என் மலர்
செய்திகள்

நாகை கலெக்டர்
நாகை மாவட்டத்தில் பாதுகாப்பு முகாம்களில் 11,753 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் - கலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தில் பாதுகாப்பு முகாம்களில் 11,753 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருக்குவளை, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி மற்றும் குத்தாலம் ஆகிய 8 தாலுகாக்களில் இடம்பெயர்தல் குழு, தேடுதல், மீட்பு குழு தங்குமிடம் மற்றும் பராமரிப்பு குழு என தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீஸ் துறை, சுகாதார துறை, கால்நடை துறை, வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சப்-கலெக்டர் நிலையிலான 8
அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
9 பல்நோக்கு நிவாரண மையங்கள், 22 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்பட 43 பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள முகாம்களில் 11 ஆயிரத்து 753 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக சீர்காழி தாலுகாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். 321 குடிசை வீடுகள் பகுதி சேதமும், 12 குடிசை வீடுகள் முழு சேதமும் அடைந்துள்ளன. 24 ஓட்டு வீடுகள் பகுதி சேதம் அடைந்தன. 6 மாடுகள் 5 கன்றுகள் மற்றும் 31 ஆடுகள் என மொத்தம் 42 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 30 மின் கம்பங்கள் சேதமடைந்தது. இதில் 23 மின் கம்பங்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 981 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாக்க 3 மருத்துவ முகாம்களும், 29 நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






