என் மலர்
மதுரை
- தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது.
- திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
மதுரை:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அர்ச்சகரான சீதாராமன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் கோவில்களின் சிலைகளை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோவில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது, மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவிலில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவர்களுடைய தனிப்பட்ட யூ-டியூப் சேனலில் பதிவிடுகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரீகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றனர்.
பின்னர், திருச்செந்தூர் கோவிலின் உள்ளே அர்ச்சகர் உட்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து, மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கக்கூடாது.
கோவிலின் வாசலிலேயே செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்த பின், அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கோவிலின் உள்ளே செல்போன் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்பு கரங்கள் கொண்டு அடக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை கமிஷனர் உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.
இந்த சுற்றறிக்கையின் நகலை இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடை பயணம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
- திருமங்கலம் நெடுஞ்சாலை துறை வளாகம், ஊராட்சி அலு வலகம் வழியாக ராஜாஜி சிலையில் முடிகிறது.
மதுரை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 3 நாள் நடை பயண பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மதுரை கள்ளிக்குடி உதவி கல்வி அலுவலர் அலுவ கத்தில் சங்க நிர்வாகிகள் ஜெயராஜராஜேஸ்வரன், சரவணன் ஆகியோர் தலைமையில் வருகிற 15-ந்தேதி நடைபயண பேரணி தொடங்குகிறது. அங்கிருந்து திருமங்கலம் நெடுஞ்சாலை துறை வளாகம், ஊராட்சி அலு வலகம் வழியாக ராஜாஜி சிலையில் முடிகிறது.
திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தில் 16-ந் தேதி தொடங்கும் பேரணி பசுமலை பஸ் நிறுத்தம், பழங்காநத்தம் கூட்டுறவுத்துறை அலுவலகம், காளவாசல் பி.ஆர்.சி. டெப்போ வழியாக எல்லீஸ் நகர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக வளாகத்தில் முடிகிறது.
மதுரை அரசு பாலி டெக்னிக் வளாகத்தில் 17-ந் தேதி தொடங்கும் நடை பயண பேரணி சம்பள கணக்கு அலுவலகம், திருமலை நாயக்கர் மகால், செல்லூர் கல்லூரி கல்வி அலுவலகம், தல்லாகுளம் மாவட்ட கல்வி அலுவலகம், தாமரைத் தொட்டி நெடுஞ்சாலை துறை அலுவலகம், ராஜா முத்தையா மன்றம் வழியாக மாலை 5.45 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை வந்தடைகிறது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்க நிர்வாகிகள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியு றுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கின்றனர்.
- தனியார்துறை மகளிர் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரை
கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஒசூர் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஆலையில் இளநிலை தொழில் நிபுணர் பதவிக்கு 1000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே 18- 20 வயது வரை உள்ள 2020, 2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு பயிற்சியுடன் மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். அந்த பதவிகளுக்கான நேர்காணல், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 15- தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.
இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் கல்விச்சான்றுடன், நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம். தனியார்துறை நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பாதிக்காது.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
- பெண்கள் ஆக்கி போட்டியில் அமெரிக்கன் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
- அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற 4 கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
மதுரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் ஆக்கி போட்டி அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.
அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற 4 கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதலாவது அரையிறுதியில் அமெரிக்கன் கல்லூரி அணி, மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி அணியை 8-0 என்ற கோல்கணக்கில் வென்றது. 2-வது அரையிறுதியில் லேடி டோக் கல்லூரி அணி, பாத்திமா கல்லூரி அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது.
இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரியை 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.
வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.
- புதிய வரைவு வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.
- கிழக்கு தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தின் புதிய வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.அதனை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை வெளியிட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் 12 லட்சத்து 96 ஆயிரத்து 75 ஆண்களும், 13 லட்சத்து 38 ஆயிரத்து 950 பெண்களும், 213 திருநங்கைகளும் உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 26 லட்சத்து 35 ஆயிரத்து 238 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதியில் குறைந்தபட்சமாக 2 லட்சத்து 15 ஆயிரத்து 500 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 778 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 708 பேர் பெண்கள், 14 பேர் திருநங்கைகள்.
மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு தொகுதியில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 222 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 89 பேர் ஆண்கள். ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 871 பேர் பெண்கள். 62 பேர் திருநங்கைகள்.
மேலூர் தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 82 ஆண்களும், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 114 பெண்களும், 3 திருநங்கைகள் உள்பட 2 லட்சத்து 39 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை வடக்கு தொகுதியில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 841 ஆண்களும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 470 பெண்களும், 43 திருநங்கைகளும், ஆக மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 354 பேர் உள்ளனர்.
மதுரை தெற்கு தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 508 ஆண்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 79 பெண்களும், 24 திருநங்கைகள் உள்பட 2 லட்சத்து 24 ஆயிரத்து 611 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை மத்திய தொகுதியில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 601 ஆண்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 870 பெண்களும், 18 திருநங்கைகள் உள்பட 2 லட்சத்து 30 ஆயிரத்து 489 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதி யில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 649 ஆண்களும், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 445 பெண்களும், 5 திருநங்கைகள் உள்பட 3 லட்சத்து 1099 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 421 ஆண்களும், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 133 பெண்களும், 34 திருநங்கைகள் உட்பட 3 லட்சத்து 13 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர்.
திருமங்கலம் தொகுதியில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 742 ஆண்களும், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 186 பெண்களும், 8 திருநங்கைகளும் உள்பட 2 லட்சத்து 70 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர்.
உசிலம்பட்டி தொகுதியில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 364 ஆண்களும், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 74 பெண்களும், 2 திருநங்கைகள் உள்பட 2 லட்சத்து 74 ஆயிரத்து 440 வாக்காளர்கள் உள்ளனர்.
- ஆகாய தாமரைகளை அகற்றி குண்டாற்றை சுத்தம் செய்யவேண்டும் என நகராட்சி தலைவர்-கவுன்சிலர்கள் தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
- ரேசன் கடைகளில் முதியவர்களால் கைரேகை பதிவு செய்யமுடியாதநிலை இருப்பதால் அவர்களால் பொருள்களை ரேசன் கடையில் பெற இயலவில்லை.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் வார்டுகுழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல வார்டுகளில் பொதுமக்கள் ரேஷனில் பொருள்கள் சரிவர வழங்குவதில்லை, திருமங்கலம் நகரில் ஓடும் குண்டாற்றில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து அடைப்பை ஏற்படுத்தி யுள்ளது என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கவுன்சிலர்கள் ஆகியோர் தாசில்தார் சிவராமனை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
அப்போது அவர்கள் கூறு கையில், திருமங்கலத்தில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது பகுதியில் ரேசன் பொருள்கள் சரிவரை விநியோகிப்பதில்லை, பலருக்கும் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என புகார் செய்தனர்.
மேலும் ரேசன் கடைகளில் முதியவர்களால் கைரேகை பதிவு செய்யமுடியாதநிலை இருப்பதால் அவர்களால் பொருள்களை ரேசன் கடையில் பெற இயல வில்லை. மழைகாலம் துவங்கியுள்ள நிலையில் திருமங்கலம் நகரில் ஓடும் குண்டாற்றில் வளர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்றவேண்டும், ஷட்டரை திறந்துவிட்டு அடைப்பு களை நீக்கி நீர்வரத்து கால்வாய் மூல மாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த னர்.
நகராட்சி கவுன்சிலர்கள், தலைவர்களின் கோரிக்கை யின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார்.
