என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • முத்தரசபுரத்தில் ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
    • அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நெல் வயல்களின் வழியாக வளர்த்த நெற்பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.

    அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சேறும், சகதியுமான நெல் வயல்களின் வழியாக விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த நெற்பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.

    மேலும் பல ஆண்டுகளாக இந்த துயரத்தை சந்தித்து வருவதாக வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால் ஒவ்வொரு முறையும் வயலில் தூக்கி சென்று பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் நாசமாவதாக வேதனையோடு கூறியுள்ளனர்.

    மேலும், மழைகாலங்களில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் நிலை ஏற்படுவதாகவும், நிரந்தர சுடுகாடு கட்டிடம் கூட இல்லாமலும் கீற்று கொட்ட கைகள் அவ்வப்போது அமைத்து சடலங்களை எரி ஊட்டுவதாகவும், பல நேரங்களில் மழையினால் நனைந்து சடலங்கள் பாதியிலேயே எரிந்து நின்று விடுவவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    கிராம மக்கள் பல ஆண்டுகளாக புகார் மனு கொடுத்தும் நாகை மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், விரைவில் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்றும் தமிழக அரசு இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளிக்கு சென்ற கவிப்ரியன் பள்ளி விளையாட்டு நேரத்தில் மாணவர்களோடு ஓட்ட பந்தயத்தில் ஓடினான்.
    • மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கவிப்ரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி காருக்குடியைச் சேர்ந்தவர் இளைய ராஜா பாசமலர் தம்பதியினர். இவர்களின் மகன் கவிப்ரியன்.

    இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவிபெறும் வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

    இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற கவிப்ரியன் பள்ளி விளையாட்டு நேரத்தில் மாணவர்களோடு ஓட்ட பந்தயத்தில் ஓடியதாக கூறப்படுகிறது.

    அப்போது மாணவர் கவிப்ரியன் மயங்கி விழுந்துள்ளார்.

    அவரை மீட்டு வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுப்பி உள்ளனர்.

    அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கவிப்ரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர்.
    • மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் பலத்த மழை பெய்தது.

    பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 2.10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாரம் தாங்காமல் சாய்ந்தது. மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதேபோல் உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் சேதமாகின.

    திடீர் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

    அதன்படி கடந்த 5-ந்தேதி வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து சென்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து 6-ந்தேதி பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கையினை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமர்ப்பித்தனர். இதையடுத்து 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், சேதமடைந்த இளம்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம், உளுந்து விவசாயம் செய்ய 50 சதவீதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அதனை ஏற்று ஈரப்பத தளர்வு அறிவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதன்படி சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூருவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு இன்று டெல்டா மாவட்டங்களில் தங்களது ஆய்வை தொடங்கினர்.

    முதற்கட்டமாக இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர். அங்கு கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து கொண்டனர். கொள்முதல் செய்யப்படும் விதம், நாள்தோறும் எவ்வளவு அளவு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற பல்வேறு விவரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

    அப்போது அங்கு திரண்ட விவசாயிகள், தங்கள் நிலங்களில் சேதமடைந்த அழுகிய நெற்பயிரை கையில் எடுத்து வந்து மத்திய குழுவினரிடம் காண்பித்தனர். அதனையும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதிகாரிகள் மாதிரிக்காகவும் கொண்டு சென்றனர்.

    அப்போது மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகியது. அதோடு நெல்லின் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது.

    தற்போது 19 சதவீதம் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மழையால் ஈரப்பதம் அதைவிட அதிகரித்துள்ளது. எனவே 22 சதவீதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டை கொள்முதல் செய்யப்படுவதை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை வாங்கி மத்திய அரசிடம் பேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து மத்திய குழுவினர் திருக்குவளை தாலுகா கச்சநகரம் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து வலிவலம் உள்ளிட்ட பல்வேறு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.

