என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே குழந்தையுடன் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியில் வசிப்பவர் ஐயப்பன் (வயது 35). சேலத்தை சேர்ந்தவர். நெல் அறுவடை செய்யும் எந்திரத்தை வேலை பார்த்துக் கொண்டு இந்த பகுதிக்கு வந்தபோது கோடியக் காட்டை சேர்ந்த கானேஸ்வரி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இவருக்கு தினேஷ் (7) என்ற மகனும், யாழினி (3) என்ற மகளும் உள்ளனர். ஐயப்பன் தற்சமயம் ஆந்திராவில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று கோடியக்காடு வந்து பார்த்தபோது கானேஸ்வரி மகள் யாழினியுடன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    நாகை மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட 181 கிராமங்களில் இதுவரை 157 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #OSManian
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணிணியில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணியினை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள 236 கிராம புறங்களில் 181 கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது.

    இதுவரை 157 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி முழுமையாக முடிக்கப்பட்டு 82 கிராமங்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 75 கிராமங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றன. 24 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தித்துறை ஆணையர் சுகன்தீப் சிங் பேடி, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். #GajaCyclone #OSManian
    கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்கள், சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், நாகை மாவட்டத்தில் புயல் நிவாரண முகாம்கள், சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். #GajaCyclone #Nagai
    மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் தி.மு.க. கிளை செயலாளர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள சாத்தங்குடி புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் மருதவாணன்(வயது 50). இவர், குறிச்சி ஊராட்சியில் தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், புலவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், இரும்பு கம்பியால் மருதவாணனை சரமாரியாக தாக்கினர். இதில், ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து பலியானார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட மருதவாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மருதவாணனின் மனைவி உமா கொடுத்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாத்தங்குடியை சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயக்குமார், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சேர்ந்து புலவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த மருதவாணனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

    இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    நேற்று முன்தினம் இரவு மணல்மேடு பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிச் செல்வதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கடுவங்குடி பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற ஒரு டிராக்டரை மடக்கி பிடித்தனர். போலீசாரை கண்டதும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அந்த டிராக்டரில் கனகராஜ் என்று பெயர் எழுதப்பட்டிருந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து மருதவாணன் தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறி கனகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயக்குமார், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சேர்ந்து புலவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த மருதவாணனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள கனகராஜ், ஜெயக்குமார், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    மயிலாடுதுறை அருகே மணல் கடத்தல் குறித்து துப்பு கொடுத்த தி.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே புளியந்தோப்பு கிராமம் சாந்தக்குடி பகுதியை சேர்ந்தவர் முருகன் என்கிற மருதவாணன் (வயது 52). குறிச்சி ஊராட்சி தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு உமா என்ற மனைவியும், ஓரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் மருதவாணனின் தம்பி ராமகிருஷ்ணன் டிராக்டரில் மணல் ஏற்றி வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மற்றும் சிலர் அவரை வழிமறித்து, எனது மணல் டிராக்டரை போலீசார் இன்று பறிமுதல் செய்து எடுத்து சென்றதற்கு நீதான் காரணம் என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ராமகிருஷ்ணன் இதுபற்றி தனது அண்ணன் மருதவாணனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் உடனடியாக மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்கு சென்று கனகராஜ் தரப்பிடம் சமாதானம் பேசியுள்ளார்.

    அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீ தான் எங்களை மணல் கடத்துவதாக போலீசில் தகவல் தெரிவித்து சிக்க வைத்துள்ளாய் என்று கூறி ஆத்திரமடைந்து கையில் இருந்த இரும்பு கம்பியால் கனகராஜ் மற்றும் 4 பேர் சேர்ந்து மருதவாணணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மருதவாணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

    இதைக்கண்டு பதறிப்போன அவரது தம்பி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருதவாணனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிசிக்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மருதவாணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து மணல்மேடு போலீசில் நடந்த சம்பவம் பற்றி ராமகிருஷ்ணன் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்த கொலை தொடர்பாக கனகராஜ் , ஜெயகுமார், ரஞ்சித் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணல் அள்ளுவது தொடர்பாக நள்ளிரவில் தம்பியின் கண்முன்னே தி.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    வேதாரண்யத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #NirmalaSitharaman
    நாகப்பட்டினம்:

    கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
     
    கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். கஜா புயல் சீரமைப்புக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி கோரினார்.

    இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு சென்னை வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெலிகாப்டர் மூலம் கோடியக்கரை வந்தடைந்தார். அங்கிருந்து வேதாரண்யம் சென்ற அவர், கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

    மேலும், கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களையும் பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். #GajaCyclone #NirmalaSitharaman
    மயிலாடுதுறை அருகே 10-வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழன் பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அதே பகுதியை சேர்ந்த 10-வகுப்பு மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று காலை திருமண நடைபெற இருப்பதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை குழந்தைகள் நலக்குழுவை சேர்ந்த ரம்யா, கிரிஜா மற்றும் மயிலாடுதுறை மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமணத்துக்கு தயாராக இருந்த மாணவியை மீட்டனர்.