- பெற்றோர் மகளிடம் சமரசம் பேசி கணவருடன் சேர்ந்து வாழும் படி கூறவே மனமுடைந்த மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
- சிறுமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள சின்ன உலகாணியை சேர்ந்த பிளஸ்-2 வகுப்பு மாணவிக்கும் கேரள மாநிலம் வண்டி பெரியார் பகுதியை சேர்ந்த உறவினரான ராஜாவிற்கு (வயது27) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்பு மாணவி கணவருடன் கேரளாவில் குடியேறியுள்ளார். திருமணமான 4 மாதத்திற்குள் அவர்களுக்குள் கருத்து வேறு ஏற்படவே தற்போது மாணவி கணவருடன் கோபித்து கொண்டு கள்ளிக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இங்கு அவரது பெற்றோர் மகளிடம் சமரசம் பேசி கணவருடன் சேர்ந்து வாழும் படி கூறவே மனமுடைந்த மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடனே அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் மைனர் பெண் என்பதால் இது குறித்து கள்ளிக்குடி சமூகநலத்துறை அலுவலர் ரூபிஅருள்மணிக்கு தகவல் கொடுத்தனர். அவர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அவர் 17வயது மைனர் பெண் என்பது தெரியவந்தது. திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது கணவர் ராஜா, அவரது பெற்றோர் சந்திரபோஸ், பேச்சியம்மாள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலி கும்பல் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கிகள் இயக்கி வருவதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுக்கு தகவல் அனுப்பியது.
- ரிசர்வ் வங்கியின் அனுமயின்றி செயல்பட்ட இந்த வங்கிக்கு சீல் வைக்கப்பட்டது.
திருமங்கலம்:
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தங்களது அனுமதியின்றி போலி கும்பல் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கிகள் இயக்கி வருவதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுக்கு தகவல் அனுப்பியது.
இதனை தொடர்ந்து சென்னை கிரைம்பிராஞ்ச் காவல் ஆணையா் சங்கர் ஜீவால் உத்தரவுபடி மாநிலம் முழுவதும் போலியாக இயங்கி வந்த வங்கி கிளைகளில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள மதுரை ரோட்டில் செயல் பட்டு வந்த ஊரக மற்றும் வேளாண்மை விவசாய கூட்டுறவு வங்கியில் சென்னை க்ரைம்பிரிவு போலீசார் நேற்று இரவு சோதனை நடத்தினர்.
இந்த வங்கியில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி கொடுப்பதாக கூறி இயங்கியுள்ளது. போலீசாரின் சோதனையில் வங்கியில் இருந்த ஆவணங்கள், இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களின் ஆவணங்கள், முத்திரை, வங்கியின் பெயர் பலகை முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
ரிசர்வ் வங்கியின் அனுமயின்றி செயல்பட்ட இந்த வங்கிக்கு சீல் வைக்கப்பட்டது. மிகவும் ரகசியமாக இந்த வங்கியில் சோதனை நடத்தியதால் பொதுமக்களுக்கு எதுவும் தெரியவரவில்லை. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் போலி வங்கி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாஜக எவ்வளவு சீட் வாங்க போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் அல்ல இது.
- பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான மணிநகரில் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-
பிரதமர் மோடி, 11ந் தேதி மதியம் 1.50 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் பிற்பகல் 2.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். பிரதமர் மோடிக்கு காந்தி கிராமத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
காந்தி கிராம பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு 4.30 மணிக்கு பிரதமர் விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்கிறார். மகாத்மா காந்தி 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த இந்த கிராம பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பிரதமர் வருகிறார்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் இந்த முறை, பாஜக சரித்திரத்தில் எவ்வளவு சீட் ஜெயிச்சு இருக்கிறதோ அதை விட ஒரு சீட் அதிகமாக ஜெயிக்கும். தமிழக பாஜக தலைவர்கள் பிரச்சாரத்திற்கு குஜராத் செல்கிறார்கள். குறிப்பாக நான் பிரதமரின் சொந்த தொகுதியான மணிநகரில் பிரச்சாரம் செய்ய உள்ளேன். அகமதாபாத்தில் உள்ள அந்த தொகுதியில் 35 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். பரோடா உள்பட பல்வேறு பகுதிகளிலும் பாஜக மூத்த தலைவர்களும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இந்த முறை குஜராத் தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெறும். அதேபோல் இமாச்சல் பிரதேசத்திலும் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும். குஜராத்தல் இரண்டாவது மூன்றாவது இடம் யாருக்கு என்பதுதான் இப்போது போட்டி. காங்கிரஸ் இடத்தை ஆம் ஆத்மி பிடிக்குமா? அதுவும் குறிப்பாக தற்போது நடைபெற்று முடிந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் வாங்கவில்லை.