    நாளை (9-ந்தேதி) திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுகள் அனைத்தையும் முடித்து கொண்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின்னர் வருகிற 13-ந்தேதி டெல்லியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். அதன்பின்னரே நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குறைந்த அளவு கிடைக்கின்ற உணவால் நாய்களுக்குள் சண்டையிட்டு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    • நாய் வளர்ப்போருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை மன்னார்குடி நகரத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் சார்பில் நகர மன்ற தலைவர் மன்னை த.சோழராஜனிடம் முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.எஸ். ராஜேந்திரன், தேசிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் டாக்டர் எஸ்.சேதுராமன், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் வேல்முருகன், விலங்கியல் ஆர்வலர்கள் விவேக், அண்ணாதுரை, நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், ஜெயக்குமார், ஜான்சன் லயன்ஸ் சங்கம் சந்தோஷ், ஜே.சி.ஐ சங்கம் நந்தகுமார் உட்பட பலர் ஒருங்கிணைந்த கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மன்னார்குடி நகரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மனித நேயத்தோடு வரையறுக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறை களின்படி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மன்னார்குடி நகரத்தில் தற்சமயம் சுமார் 6000 தெரு நாய்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்தத் தெரு நாய்கள் உணவுக்காக அலையும் நிலையில் உணவு கிடைக்காத சூழலில் வெறிபிடிக்க வாய்ப்பு உள்ளது.

    விரைவாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவில்லை யெனில், தெரு நாய்கள் அதிகரித்து உணவு கிடைக்காமலும், குறைந்த அளவு கிடைக்கின்ற உணவால் நாய்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும் தெரு நாய்களுக்கு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே, நமது மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிகின்ற அனைத்து தெரு நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதோடு, அதற்கான நவீன அறுவை சிகிச்சை கூடம், தெருநாயை பிடிப்பது முதல் அறுவை சிகிச்சை செய்து முடித்து பிடிபட்ட இடத்திலேயே விடுவது வரையிலான பணிகளை உறுதிப்படுத்த வேண்டும்.

    நாய் வளர்ப்போருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை மன்னார்குடி நகரத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்ற கொண்ட நகர் மன்ற தலைவர் சோழராஜன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • விவசாயம் மீது ஆர்வம் கொண்ட புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்றார்.
    • தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழி கொண்டை பூ சாகுபடி செய்தார்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன்.

    இவர் பட்டபடிப்பு முடித்துள்ளார்.

    விவசாயம் மீது ஆர்வம் கொண்ட இவர் புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்று தனக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் கோழிக்கொண்டை பூவினை சாகுபடி செய்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறும்போது:-

    தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழி கொண்டை பூ சாகுபடி செய்து உள்ளேன்.

    இந்த பூ கிலோ ரூ. 75 முதல் 100 வரை சந்தையில் விற்ப்பனையாகிறது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ள கோழி கொண்டை பூ நான்கு மாத அறுவடையில் ரூ. 50 ஆயிரம் கிடைக்கும்.

    என எதிர்பார்க்கிறேன் மண்ணையும் மக்களையும் காக்க இந்த முயற்சியில் இப்பகுதியில் முதன்முதலாக ஈடுபட்டுள்ளேன் என்றார்.

    • வேதாரண்யம் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரே சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • காலை உணவு திட்டத்தை தனியாரிடம் விடுவதை கைவிட்டு சத்துணவு அங்கன்வாடி பணியாளர் வைத்து நடத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரே சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடிகளில்பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியுடன் ரூ 6,750 மாதந்திர சிறப்பு ஓய்வு ஊழியம் வழங்க வேண்டும் சத்துணவு அங்கன்வாடி பணியாற்றவர்களுக்கு காலம் வரை ஒன்றியத்தில் 50 சதவீதம் பணியாளர்களை நியமிக்க வேண்டும் காலை உணவு திட்டத்தை தனியாரிடம்  விடுவதை கைவிட்டு சத்துணவு அங்கன்வாடி பணியாளர் வைத்து நடத்த வேண்டும்போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சத்துணவு அங்கன்வாடி பணியாளர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    • திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.
    • தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் தைப்பூச பவுர்ணமி யாகமானது நடைபெற்றது.

    தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்கு கிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.

    இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கி றோம்.