    மேலும் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் (வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் டிரைவராக பணி புரிந்து வருவது தெரியவந்தது.

    மீட்கப்பட்ட சிறுமி போலீசாரின் பாதுகாப்பில் உள்ளார். இந்த குழந்தை திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் யார்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என நாகையில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #GajaCyclone #EdappadiPalaniswami
    நாகை:

    நாகையில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி ஆறுதல் கூறினர். பின்னர் நாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாகையில் புயல் பாதிப்பு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:-

    கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கஜா புயலுக்கு நாகையில் மட்டும் 15 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.



    அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

    புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளோம். மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #EdappadiPalaniswami


    கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று நாகை மாவட்ட விவசாயிகள், பெண்களிடம் முதலமைச்சர் உறுதி அளித்தார். #EdappadiPalaniswami #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அவர் முதலில் புயலால் சேதமான பிரதாபராமபுரம் பகுதிக்கு சென்றார். அங்கு புயலால் வீடுகளை இழந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.



    அப்போது பெண்கள், வீடுகளை இழந்து குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகின்றனர். மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறோம் என்றனர்.

    இதை கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. புயலால் நாகை மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைக்கும். கிராமங்களுக்கு மின்சாரம் , குடிநீர் விரைவில் வழங்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பொதுமக்கள் சிலர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதை பெற்றுக்கொண்ட அவர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து விழுந்த மாவடி கிராமத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி சென்றார். அங்கு புயலால் சேதமான தென்னை, மா மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது விவசாயிகள், எங்களது வாழ்வாதாரமே போய் விட்டது. இதில் எப்படி மீண்டு வர போகிறோம் என்று தெரியவில்லை. அதிகாரிகள் விரைந்து கணக்கெடுத்தால் தான் நிவாரணம் கிடைக்கும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

    இதை கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல் பாதித்த பகுதிகளில் எல்லாம் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு நடத்தி நிவாரண பணிகள் துரிதப்படுத்தி வருகிறார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு தேவையான உதவியை செய்யும். விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.

    இதையடுத்து வேட்டைகாரனிருப்பு கிராமத்தில் அரசு நிவாரண முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது பெண்கள் அனைவரும் கண்ணீர் மல்க தங்களது வேதனையை தெரிவித்தனர். வீடு, வாசல், தோப்பை இழந்து விட்டோம். இனி அரசு முகாமில் அடுத்தவேளை உணவுக்காக காத்திருக்கிறோம். ஆடு, மாடுகளை இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து வருமானமின்றி தவிக்கிறோம். அரசு நிவாரணம் அளித்தால் தான் எங்களுக்கு வாழ்க்கையே’ என்று கூறினர்.

    இதை பொறுமையுடன் கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘‘தமிழக அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கப்படும். மின்கம்பங்கள் நடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    இதன்பிறகு கோவில்பத்து கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தானிய சேமிப்பு கிடங்கை பார்வையிட்டார். சுமார் ரூ.151 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தானிய சேமிப்பு கிடங்கு முற்றிலும் சேதமாகியிருப்பதை பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த சேதமான நெல் மூட்டைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

    பிறகு வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம், பெரிய குத்தகை, வேதாரண்யம், வாய்மேடு ஆகிய பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். #EdappadiPalaniswami #GajaCyclone

    நாகப்பட்டினம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி, முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். #EdappadiPalaniswami #GajaCyclone
    நாகை:

    கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.

    இதற்கிடையே விடுபட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.



    பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழங்கினர். தென்னை மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் தென்னங்கன்றுகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, ஓஎஸ் மணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதன்பின்னர் நாகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். இதேபோல் திருவாரூரிலும் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். #EdappadiPalaniswami #GajaCyclone

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக இன்று காலை நாகை சென்றடைந்தார். #EdappadiPalanisamy #GajaCyclone
    நாகை :

    ‘கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது. இதற்கிடையே ரத்து செய்யப்பட்ட புயல் சேத பகுதிகளை பார்வையிடும் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் மீண்டும் வகுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.



    அதன்படி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி எடப்பாடி பழனிசாமி நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதுடன், பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும், நிதியுதவிகளையும் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து, திருவாரூரிலும் கஜா புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர், திருவாரூரில் இருந்து புதன்கிழமை இரவு ரயில் மூலமாக சென்னை திரும்புகிறார். #EdappadiPalanisamy #GajaCyclone 
    கஜா புயல் சீரமைப்பு பணி நடைபெறுவதால் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    ×