அதை பார்க்கும் போது காங்கிரஸ் எப்படி பின்னோக்கி சென்றிருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் குஜராத் தேர்தல் என்பது பாஜக எவ்வளவு சீட் வாங்க போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் அல்ல. பல ஆண்டு காலமாக அங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் தேர்தலில் இடமிருக்கிறதா, இரண்டு மூன்று இடங்களிலாவது அவர்கள் ஜெயிப்பார்களா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கப் போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பொறியியல் படிப்பில் லட்சத்தில் 69 பேர் தான் தமிழில் படித்து வருகின்றனர்.
- பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் இந்தி மொழி திணிக்கப்படுவது இல்லை.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா அலுவலகம் பி.பி.குளம் பகுதியில் அமைந்து உள்ளது. தற்போது இந்த அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில்தான் போலீசாருக்கு லத்தி தரப்பட்டு உள்ளது. இதனை அவர்கள் ஆயுத பூஜை தவிர மற்ற நேரங்களில் எடுப்பது இல்லை. போலீசார் லத்திக்கு பூஜை செய்வதை விட்டு விட்டு, பயன்படுத்த தொடங்க வேண்டும்.
அப்போது தான் கஞ்சா குடிப்பவர்கள், வழிப்பறி செய்பவர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த முடியும். தமிழக அரசு போலீசாரின் கைகளை கட்டி போட்டு உள்ளது. இது தமிழகத்தை மேலும் சீரழித்து விடும்.
மதுரை மாநகர் பா.ஜ.க. சார்பில் 'எனது பூத் வலிமையான பூத்' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
தமிழகத்தில் இந்தி திணிப்பு நடப்பதாக கூறும் அமைச்சர் பொன்முடி, முதலில் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு வரை இந்தி 3-வது மொழியாக தான் இருந்தது. அதன் பிறகு தேசிய கல்வி கொள்கையில் 3-வது மொழி என்று இடம் பெற்று உள்ளது. இந்தி மொழியை திணிக்ககூடாது என்பது தான் பிரதமரின் விருப்பம். தமிழகத்தில் பா.ஜ.க.வின் புதிய கல்வி கொள்கை, 'இல்லம் தேடி கல்வி' என்ற மாற்றுப் பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
பொறியியல் படிப்பில் லட்சத்தில் 69 பேர் தான் தமிழில் படித்து வருகின்றனர். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் இந்தி மொழி திணிக்கப்படுவது இல்லை.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24-ந்தேதி 'மனித வெடிகுண்டு தாக்குதல்' என்றேன். குண்டு வெடித்து 54 மணி நேரம் கழித்து தான், 'பயங்கரவாத தாக்குதல்' என்று கூறுகின்றனர். தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி, பா.ஜ.க.விற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். கோவை வெடிகுண்டு சம்பவத்தை பா. ஜனதா கட்சி தான் வெளியே கொண்டு வந்தது. அந்த சம்பவத்தை மறைத்தது ஆளும் தி.மு.க. தான்.
பா.ஜ.க. மட்டும் அம்பலப்படுத்தவில்லை என்றால் சிலிண்டர் குண்டுவெடிப்பில் இறந்த முபின் குடும்பத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு வேலையை கொடுத்து இருப்பார். ஆர்.எஸ். பாரதி அரசியலுக்காக பேசி வருகிறார்.
மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடந்த வன்முறை சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் பீர்பாட்டில் எடுத்து செல்லும் நிலைதான் உள்ளது. கட்டுக்கோப்பாக இருந்த தமிழகம் மது, கஞ்சாவால் சீரழிந்து வருகிறது.
5 ஆண்டுகளில் தமிழகம் எங்கே செல்லும்? என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது. குஜராத் தேர்தல் முடிவு என்பது சரித்திரத்தில் ஏற்கனவே இருந்ததை விட கூடுதலாக ஒரு சீட் பெற்று பா.ஜ.க வெற்றி பெறும். தமிழர்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வோம்.
குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. இமாலய வெற்றி பெறும். அங்கு 2-வது இடத்திற்கு தான் காங்கிரசும் ஆம்-ஆத்மியும் போட்டியிடுகின்றன.