    ஆகவே இந்ததைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.மாத ம்தோறும் வரும் பௌர்ணமிதனையாகத்தை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், பழனிவேல் ஆகியோரும் ஸ்ரீ காங்கேய சித்தர் வழிபாட்டு குழுவை சேர்ந்த தமிழ் ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் இந்த மாத யாகத்தினையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    காரைக்கால் மற்றும் நாகூரைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றார்கள்.

    • மத்திய அரசு குழு அனுப்பி ஈரப்பதத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • நெற்பயிர் பாதிப்புகளை அமைச்சர் ஆய்வு செய்து விவசாயி–களிடம் கேட்டறிந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்ட சம்பா சாகுபடியில், 20 ஆயிரம் ஏக்கர் அறுவடை முடிந்த நிலையில், கடந்த 3 நாட்கள் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து கடுமையான சேதம் அடைந்தது.

    இதையடுத்து முதல்வர் உத்தரவின்பேரில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்யும் வகையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று மாலை திருமருகல் பகுதிக்கு வந்தார்.

    பின்னர் அவர் திருமருகல் அருகே ஆலத்தூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை பார்வைட்டார்.

    அப்போது விவசாயிகள் பாதித்த நெற்பயிர்களை அமைச்சரிடம் காண்பித்து பாதிப்பு குறித்து தெரிவித்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி:-

    தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு குழு அனுப்பி ஈரப்பதத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீரில் நனைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய விவசாயிகளுக்கு கூடுதல் செலவினங்கள் ஆவதால், இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் தண்ணீர் வடியும் தன்மையை கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பேரிடர் காலங்களில் தொடர்ந்து தமிழக அரசுக்கு நிதி கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

    நாகை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து கீழ்வேளூர் அருகே உள்ள சாட்டியகுடி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர் பாதிப்புகளை அமைச்சர் ஆய்வு செய்து விவசாயி–களிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநாவாஸ் எம்எல்ஏ, வேளாண் இணை இயக்குனர் அகண்டராவ், திருமருகல் வட்டார ஆத்மா குழுத்த லைவர் செங்குட்டுவன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பட்டோலை வாசித்தல், பந்தக்கால் முகூர்த்தம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி பட்டோலை வாசித்தல், பந்தக்கால் முகூர்த்தம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய பட்டோலை வாசித்தல், கணபதி பூஜையுடன் நடந்த பின்னர் சாமி சன்னதி முன்பு கோவில் ஸ்தலத்தார்கள் கயிலை மலை வேதரத்னம் மற்றும் உபயதாரர்கள் முன்னிலையில் அலுவல மேலாளர் விஜயகுமார் திருவிழாக்கள் குறித்த பட்டோலை விவரம் வாசித்தார்.

    பின்னர், சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா சென்று நாகை சாலையில் உள்ள வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இளநீர், பால், தயிர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமத்தில் அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வரும் வள்ளி தெய்வானை சமேத ஒரு முகம் ஆறு கரங்களை கொண்ட அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பல்வேறு திரவியங்கள் பழச்சார் பஞ்சாமிர்தம் தேன் பன்னீர் இளநீர் பால் தயிர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்பு சுவாமி விபூதி அலங்காரம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியரை வழிபட்டனர்.

    • களஞ்சியம் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள்.
    • நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்க–பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்களை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் இடத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு விளைந்த நெல்லை அறுத்து தைப்பூசம் அன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அளிக்கும் நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டும் இதே போல் நெல் அறுவடை செய்து அதனை கோட்டையாக கட்டி விவ சாயிகள் வேதா ரண்யம் கொண்டு வந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று வேதாரண்யம் கோவிலில் ஒப்படைத்தனர்.

    பின்பு அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாரா தனை காண்பிக்கபட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்களை வழங்கினர்.

    • நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
    • 3000 பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த 30-ம்தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை நாகூர், பட்டினச்சேரி நம்பியார்நகர், செருதூர் காமேஷ்வரம். விழுந்த மாவடி ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள் 3000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேலும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு கடல் சீற்றம் குறைந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்க மீன்வளத் துறையினர் அனுமதித்துள்னர்.

    மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3000 பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.

    ×