என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    செம்பனார்கோவில் அருகே குடும்ப பிரச்சனையில் மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே உள்ள கிள்ளியூர் கஞ்சன்திடலை சேர்ந்தவர் விஜயகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கால் விஜயகுமாருக்கு போதிய வருமானம் இல்லை.

    இதனால் குடும்பத்தில் பிரச்சனை எழுந்து கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இன்று காலை அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே விஜயகுமார் ஆத்திரம் அடைந்து மாரியம்மாளை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.
    கொள்ளிடம் அருகே பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நாகையில் இருந்து சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று மேற்கண்ட இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புத்தூரை சேர்ந்த கேசவன் (வயது 63), மன்சூர் (50), சீயாளம் கிராமத்தை சேர்ந்த குமார் (45), ஆனந்தகூத்தன் கிராமத்தை சேர்ந்த ராஜா (57), திருமயிலாடியை சேர்ந்த சுரேஷ் (50), மயிலாடுதுறையை சேர்ந்த சிவானந்தம் (48), ஆக்கூரை சேர்ந்த அப்துல்அலி (46), சீர்காழியை சேர்ந்த ரியாஸ் (33), கடலங்குடியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (53), பொறையாறை சேர்ந்த பழனியப்பன்(56), நாகப்பட்டினத்தை சேர்ந்த சதீஷ்குமார்(48), விளந்திடசமுத்திரத்தை சேர்ந்த பாண்டியன்(32), சந்தப்படுகையை சேர்ந்த துரை(57) ஆகியோர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இவர்கள் 13 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரத்து 80-ஐ பறிமுதல் செய்தனர்.
    நாகை மாவட்டத்தில் 280 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் தெரிவித்தார்.
    நாகப்பட்டினம்:

    கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 2,304 பேரின் ரத்த மாதிரிகள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. திருவாரூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அதேபோல காசிக்கு சென்று திரும்பிய வேளாங்கண்ணியை சேர்ந்த ஒரு நபருக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிக்கை வந்துள்ளது. நாகை மாவட்டத்தில் இதுவரை 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 42 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1,981 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 280 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கீழ்வேளூர் பகுதியில் காசநோயாளிகளுக்கு மருந்து பொருட்கள் வீடு தேடிச்சென்று வினியோகம் செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான காசநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மாதந்தோறும் மருத்துவமனைக்கு சென்று மருந்துகளை வாங்கி செல்வர். தற்போது ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியில் நடமாட இயலவில்லை. வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் காசநோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று மருந்துகளை பெற முடியாமல் அவதிக்கு ஆளாயினர். இதையடுத்து சுகாதார துறையினர் காசநோயாளிகளுக்கு மருந்து பொருட்களை அவர்களுடைய வீடு தேடிச்சென்று வினியோகம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் தமிழ்செல்வம், கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து, அவர்களுக்கு 2 மாதங்களுக்கான மருந்து பொருட்களை வழங்கினர்.

    அப்போது வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி அங்கிருந்த மக்களிடம் கூறுகையில்:-

    உடலில் புதிதாக கட்டிகளோ, வலியோ ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது. அவை உள்ளுக்குள் ஏற்பட்டிருக்கும் இன்னொரு நோயின் அறிகுறியாக இருக்க கூடும். எனவே உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து அதற்கான சோதனைகளை செய்து சிகிச்சை பெற வேண்டும்.

    காசநோயாளிகள் தவறாமல் மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும். இது போன்ற இக்கட்டான நேரங்களில் மருந்துகளை சாப்பிட இயலாமல் போக வாய்ப்புள்ளது. இதனால் நோய் தீவிரம் அதிகமாகும். சிலர் முகவரி மாற்றத்தை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு மட்டும் மருந்துகளை வழங்க இயலவில்லை. எனவே அவர்கள் உடனடியாக முகவரி மாற்றத்தை மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் சுகாதாரத்துறை மருந்துகளை நேரில் வழங்கும். இவ்வாறு அவர் கூறினார். 
    மயிலாடுதுறை அருகே ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை, சீர்காழி, மயிலாடுதுறை, பொறையாறு, திருவெண்காடு போன்ற பகுதியை சேர்ந்த 45 பேர் ஆன்மிக சுற்றுலாவுக்காக வெளி மாநிலங்களுக்கு சென்றனர்.

