராணி உத்திராபதி தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் முன்னிலை வகித்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

    இதில் வார்டு உறுப்பினர் கார்த்திக் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×