search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சுருக்குமடி மீனவர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்

    பழையார் கொட்டாய்மெடு பகுதியை சேர்ந்த 2000 மீனவர்களும், பூம்புகார் பகுதியில் 2000 மீனவர்களும், சந்திரபாடி பகுதியில் 2 ஆயிரம் மீனவர்களும் என சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஏராளமான சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தன. இதனால் அரசு உத்தரவுப்படி சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த தடை விதித்து கடுமையான கட்டுப்பாடுகளை மீன்வளத்துறை பிறப்பித்து கண்காணித்து வந்தது. இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத சூழல் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது.

    சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்ததால் தேர்தல் களத்தில் போட்டியிடும் கட்சிகள் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சில வாக்குறுதிகளை அளித்தனர். இந்நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரும் விவகாரத்தில் ஆதரவான நிலைப்பாடு எதுவும் மீனவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்படாததால் நேற்று முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து உண்ணாவிரதம் தொடங்கினர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார் மற்றும் சந்திரபாடி ஆகிய பகுதிகளில் சுருக்குமடி வலையை ஆதரித்து தொழில் செய்ய அனுமதி கோரியும், 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த கோரியும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர்.இதில் திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் திருமுல்லைவாசல் முகத்துவாரம் பகுதியில் சாமியானா அமைத்து நேற்று காலை முதல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோ மடவா மேடு பகுதியிலும் தட்காஸ், பழையார் கொட்டாய்மெடு பகுதியை சேர்ந்த 2000 மீனவர்களும், பூம்புகார் பகுதியில் 2000 மீனவர்களும், சந்திரபாடி பகுதியில் 2 ஆயிரம் மீனவர்களும் என சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அந்தந்த பகுதியை சேர்ந்த அரசு அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைகள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்குவது உத்தரவாதம் அளிக்க வேண்டும் என மீனவர்கள் குறிப்பிட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில் நேற்று சீர்காழியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு நடந்தது. ஆனால் இதில் ஒரு தரப்பு மீனவர்கள் வராததால் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறவில்லை. மீனவர்களின் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை பல கோடி மதிப்பிலான மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து கேரளா, ஆந்திரா என வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதும் தடைபட்டுள்ளது.

    பெருமளவில் இதனால் வர்த்தகமும் பாதிப்படைந்துள்ளது. மீனவர்களின் போராட்டத்தால் கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகள், பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு சீர்காழி, திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார் ஆகிய பகுதிகளில் லேசாக மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மீனவர்கள், மீனவ பெண்கள் பந்தலில் படுத்திருந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

    மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து சீர்காழி டி.எஸ்.பி. லாமேக் தலைமையில இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சந்திரா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர் கடற்கரை கிராமங்களில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் இன்று காலையும் 2வது நாளாக தொடர்ந்து மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டு வருகின்றனர். இதேபோல் நாகை மாவட்டத்திலும் நம்பியார் நகர் பகுதியில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×