    ஊரடங்கால் திரும்ப முடியாமல் தவித்தன்ர். இதில் 35 பேர் ஒரு வேன் பிடித்து கடந்த மாதம் 25-ம் தேதி ஊருக்கு திரும்பினர்.

    அதில் திருவெண்காடு பகுதியை சேர்ந்த 2 நபர்களும், மயிலாடுதுறை சாவடி பகுதியை சேர்ந்த ஒருவரும் கடந்த 10-ம் தேதி மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சென்று கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தி கொண்டனர். இதில் சாவடிபகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதையடுத்து அவரை நேற்று திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனிமை படுத்தியுள்ளனர்.

    சாவடி கிராமத்தை சுகாதார துறையும் காவல்துறையும் தங்கள் கட்டுபாட்டில் வைத்து தகரத்தை கொண்டு அடைத்துள்ளனர்.

    சாவடியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கர்நாடகாவில் இருந்து வேன்பிடித்து வந்த 35 பேரில் 3 பேர் கொரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தினர். மீதம் உள்ள 32 பேரை சோதனை செய்ய அவர்களை சுகாதார அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

    ஊரடங்கால் பழையாறு மீன்பிடி துறைமுகம் முடங்கியது. இதனால் மீனவர்கள், தொழிலாளர்கள் வருவாயின்றி தவிக்கின்றனர்.
    கொள்ளிடம்:

    கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினமும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். இந்த துறைமுகத்தின் மூலம் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். மீன் மற்றும் கருவாடு விற்பனை செய்வதிலும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பழையாறு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் பழையாறு மீன்பிடி துறைமுகம் முடங்கியதோடு, மீனவர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். மேலும், கருவாடு விற்பனையும் நடைபெறாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மீன்பிடி தடைகாலமும் அமலில் இருப்பதால் மீனவர்கள் மற்றும் அதை சார்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களது படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் மீன்பிடித்தொழிலை நம்பி வாழும் நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். அரசு கொடுத்த ரூ.1,000 நிவாரண தொகை மிக குறைந்த தொகையாகும். எனவே பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    வேதாரண்யம் அருகே வீட்டில் பெண் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு சேதம் ஆனது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் மேலத்தெருவில் வசிப்பவர் பக்கிரிசாமி. இவரது மனைவி வேதவள்ளி (வயது 65). இவர் வீட்டில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக அடுப்பிலிருந்து தீ கூரை வீட்டில் பரவி தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்த வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அதிகாரி கந்தசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். சேத மதிப்பு ரொக்கம் உள்பட ரூபாய் ஒரு லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு தாசில்தார் முருகு, மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று அரசின் நிவாரணத்தை வழங்கினர்.

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெளிமாநில மது பாட்டில்கள் அனைத்தும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் உடைத்து அழித்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி மதுவிலக்கு பிரிவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை பதியப்பட்ட வெளிமாநில மது கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 2448 மது பாட்டில்கள் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப் பட்டிருந்தது.

    அவைகள் அனைத்தையும் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சட்டநாதபுரம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அந்த மதுபாட்டில்கள் அனைத்தும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி சுவாமிநாதன் முன்னிலையில் போலீசார் உடைத்து அழித்தனர். வெளிமாநில மது பாட்டில்கள் அளிக்கப்பட்டதை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.

    நாகை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா பக்தர்கள் யாரும் இன்றி மிக எளிமையாக நடந்தது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். மலைமீது உமையம்மை உடனாகிய தோணியப்பர், சட்டைநாதர் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.

