என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள செருதியூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 29). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கழிவறைக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
    நாகை அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவித்தல் படியும், சாராய கடத்தலை தடுக்க பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூர் முட்டம் பஸ் நிலையம் அருகில் நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது திட்டச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாக்குமூட்டையுடன் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். மூட்டையில் சாராயம் இருந்தது. பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், நாகை அக்கரைகுளம் வடக்கு தெருவை சேர்ந்த தனம்கொடி மகன் பிரதாப் (வயது39) என்பதும், மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம் அருகே மனைவி இறந்த கவலையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு கிராமம் ராஜாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா (வயது50).விவசாயி. இவருடைய மனைவி மாரிமுத்து. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். மனைவி மாரிமுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராதா தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீட்டுக்கு தினமும் உறவினரின் மகள் ஒருவர் வந்து சமையல் செய்து வைத்து விட்டு சென்று விடுவார். 

    மனைவி இறந்ததாலும், தன்னை பாதுகாக்க யாரும் இல்லையே என மனவேதனை அடைந்த ராதா சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து புகாரின் பேரில் காரியப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டச்சேரி அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. ஓ.என்.ஜி.சி.நிறுவனம் இதை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவன காலிப்பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு தகுதிக்கேற்ப பணி வழங்க வேண்டும்.

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். திட்டச்சேரி-குத்தாலம் இடையே சேதமடைந்த இணைப்பு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன், திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். இதில் மாவட்ட அமைப்பாளர் முத்துவளவன், இஸ்லாமிய பேரவை மாவட்ட அமைப்பாளர் மஞ்சக்கொல்லை ஹாஜா, மாவட்ட ஊடக அமைப்பாளர் வைரமுத்து, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் அரவிந்த் வளவன், ஒன்றிய வணிகர் அணி அமைப்பாளர் சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் நளமகாராஜா, சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், குத்தாலம் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து திருமருகல் வருவாய் அலுவலர் பொற்கொடி, நாகை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் எனவும், நாளை(செவ்வாய்க்கிழமை) தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து நாகை, கிழையூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 78 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பகு, நகர செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சுபாஷ் சந்திரபோஸ், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

    விவசாயத்தை அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க கூடாது. டெல்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை தாக்கி, அடக்குமுறையில் ஈடுபட்ட மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதேபோல வேளாங் கண்ணி அருகே கீழையூர் கடைதெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 58 பேரை போலீசார் கைதுசெய்து அந்த பகுதியில் உள்ள ஒரு சமுதாய சேவை மையத்தில் தங்கவைத்தனர்.
    வேதாரண்யம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி சேது சாலையில் வசிப்பவர் கவியரசன். இவர் வேதாரண்யத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவருக்கும், இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் (எ) சுரேஷ்குமார் (வயது 36) என்பவருக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கவியரசன் ஊரில் இல்லாத பொழுது சுரேஷ்குமார், கவியரசன் வீட்டிற்கு கத்தியுடன் சென்று தகராறு செய்துள்ளார்.

    அப்போது அந்த வழியே வந்த கவியரசனின் நண்பர் புஷ்கரணி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் (30) என்பவர் இதை பார்த்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் தான் வைத்திருந்த கத்தியால் கிஷோரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

    இதேபோல சுரேஷ்குமாரின் தாயார் ஜெயராணி வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் கவியரசன் நண்பர்களான புஷ்கரணியைச் சேர்ந்த கிஷோர், அகஸ்தியன் பள்ளியை சேர்ந்த காமராஜ், அகிலன், ராஜ்குமார் ஆகிய 4 பேரும் சுரேஷ்குமாரின் வீட்டிற்கு வந்து அவரை தரக்குறைவாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என தெரித்துள்ளார். அதன்பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே குற்றம்பொருத்தான் இருப்பு கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகே சாராயம் விற்ற பழையனூர் மேல்பாதியை சேர்ந்த நிஜலிங்கம்(வயது26), சங்கமங்கலம் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற திருப்பூண்டி காரைநகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் (24), புதுச்சேரி வடக்கு தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தங்கையன் (46) அகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    தலைஞாயிறு அருகே ஓரடியம்புலம் கிராம பகுதியில் புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    வாய்மேடு:

    தலைஞாயிறு அருகே ஓரடியம்புலம் கிராம பகுதியில் புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சுமதி தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் 50 பசுக்களுக்கும், 40 வெள்ளாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் செயற்கைமுறை கருவூட்டல், குடற்புழு நீக்கம் தடுப்பூசி போடப்பட்டது. முடிவில் கால்நடை மருத்துவர் ஸ்ரீதர் பாபு நன்றி கூறினார்.
    வேதாரண்யம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.14,440-யை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உம்பளச்சேரி பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உம்பளச்சேரி கிழக்கு பகுதியில் ராமலிங்கம் என்பவரின் வீட்டு அருகே பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பணம் வைத்து சூதாடிய உம்பளச்சேரியை சேர்ந்த ராமலிங்கம் (வயது70), வீரப்பன் (60), கரியாப்பட்டினத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (58), யாக்கத் அலி (56), சுப்ரமணியன்(50), பாலமுருகன் (36),செல்வராஜ் (48), செண்பகராயநல்லூரைச் சேர்ந்த தனபால் (58), ஆய்மூரை சேர்ந்த அறிவழகன்(51), பாட்டாக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (56) மற்றும் தலைஞாயிறை சேர்ந்த வெற்றி அழகன் (58) ஆகிய 11 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.14,440 பறிமுதல் செய்தனர்.
    கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கலியபெருமாள், அசோக்குமார் மற்றும் போலீசார் ஆழியூர்-பெருங்கடம்பனூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருங்கடம்பனூர் வைரவன் இருப்பு பகுதியில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் நாகூர் அருகே தெத்தி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் உமாபதி (வயது19), நாகூர் பட்டினச்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் சுபாஷ் (24) என்பதும். இவர்கள் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்து கீழ்வேளூர் பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாபதி, சுபாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    திருக்குவளை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே திருக்குவளை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சீதாராமன். இவருடைய மகள் துர்கா (வயது24).இவர் பி.எஸ்சி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். துர்கா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மன உளைச்சலில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது துர்கா தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருக்குவளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், துர்கா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நிரவி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    திருவாரூர் கீழ்வேளூரை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் மாலை கீழ்வேளூரில் இருந்து காரைக்கால் நகர பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நிரவி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அன்புச்செல்வன் தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்புச்செல்வன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து திருமலைராயன்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்த இடத்தில் கிடைத்த சி.சி.டி.வி. கேமரா பதிவை கொண்டு, மினி வேன் டிரைவர் நாகை மாவட்டம் பாலையூரை சேர்ந்த செல்வராஜ் மகன் ஸ்டீபன் (23) என்பவரை கைது செய்தனர்.
    ×