என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் விழுந்தமாவடி மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). இவர் சின்னதும்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது கள்ளிமேடு கடைத்தெருவில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் பொறுப்பு கன்னிகா, சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சண்முகத்திற்கு மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
நாகையை அடுத்த புதிய கல்லார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பொன்னப்பன்(60), முருகவேல்(50) ஆகிய 3 மீனவர்களும் கடந்த 24-ந் தேதி காலையில் கல்லார் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கோடியக்கரை நோக்கி சென்றனர்.
இவர்கள் கடந்த 25-ந் தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் நேற்று வரையில் மீனவர்கள் கரை திரும்பி வரவில்லை. இதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் படகு உரிமையாளர் ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் ராஜ்குமார் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் கல்லார் பஞ்சாயத்தார் ராமச்சந்திரனிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 3 பேர் மாயமாகி உள்ளதால் அவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் பகுதியில் எஸ்.பி. ஜவகர் உத்தரவின் பேரில் போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
காரை ஓட்டி வந்த திருவாரூர் கமலாபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது35) என்பவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் 17 ஆயிரத்து 550 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது.விசாரணையில் விற்பனைக்காக காரைக்காலில் இருந்த சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி விஜி (வயது 50 ). இவர் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த விஜி வீட்டில் பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை அருகே உள்ள அந்தணப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 55) தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (50).
இந்த நிலையில் இன்று காலை ராஜலெட்சுமி வீட்டின் பின்புறம் நின்று சமையலுக்காக நண்டு கழுவி கொண்டிருந்தார். அப்போது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கிடந்ததை பார்த்து அதனை கையால் எடுத்து தூக்கிவீச முயன்றார். இதில் ராஜலட்சுமி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த கணவர் பழனிவேல் ராஜலட்சுமியை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது.
இதில் கணவன்-மனைவி இருவரும் உடல்கருகி இறந்தனர். தகவல் அறிந்த நாகை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனிவேல், ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த தம்பதிக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டார்மங்கலம் வடக்குத்தெரு சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குண்டும், குழியுமாக சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைத்து தர கோரியும், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க கோரியும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தராததால் மக்கள் அவசர காலங்களில் வெளியில் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். .குறிப்பாக இந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர இயலாத நிலை உள்ளது. இதனால் விரக்தி அடைந்த கிராம மக்கள் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
உடனடியாக சாலை வசதி செய்து தராவிட்டால் அடுத்த கட்டமாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் என்பவரின் மகள் ஷோபனா (13). குத்தாலம் அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 7-ந் தேதி இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமா பாலசுப்ரமணியன் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சென்றவர் அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் பல்வேறு பகுதியில் தேடிய சிறுமியின் உறவினர்கள் அன்றிரவே குத்தாலம் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடிய உறவினர்கள், சிறுமியின் மாமா பாலசுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி அணிந்திருந்த லெக்கின்ஸ் பேண்ட் கிழிந்து ரத்தக்கரை இருந்தது. மயிலாடுதுறை டி.எஸ்.பி வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார், வில்லியநல்லூர் கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் உடலை வாய்க்காலில் இருந்து உறவினர்கள் வீட்டிற்கு தூக்கி வந்துவிட்டதால் வாய்க்காலில் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரிலேயே போலீசார் தொடர் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியினர் சிலரை போலீசார் கண்காணிப்பு வளைத்தில் கொண்டுவந்து அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதனிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி சிறுமியின் சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்த தகவல் அறிந்த அதே தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பிரபாகர் என்ற வாலிபர் (25) அங்கிருந்து நழுவி பஸ்சில் ஏறி தப்பிக்க முயன்றபோது போலீசார் அவரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அச்சிறுமியின் உறவினரான பிரபாகர் கடந்த 3 மாதங்களாக அச்சிறுமியை காதலித்து வந்ததும், அச்சிறுமி பலமுறை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியதும் தெரியவந்தது. சம்பவத்தன்று சிறுமி ஷோபாவை தனியாக வரச்சொன்ன பிரபாகர் சிறுமியை பாலியல் கொடுமை செய்துள்ளார்.
பின்னர், அப்பகுதி இளைஞர்களுடன் சிறுமி சகஜமாக பேசுவதை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது வேட்டியால் சிறுமியின் கழுத்தை நெறித்துள்ளார். இதில் மயக்கமடைந்த சிறுமியை வாய்க்காலில் தூக்கிப்போட்டுள்ளார். இதில் சிறுமி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். பின்னர் பிரபாகர், உறவினர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடுவது போல் நடித்துள்ளார்.
பிரபாகரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்து நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இதன்மூலமாக கடந்த ஒரு வாரமாக நீடித்துவந்த சிறுமியின் மரணத்தில் நிலவிய மர்மத்துக்கு விடை கிடைத்துள்ளது.
நாகை மாவட்டம் நாகப்பட்டினம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை மற்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையால் குறைந்த அளவிலான மீனவர்களே கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவனேசன் மற்றும் சிவக்குமார் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை சமாந்தன்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த முருகையன் (38), குட்டியாண்டி (48), வீரசேகரன், அமிர்தலிங்கம்(38), இளங்கோவன் (48), பாண்டியன் (30), உத்திராபதி (33), தமிழ்வாணன் (48), சிவகுமார் (48), ரவி (44), சாமிநாதன் (20),
எழிலரசன் (36), அகத்தியன் (40), சிவராஜ் (35) சிவ சக்திவேல் (32) சம்பத் (40), கந்தன் (40), முருகையன் (35), ஆறுமுகம் (50), வினித் (28), விஜயேந்திரன் (39), சுதாகர் (32), தன்ராஜ் (28) ஆகிய 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் இந்திய கடல் எல்லையான கோடியக்கரை தென்கிழக்கே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன.
இதைப்பார்த்த தமிழக மீனவர்கள் உடனடியாக தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் இலங்கை ரோந்து கப்பல் நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஏன் எங்கள் படகுகளை சுற்றி வளைக்கிறீர்கள். மீன் பிடிக்க விரித்த வலைகள் சேதமாகிறது என்று கேட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் நீங்கள் வலைகளை விரித்திருப்பது இலங்கை நாட்டின் எல்லை. பல முறை உங்களை எச்சரித்தும் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறீர்கள். எனவே உங்கள் 23 பேரையும் கைது செய்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே நாகை மாவட்ட மீனவர்களை கைது செய்து அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து இலங்கையின் பருத்தித்துறை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அதன் பேரில் 23 பேரும் 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்று மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. கொரோனா பரிசோதனைக்கு பின் மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணைக்கு பின் 23 மீனவர்களையும் வருகிற 28-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 23 மீனவர்களையும் இலங்கையில் உள்ள காரை நகருக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் நாகை மாவட்ட 2 விசைப்படகுகளும் காரை நகர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்ட எம்.எல்.ஏ., முகமது ஷாநவாஸ் கூறுகையில், இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகள் மற்றும் வலைகள் சேதப்படுத்தப்படுவதும், உடமைகள் கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மேலும் வேதனையை அளிக்கிறது. இலங்கை கடற்படையின் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்திய ராணுவ தளபதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவை அவமதிக்கும் வகையில் இத்தகைய அத்துமீறலில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. எனவே இதை இந்திய அரசு கண்டிப்பதோடு, சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது விசைப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