    7-ம் நூற்றாண்டில் இத்தலத்து பிரம்ம தீர்த்த குளத்தில் அழுதுக்கொண்டிருந்த குழந்தையான ஞானசம்பந்தருக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கி பின்னர் சிவபெருமானுடன் சேர்ந்து பார்வதி தேவி காட்சிக் கொடுத்த நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாக பிரம்ம தீர்த்தக் குளத்தின் அருகே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசின் உத்தரவின்படி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும் திருமுலைப்பால் பிரம்மோற்சவம் விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஞானப்பால் வழங்கும் ஐதீக நிகழ்வு தடைப்படக்கூடாது என்பதால் பக்தர்கள் யாரும் இன்றி மிக எளிமையாக நடந்தது.

    முன்னதாக அலங்கரிக்கப்பட்டு திருஞானசம்பந்தர் மலைக்கோவிலில் உள்ள தோணியப்பர் சன்னதி முன்பாக எழுந்தருளினார். ஆகம விதிகளின்படி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தேவார பாடல் பதிகங்கள் பாடி, திருஞானசம்பந்தருக்கு , பொற்கிண்ணத்தில் உமையம்மை ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

    பின்னர் இந்த ஆண்டு சிவ.சந்திரசேகர ஓதுவாருக்கு திருமுறை கலாநிதி பட்டமும், பொற்கிழியையும் வழங்கினார். இந்த நிகழ்வில் பக்தர்கள் யாரும் இன்றி சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகி, சிப்பந்திகள் மட்டும் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.
    மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த வாலிபர் சிக்கினார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 22). இவர், கடந்த 2 நாட்களாக தனது மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு ஆணை மேலகரம் ஊராட்சி மல்லியம் ரெயிலடி பகுதி வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி உள்ளார்.

    பின்னர் ரஞ்சித், தன்னை ஒரு போலீஸ் என கூறி கொண்டு, வாகன ஓட்டிகளை மிரட்டி ரூ.500 வசூல் செய்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கொரோனா பரவுவதால் யாரும் வெளியே வரக்கூடாது என கூறி லத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

    இதில் சந்தேகம் அடைந்த ஆணை மேலகரம் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி, குத்தாலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார், மேற்கண்ட பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அவர், வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.500 பறிமுதல் செய்தனர்.

    நாகை மாவட்டம் சீர்காழியில் தூய்மைப் பணியாளர்களுக்காக சேமித்து வைத்த உண்டியல் பணத்தை 3-ம் வகுப்பு மாணவன் நன்கொடையாக வழங்கினான்.
    சீர்காழி:

    உலகம் எங்கும் கொரோனா தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்களின் பங்கு மிக சிறப்பாக அமைந்து வருகிறது.

    இந்த செய்திகளை பார்த்து அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் பகுதியை சேர்ந்த மாணவன் ஜெயஸ்ரீவர்மன்(வயது8) சிறிய மிதிவண்டி வாங்கிடும் ஆசையில் தான் பல ஆண்டுகளாக உண்டியலில் சேர்த்து வைத்த ரூ.4586-ஐ பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம் வழங்கினார்.

    மாணவன் வழங்கிய தொகையினை கொண்டு பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாலை நேரத்தில் சுண்டல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செயல்அலுவலர் தெரிவித்தார். இந்த மாணவன் பேரூராட்சி ஓட்டுநர் மணிவண்ணனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    வேதாரண்யத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு எத்தனை லாரிகள் வேண்டுமானாலும் உப்பு ஏற்றிச் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பயனடைவர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியாளர்கள், லாரி புரோக்கர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. நாகை கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடி அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் 2ம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு லாரி மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக உப்பள பகுதியில் வேலை பார்த்து வந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தற்போது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் 10 லாரிகளில் மட்டுமே நாள்தோறும் உப்பு செல்கிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் உப்பு மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. உப்பு ஏற்றுமதி இல்லாததால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    இதையடுத்து வேதாரண்யத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு எத்தனை லாரிகள் வேண்டுமானாலும் உப்பு ஏற்றிச் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பயனடைவர் என தெரிவித்தனர்.

    கூட்டத்தில் தாசில்தார் முருகு, டி.எஸ்.பி. சபியுல்லா மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள், லாரி புரோக்கர்கள் கலந்து கொண்டனர்.
    ×