என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு கிராமம், ராசாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 23). இவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரபாண்டியன் இறந்தார்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியான்டி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், கோவில்பத்து மேலக்காடுபகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி (வயது 62). இவர் தனியேஒரு கூரைவீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துலெட்சுமியை அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த முத்து லெட்சுமியின் பாதுகாவலர் சரபோஜிராஜன் வேட்டைக் காரனிருப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தார்.
வேதாரண்யம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசின் 144 தடை உத்தரவால் வேதாரண்யத்தில் 75 ஆயிரம் டன் உப்பு மூட்டைகள் சென்ற மாதம் தேக்கம் ஏற்பட்டது. லாரிகள் செல்லாத நிலையில் இந்த தேக்கம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அத்தியாவசிய பொருளான உப்பை எத்தனை லாரிகள் வேண்டுமானாலும் ஏற்றிச் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதனையொட்டி நூற்றுக்கணக்கான வேதாரண்யத்திலிருந்து உப்பை ஏற்றிச் சென்றன. இதனால் கொரோனா பரவும் என பொதுமக்கள் அச்சமடைந்ததால் மாவட்ட எல்லையான தாணிக்கோட்டகத்தில் நிறுத்தப்பட்டு கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்பு வெளியூர் லாரி ஓட்டுநர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். உள்ளுர் ஓட்டுநர்களை கொண்டு உப்பு ஏற்றி தாணிக்கோட்டகத்தில் கொண்டு சென்று அங்கிருந்து வெளியூர்களுக்கு உப்பு லோடை எடுத்துச் சென்றனர்.
தாணிக்கோட்டகத்தில் லாரிகள் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் லாரி நிறுத்து மிடத்தை பார்வையிட்டு வேதாரண்யத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையொட்டி அகஸ்தியன் பள்ளியிலிரந்து சிறு குறு உற்பத்தியாளர்களின் உப்பை 10 லாரிகளில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து உப்பு ஏற்ற அனுமதி அளித்தும் 10 லாரிகளில் உப்பு ஏற்றுவது போதுமானதாக இல்லை என்றும் வெளியூர் லாரி டிரைவர்களுக்கு உணவு, தங்குமிடம் பிரச்சினைகள் ஏற்படுவதால் லாரி உரிமையாளர்கள் முற்றிலுமாக உப்பு ஏற்றுவதற்கு லாரி அனுப்புவதை கடந்த 4 நாட்களாக நிறுத்திவிட்டனர்.
இதனால் உப்பு ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் 75 ஆயிரம் டன் உப்பு தேக்கம் ஏற்பட்ட நிலையில் குறைந்த அளவில் உப்பு விற்பனை நடைபெற்றதாலும் தேக்க நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் உப்பு ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்ட நிலையில் உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் உப்பள பகுதியில் மலை போல் உப்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தடைக்காலம் முடிந்த பின்புதான் உப்பு தேக்க நிலையிலிருந்து விடுபட்டு உப்பு ஏற்றுமதி நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடியம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
இவர் கர்ப்பிணியான தனது மகள் பிரசவத்துக்காக சிதம்பரத்தில் ஓர் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு கர்ப்பிணியை கொரோனா சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால் அவருக்கு தொற்று இல்லை. மகளுக்கு உறுதுணையாக இருப்பதால் தானாக முன்வந்து தாயும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கடந்த 6-ந்தேதி சென்றுள்ளார்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று சுகாதாரத்துறையால் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணை பாதுகாப்பாக ஆம்புலன்சு மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் அக்கிராமத்தில் தடுப்புகள் அமைத்து சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் விவரங்களை சேகரித்து வருகின்றனர்
நாகப்பட்டினம்:
உலகை அச்சுறுத்தி வரும் கெரோனா நோய் பரவுதலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இதனால் மருத்துவ தேவைக்காக நோயாளிகள் மருத்துவமனைக்கு கூட்டமாக செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர் பிரியதர்ஷினி மற்றும் செவிலியர்கள் மருத்துவமனைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியவர்கள், காசநோயாளி, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு சளி, இருமல், மூச்சு திணறல் உள்ளதா என்றும் மேலும் சில பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான மருந்துவ அறிவுரைகளை கூறி தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் அவ்வை முதியோர் இல்லத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்தனர்.
அரசு மருத்துவர் பிரியதர்ஷினி வீடுகள் தேடி பலருக்கும் மருத்துவ உதவி செய்துவரும் இச்செயலை பலரும் பாராட்டினர்.
நாகப்பட்டினம், மே.9-
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்து உள்ள அகலங்கண் கிராமத்தை சேர்ந்த கம்பி பிட்டரான கேசவன் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே இவர்களை கண்டித்துள்ளனர். இதையடுத்து கேசவன், 17 வயது நிரம்பிய மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்த மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவனை தேடி வந்தனர். இந்நிலையில் அகலங்கண் கிராமத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் மாணவியும், கேசவனும் பதுங்கியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து மாணவியை மீட்டு அழைத்துச் சென்றனர். மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கேசவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பின்னர் கேசவனை நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் ரம் வகை மதுபாட்டில் ஒன்று வாங்கியுள்ளார்.
பின்னர் அவர் அங்குள்ள வயல் பகுதிக்கு சென்று அந்த பாட்டிலை திறந்து பாதி மதுவை கப்பில் ஊற்றி விட்டு மீண்டும் பாட்டிலை மூடும் போது உள்ளே ஏதோ கிடப்பதை கண்டுள்ளார். என்ன என்று பார்த்தபோது, அந்த மது பாட்டிலில் தவளை ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து குடிக்க ஊற்றிய மதுவை கீழே ஊற்றிவிட்டு தவளை கிடந்த மதுபாட்டிலுடன் அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தகவல் வெளியே தெரியாமல் மறைக்க தவளையுடன் இருந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு உடனே புது மதுபாட்டிலை கடை ஊழியர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
மதுவை குடித்து ஏற்படும் பாதிப்புகள் மட்டுமின்றி இது போன்ற ஆபத்துகளும் இருப்பது மது பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
சென்னையிலிருந்து பலர் கொள்ளிடம் வழியே தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றனர். சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருக்கடையூர், காரைக்கால், மணிக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 கார்களில் சென்ற 15 பேரை கொள்ளிடம் சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் தடுத்து நிறுத்தி அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்துதனர்.
அனைவரின் கைகளிலும் கொரோனா சோதனை செய்ததற்கான முத்திரை குத்தி அவர்கள் செல்லும் ஊரில் உள்ள அவரவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அதனை அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.






