என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமம் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40). இவர் வீட்டு வாசல் வழியே உப்பளத்திற்கு மணல் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு அடிக்கடி ஒரு டிராக்டர் சென்று வந்ததாம். இதனால் பல தொல்லைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்டதால் முன்விரோதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அதே ஊரை சேர்ந்த வீரமணி, ஐயப்பன் அண்டர்காடு சேர்ந்த முத்துக்குமரன் ஆகிய மூவரும் சுரேஷ்குமாரை ஆதனூர் தூண்டிக்காரன் கோவில் அருகே மினி டிராக்டரில் சென்றபோது வழிமறித்து கத்தியால் குத்தி, சுத்தியலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுரேஷ்குமார் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ் பெக்டர் பத்மசேகர் வழக்கு பதிவு செய்து அதில் முத்துக்குமரனை (37) கைது செய்து விசாரித்து வருகிறார்.தலைமறைவான இருவரை தேடி வருகின்றார்.

    பழையார் கொட்டாய்மெடு பகுதியை சேர்ந்த 2000 மீனவர்களும், பூம்புகார் பகுதியில் 2000 மீனவர்களும், சந்திரபாடி பகுதியில் 2 ஆயிரம் மீனவர்களும் என சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஏராளமான சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தன. இதனால் அரசு உத்தரவுப்படி சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த தடை விதித்து கடுமையான கட்டுப்பாடுகளை மீன்வளத்துறை பிறப்பித்து கண்காணித்து வந்தது. இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத சூழல் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது.

    சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்ததால் தேர்தல் களத்தில் போட்டியிடும் கட்சிகள் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சில வாக்குறுதிகளை அளித்தனர். இந்நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரும் விவகாரத்தில் ஆதரவான நிலைப்பாடு எதுவும் மீனவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்படாததால் நேற்று முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து உண்ணாவிரதம் தொடங்கினர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார் மற்றும் சந்திரபாடி ஆகிய பகுதிகளில் சுருக்குமடி வலையை ஆதரித்து தொழில் செய்ய அனுமதி கோரியும், 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த கோரியும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர்.இதில் திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் திருமுல்லைவாசல் முகத்துவாரம் பகுதியில் சாமியானா அமைத்து நேற்று காலை முதல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோ மடவா மேடு பகுதியிலும் தட்காஸ், பழையார் கொட்டாய்மெடு பகுதியை சேர்ந்த 2000 மீனவர்களும், பூம்புகார் பகுதியில் 2000 மீனவர்களும், சந்திரபாடி பகுதியில் 2 ஆயிரம் மீனவர்களும் என சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அந்தந்த பகுதியை சேர்ந்த அரசு அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைகள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்குவது உத்தரவாதம் அளிக்க வேண்டும் என மீனவர்கள் குறிப்பிட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில் நேற்று சீர்காழியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு நடந்தது. ஆனால் இதில் ஒரு தரப்பு மீனவர்கள் வராததால் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறவில்லை. மீனவர்களின் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை பல கோடி மதிப்பிலான மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து கேரளா, ஆந்திரா என வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதும் தடைபட்டுள்ளது.

    பெருமளவில் இதனால் வர்த்தகமும் பாதிப்படைந்துள்ளது. மீனவர்களின் போராட்டத்தால் கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகள், பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு சீர்காழி, திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார் ஆகிய பகுதிகளில் லேசாக மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மீனவர்கள், மீனவ பெண்கள் பந்தலில் படுத்திருந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

    மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து சீர்காழி டி.எஸ்.பி. லாமேக் தலைமையில இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சந்திரா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர் கடற்கரை கிராமங்களில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் இன்று காலையும் 2வது நாளாக தொடர்ந்து மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டு வருகின்றனர். இதேபோல் நாகை மாவட்டத்திலும் நம்பியார் நகர் பகுதியில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகூரை அடுத்த தெத்தி காலேஜ் புதுரோடு பகுதியை சேர்ந்த முகமது ஆரிப் மகன் தமிம் அன்சாரி (வயது 24). கூலி தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் மருந்து, மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது வயிற்று வலி அதிகமானதால் தமிம் அன்சாரி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த உறவினர்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிம் அன்சாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே ஏரவாஞ்சேரி மாரியம்மன் கோவில் பகுதியில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். . விசாரணையில் அவர், நீலப்பாடி, கொல்லுபட்டறை தெருவை சேர்ந்த விஜேயந்திரன் (வயது 40) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜேந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் நீலப்பாடி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சாராயம் விற்ற கூத்தூர் ராயத்தமங்கலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    திட்டச்சேரி:

    திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமை வருவாய் கோட்டாட்சியர் மணிவேல், ஒன்றிய ஆணையர் சுந்தர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். .இதில் 240 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவர்கள் மணிவேல், பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் பரமநாதன், பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் ஜெகவீரபாண்டியன், மாதவன், அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மதிராணி மகேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மருங்கூர் பகுதிகளை சேர்ந்த 213 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் மருத்துவர்கள் மணிவேல், பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் அருணா சந்தர், சுகாதார ஆய்வாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நாகையில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    சிக்கல்:

    நாகையில் சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்தநிைலயில் நேற்று மாலை முதல் திடீரென மழை பெய்தது. மாலை கருமேகங்கள் சூழ்ந்து இருட்டத் தொடங்கியது. பின்னர் 6.30 மணியளவில் சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அப்போது மின்சாரம் தடைபட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாகை பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகையில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதைப்போல கீழ்வேளூர் மற்றும் அதன்சுற்று வட்டார பகுதி மக்களும் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயிலில் சிக்கி அவதிப்பட்டனர். இந்தநிலையில்நேற்று மாலை பெய்த பலத்த மழை நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்கல், பொரவச்சேரி, ஆழியூர், அகரகடம்பனூர், மற்றும் கீழ்வேளூர், கோகூர், வடகரை, ஆணைமங்கலம், ஓர்குடி, ஒக்கூர், தேவூர், பட்டமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை, வெண்மணி, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மேலவாஞ்சூர், முட்டம், மேல நாகூர், தெத்தி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருமருகல் ஒன்றிய பகுதிகளில் திருமருகல், திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், போலகம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிர் செய்துள்ள குறுவை நெற்பயிருக்கு போதுமான அளவு நீர் கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையிலும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலத்த காற்றால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டதால் மின்சாரம் 1 மணி நேரத்திற்கு மேல் தடைபட்டது.

    வேதாரண்யம் அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேதாரண்யம்: 

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினத்தில் வயர்மேன் ஆக பணிபுரிபவர் குமார் (வயது 42). அகஸ்தியம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர். 

    இவர் கரியாப்பட்டினம் மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து பணிக்காக குரவப்புலத்திற்கு செல்லும்போது செண்பகராயநல்லூர் வளைவு அருகே செங்கல் ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கி கீழே விழுந்து விட்டார். அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். 

    கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அகரக்கொந்தகை, வாழ்மங்கலம் பகுதிகளை சேர்ந்த 150 பேர் கலந்து கொண்டு காய்ச்சல், சளி, நிமோனியா காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் மருத்துவர் மணிவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், சுகாதார ஆய்வாளர்கள் பரமநாதன், பிரபாகரன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வேதாரண்யம் அருகே இடப்பிரச்சினையில் முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கையிலவானம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது80), இவருடைய தம்பி தங்கராசு(76). இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று கோதண்டபாணிக்கும் அவரது தம்பி தங்கராசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு தங்கராசு மகன் கார்த்தி(26), மனைவி ஜோதி ஆகிய 2 பேரும் வந்துள்ளனர். பின்னர் தங்கராசு அவரது மகன், மனைவி ஆகிய 3 பேரும் சேர்ந்து கோதண்டபாணியை தரக்குறைவாக திட்டி அரிவாளால் வெட்டினர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராசு, கார்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    நாகூர் பகுதியில் சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீ்சார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கீழவாஞ்சூர் பகுதியில் இருந்து சந்தேகப்படும்படி நடந்து வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதில் கூறியதால் அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் இருந்தது.மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சித்தாம்பூர் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வினோத்குமார் (வயது 24), திருக்குவளை அவணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் அசோக் (38) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 லிட்டர் சாராயம், 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த நாகை நம்பியார் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் சத்திவேல் (30), நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்த டேவிட் பெர்ணான்டஸ் மகன் லிவிஸ்டன் (26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    திருமருகல் அருகே வேலைக்கு செல்லாமல் இருந்ததை தந்தை கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் சதீஷ் (வயது 25).இவர் பி.எஸ்சி. கேட்டரிங் மற்றும் ஓட்டல் நிர்வாகம் படிப்பை படித்து விட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் மூடப்பட்டதால் வேலை இல்லாமல் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேலைக்கு செல்லாமல் சதீஷ் வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தந்தை பாலகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் இருக்கிறாயே சிரமமாக உள்ளது. எனவே வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார்.

    தந்தை கண்டித்ததால் மனமுடைந்த சதீஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மோட்டார் சைக்கிளில் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சதீசின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே நீலப்பாடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது மரக்கிளை உடைந்ததால் தடுமாறி மரத்தில் இருந்து ரமேஷ் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×