என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் பாதுகாப்பு முகாம்களில் 11,753 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருக்குவளை, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி மற்றும் குத்தாலம் ஆகிய 8 தாலுகாக்களில் இடம்பெயர்தல் குழு, தேடுதல், மீட்பு குழு தங்குமிடம் மற்றும் பராமரிப்பு குழு என தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீஸ் துறை, சுகாதார துறை, கால்நடை துறை, வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சப்-கலெக்டர் நிலையிலான 8 
    அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    9 பல்நோக்கு நிவாரண மையங்கள், 22 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்பட 43 பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள முகாம்களில் 11 ஆயிரத்து 753 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக சீர்காழி தாலுகாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். 321 குடிசை வீடுகள் பகுதி சேதமும், 12 குடிசை வீடுகள் முழு சேதமும் அடைந்துள்ளன. 24 ஓட்டு வீடுகள் பகுதி சேதம் அடைந்தன. 6 மாடுகள் 5 கன்றுகள் மற்றும் 31 ஆடுகள் என மொத்தம் 42 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 30 மின் கம்பங்கள் சேதமடைந்தது. இதில் 23 மின் கம்பங்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 981 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாக்க 3 மருத்துவ முகாம்களும், 29 நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
    வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வேளாங்கண்ணி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மோடி உருவபொம்மையை எரித்தனர்.
    வேளாங்கண்ணி:

    புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமை தாங்கினார்.

    இதில் விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்து கீழையூரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர் பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

    நாகை தலைமை தபால் நிலையத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பகு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சரபோஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.

    விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சந்திரசேகர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்தையன், மாவட்ட குழு உறுப்பினர் அபூபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    கீழ்வேளூர் அருகே வேலைக்கு செல்லாததை குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே ஆத்தூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மணி (வயது50). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. ஏன் வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என குடும்பத்தினர் திட்டியதாக தெரிகிறது. 

    இதனால் மனமுடைந்து சம்பவத்தன்று மணி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே செருதியூர் தோப்பு தெருவை சேர்ந்த சாம்பசிவம் மகன் சிலம்பரசன் (வயது 29). இவர் தனது மோட்டார் சைக்கிளை மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்திற்குள் கழிவறை அருகே நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்தபோது மோட்டார் சைக்கிளை 2 பேர் திருடி செல்வதை சிலம்பரசன் பார்த்து கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை புதிய வண்ணாரப்பேட்டை சிறியன் மெயின் ரோட்டை சேர்ந்த ஹாஜி முகைதீன் (34) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். தப்பியோடியவர் சென்னையை சேர்ந்த ரகமத்துல்லா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாஜி முகைதீனை கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அம்மாமணி என்கிற மணிகண்டன்(வயது 35) என்பவரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல கஞ்சா விற்ற சித்தர்காடு தண்டாயுதபாணி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் வினோத் என்கிற வினோத்குமார்(34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன், வினோத்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆணைக்காரன் சத்திரத்தில் 36 செ.மீ. மழை பெய்துள்ளது.
    நாகை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. புரெவி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆணைக்காரன் சத்திரத்தில் 36 செ.மீ. மழை பெய்துள்ளது.

    ஒரே நாளில் வெளுத்து வாங்கிய இந்த மழையால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிறு குளம், ஏரிகள் நிரம்பி விட்டன.

    அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் லால்பேட்டை 28 செ.மீ, பரங்கிப்பேட்டை 26, சீர்காழி 21, கடலூர் 13, தஞ்சாவூர் 10, புதுச்சேரி 14, திருத்துறைப்பூண்டி 22, நாமக்கல் 17, தூத்துக்குடி 16.5, செய்யாறு 24 செ.மீ. பதிவாகி உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் அம்பத்தூரில் அதிகபட்சமாக 56 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. ஆலந்தூரில் 55 மி.மீ., எழும்பூர் 54 மி.மீ., பெரம்பூர் 40 மி.மீ., அயனாவரம் 36 மி.மீ., புரசைவாக்கம் 26 மி.மீ., தண்டையார்பேட்டை 29 மி.மீ., மாம்பலம் 23 மி.மீ., கிண்டி, மைலாப்பூர் தலா 12 மி.மீ. பெய்துள்ளது. செம்பரம்பாக்கம் 8.5 செ.மீ., தரமணி 14 செ.மீ., மேற்கு தாம்பரம் 11.5 செ.மீ., புழல் 30, வடசென்னை 24, சென்னை விமான நிலையம் 14, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 12, திருச்செந்தூர் 19, எண்ணூர் 24 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
    வேதாரண்யம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை செங்காதலை சாலையில் வசிப்பவர் சுபேதாபேகம் (வயது32). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டில் இருந்துள்ளார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதேபோல் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை இலந்தையடியை சேர்ந்தவர் ரஸ்தா அப்துல் கபூர் (70). இவர் வீட்டை பூட்டி விட்டு மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்று தங்கி இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று ரஸ்தா அப்துல் கபூரின் உறவினர் வீட்டை வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சுபேதாபேகம், ரஸ்தா அப்துல் கபூர் ஆகியோர் தனி தனியாக வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையில் இருந்து மோப்பநாய் துலிப் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
    புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 19 செ.மீ., தலைஞாயிறில் 14 செ.மீ. மழை பதிவானது.
    நாகை:

    வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 19 செ.மீ., தலைஞாயிறில் 14 செ.மீ. மழை பதிவானது.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ., குடவாசலில் 10 செ.மீ., திருவாரூரில் 9 செ.மீ., நன்னிலத்தில் 8 செ.மீ. மழை பதிவானது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 12 செ.மீ., தங்கச்சிமடத்தில் 8 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ. மழை பதிவானது.

    ‘புரெவி’ புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நாகை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 படகுகள் தண்ணீரில் மூழ்கின.
    நாகப்பட்டினம்:

    ‘நிவர்’ புயல் எச்சரிக்கையின் காரணமாக நாகை மாவட்டத்தில் 1,500 விசைப்படகுகள் கடந்த 23-ந் தேதி முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பைபர் படகுகளில் மட்டும் மீனவர்கள் 3 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு சென்று மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் புதிதாக உருவாகி உள்ள ‘புரெவி’ புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று பகல் பொழுது முழுவதும் கொட்டி தீர்த்தது.

    தொடர் மழை காரணமாக, நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட கடலோர பகுதி கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் புதிதாக உருவாகியுள்ள புரெவி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் நேற்று 2-வது நாளாக 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இதனிடையே புயல் சின்னம் வலுவடைந்து வருவதன் காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் துறைமுகம் மற்றும் கடற்கரையோரம் கொட்டப்பட்டுள்ள கருங்கல் தடுப்பு சுவர்களை தாண்டி 5 அடி உயரத்திற்கு மேல் எழுந்து வருவதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. புயல் காரணமாக மாவட்டத்தில் 1500 விசைப்படகுகள், 7ஆயிரம் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    விடாமல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாகை அக்கரைப்பேட்டை துறைமுகம் கடுவையாற்றில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன், பாலகிருஷ்ணன், கீச்சாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வம் ஆகியோருக்கு சொந்தமான 3 பைபர் படகுகளும், ஒரு நாட்டு படகும் கடுவையாற்றில் மூழ்கின. இதனையடுத்து மீனவர்கள் அந்த படகுகளில் தேங்கிய மழைநீரை மோட்டார் என்ஜின் மூலம் அகற்றி படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பொறையாறு, சங்கரன்பந்தல், செம்பனார்கோவில், பரசலூர், கிடாரங்கொண்டான், உள்ளிட்ட தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் விட்டு, விட்டு பலத்தமழை பெய்தது, தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளகோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு ஆகிய பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. புயல் எச்சரிக்கை காரணமாக இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    வேதாரண்யம் தாலுகாவில் உள்ள ஆதனூர், கருப்பம்புலம், பஞ்சநதிக்குளம், தென்னம்புலம், நெய்விளக்கு, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. சில பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழை மானாவாரி சம்பா சாகுபடிக்கு நல்ல மழை என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே வேளையில் பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    புயல் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் நேற்று 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்து விட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வேதாரண்யம் மானாவாரி பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா சாகுபடிக்கு இந்த மழை ஏற்றதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
    லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகையை அடுத்த நாகூர் கால்மாட்டு தெருவில் நேற்று லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுவதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதுமான் யூசுப் (வயது33) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதுமான் யூசுப்யை கைது செய்தனர்.
    வேதாரண்யம் அருகே தூக்கில் முதியவர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கோமதிக்கண்ணன் (வயது70). இவர் தற்சமயம் குடும்பத்துடன் தேத்தாக்குடி வடக்கு கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கோமதிக்கண்ணன் மூங்கில் புல்லாங்குழலை கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 28-ந்தேதி வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் வேதாரண்யம் அருகே பூப்பட்டி-மறைஞாயநல்லூர் உச்சகட்டளை ரோட்டில் ஒரு மரத்தில் கோமதிக்கண்ணன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோமதிக்கண்ணனின் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதிக்கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் நாகை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் நாகை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் நாகை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் சொக்கலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கீதா இளையராஜா, கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துக்குமார், ராதா, கோமதி, கால்நடை ஆய்வாளர்கள் பாரிவேந்தன், முருகேசன், முருகானந்தம், சாந்தி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கால்நடை நோய்களுக்கு தடுப்பூசி, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. நாகை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் சொக்கலிங்கம் கால்நடை வளர்ப்போருக்கு தாதுஉப்பு கலவை பாக்கெட்டுகளை வழங்கினார்.
    ×