ஜனநாயகத்தில் போராட்டம் மட்டுமே தீர்வு. தமிழகம் முழுவதும் 1204 இடங்களில் பால் விலை உயர்வை கண்டித்து உற்பத்தியாளர்களுடன் இணைந்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
சென்னைக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி வழங்கி உள்ளது. அதனை பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்துவது தான் அரசின் வேலை. ஆனால் அமைச்சர்கள், மேயர் ஆகியோர் தற்போது ரோலக்ஸ் விளையாட்டு போல மாற்றி மாற்றி பேசுகின்றனர். மத்திய அரசின் பணத்தை முறையாக பயன்படுத்துவது இல்லை.
பெரிய அளவிலான மழை பெய்யாத நிலையில், சென்னை தடுமாறுகிறது. திருப்புகழ் ஐ.ஏ.ஏஸ், மோடியின் அன்பை பெற்றவர். மோடியிடம் பாடம் கற்றவர். அவரது தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து உள்ளது. அதனால் சிறப்பாக பணியாற்றுவார்.
பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி மதியம் 1.50 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அதன் பிறகு 2.20 மணிக்கு திண்டுக்கல் காந்திகிராமம் செல்கிறார். அங்கு அவருக்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் உள்ள காய்கறி சந்தைக்கு நேரில் சென்று வியாபாரிகளிடம் குறைகளை கேட்டார்.
அப்போது தமிழக அரசின் சொத்துவரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து, பா.ஜ.க. வர்த்தக அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
அப்போது தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வை வாபஸ் பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள், மனுக்களை கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அண்ணாமலை, இதுகுறித்து மத்திய அரசுக்கு தெரிவிப்பதாக கூறினார்.
- ஏழை மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
- இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.
அவனியாபுரம்
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. இதனால் விலைவாசி உயர்வு ஏறும் நிலை ஏற்படுகிறது.
ஏற்கனவே மின்சார கட்டண உயர்வு கடுமையாக பாதிக்கும் வேளையில் பால் விலை உயர்வும் மக்களை வறுமை சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். எனவே தமிழக அரசு உடனே போர்க்கால நடவடிக்கையாக பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையான குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் தருவதாக கூறி இன்று வரை அதை தராமல் குடும்பத் தலைவிகளை ஏமாற்றியதை கண்டித்தும், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் என்று கூறி சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை குறைத்ததை கண்டித்தும், எளிய மக்களை பாதிக்கும் வகையில் வீட்டு வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், பத்திரப்பதிவு துறையில் உள்ள முறைகேடுகளை களையவும், தற்போது நடைமுறையில் உள்ள பத்திரப்பதிவின் கடினமான முறையை மாற்றி ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி வாழும் 1 கோடி நடுநிலையாளர்களை வாழ்வை பயன்பெறும் வகையில் பத்திரப்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமை யாக்க வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சரை வலியுறுத்துகிறோம்.
அன்றாடும் சாமானிய மக்களை பாதிக்கும் போக்குவரத்து துறையின் அபராத கட்டண உயர்வால் இந்த சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் பல இடங்களில் பொது மக்களுக்கும், போக்கு வரத்து காவல்துறைக்கும் பிரச்சினை ஏற்பட்டு மக்கள் மற்றும் காவல் துறையில் இடையே முரண்பாடு ஏற்படுகிறது.
இந்த முரண்பாடுகளை களைவதற்கு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டது.
- 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.
மதுரை
சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 மணி வரை ஏற்படும் என்பதால் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆகம விதிப்படி கோவில் நடைகள் சாத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று சந்திர கிரகணம் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி- சாயரட்சை பூஜைகள் முடிந்த பிறகு கோவில் நடை இன்று காலை 9.30 மணிக்கு சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கிரகண நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.
சந்திர கிரகணம் முடிந்து இன்று இரவு 7.30 மணிக்கு பிறகு நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி 22 உப கோவில்களின் நடைகளும் இன்று சாத்தப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து மத்திம காலத்தில் சுவாமிகளுக்கு மாலை 4.30 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்படும். அதன் பிறகு சந்திரசேகரர் புறப்பாடு நடக்கும். இரவு 7 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கும். 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன் பிறகு பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






