என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் தி.மு.க. 5 ஆண்டு கால ஆட்சியை நினைத்து மக்கள் அச்சம்- அண்ணாமலை
- பொறியியல் படிப்பில் லட்சத்தில் 69 பேர் தான் தமிழில் படித்து வருகின்றனர்.
- பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் இந்தி மொழி திணிக்கப்படுவது இல்லை.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா அலுவலகம் பி.பி.குளம் பகுதியில் அமைந்து உள்ளது. தற்போது இந்த அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில்தான் போலீசாருக்கு லத்தி தரப்பட்டு உள்ளது. இதனை அவர்கள் ஆயுத பூஜை தவிர மற்ற நேரங்களில் எடுப்பது இல்லை. போலீசார் லத்திக்கு பூஜை செய்வதை விட்டு விட்டு, பயன்படுத்த தொடங்க வேண்டும்.
அப்போது தான் கஞ்சா குடிப்பவர்கள், வழிப்பறி செய்பவர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த முடியும். தமிழக அரசு போலீசாரின் கைகளை கட்டி போட்டு உள்ளது. இது தமிழகத்தை மேலும் சீரழித்து விடும்.
மதுரை மாநகர் பா.ஜ.க. சார்பில் 'எனது பூத் வலிமையான பூத்' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
தமிழகத்தில் இந்தி திணிப்பு நடப்பதாக கூறும் அமைச்சர் பொன்முடி, முதலில் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு வரை இந்தி 3-வது மொழியாக தான் இருந்தது. அதன் பிறகு தேசிய கல்வி கொள்கையில் 3-வது மொழி என்று இடம் பெற்று உள்ளது. இந்தி மொழியை திணிக்ககூடாது என்பது தான் பிரதமரின் விருப்பம். தமிழகத்தில் பா.ஜ.க.வின் புதிய கல்வி கொள்கை, 'இல்லம் தேடி கல்வி' என்ற மாற்றுப் பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
பொறியியல் படிப்பில் லட்சத்தில் 69 பேர் தான் தமிழில் படித்து வருகின்றனர். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் இந்தி மொழி திணிக்கப்படுவது இல்லை.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24-ந்தேதி 'மனித வெடிகுண்டு தாக்குதல்' என்றேன். குண்டு வெடித்து 54 மணி நேரம் கழித்து தான், 'பயங்கரவாத தாக்குதல்' என்று கூறுகின்றனர். தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி, பா.ஜ.க.விற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். கோவை வெடிகுண்டு சம்பவத்தை பா. ஜனதா கட்சி தான் வெளியே கொண்டு வந்தது. அந்த சம்பவத்தை மறைத்தது ஆளும் தி.மு.க. தான்.
பா.ஜ.க. மட்டும் அம்பலப்படுத்தவில்லை என்றால் சிலிண்டர் குண்டுவெடிப்பில் இறந்த முபின் குடும்பத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு வேலையை கொடுத்து இருப்பார். ஆர்.எஸ். பாரதி அரசியலுக்காக பேசி வருகிறார்.
மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடந்த வன்முறை சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் பீர்பாட்டில் எடுத்து செல்லும் நிலைதான் உள்ளது. கட்டுக்கோப்பாக இருந்த தமிழகம் மது, கஞ்சாவால் சீரழிந்து வருகிறது.
5 ஆண்டுகளில் தமிழகம் எங்கே செல்லும்? என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது. குஜராத் தேர்தல் முடிவு என்பது சரித்திரத்தில் ஏற்கனவே இருந்ததை விட கூடுதலாக ஒரு சீட் பெற்று பா.ஜ.க வெற்றி பெறும். தமிழர்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வோம்.
குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. இமாலய வெற்றி பெறும். அங்கு 2-வது இடத்திற்கு தான் காங்கிரசும் ஆம்-ஆத்மியும் போட்டியிடுகின்றன.
ஜனநாயகத்தில் போராட்டம் மட்டுமே தீர்வு. தமிழகம் முழுவதும் 1204 இடங்களில் பால் விலை உயர்வை கண்டித்து உற்பத்தியாளர்களுடன் இணைந்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
சென்னைக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி வழங்கி உள்ளது. அதனை பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்துவது தான் அரசின் வேலை. ஆனால் அமைச்சர்கள், மேயர் ஆகியோர் தற்போது ரோலக்ஸ் விளையாட்டு போல மாற்றி மாற்றி பேசுகின்றனர். மத்திய அரசின் பணத்தை முறையாக பயன்படுத்துவது இல்லை.
பெரிய அளவிலான மழை பெய்யாத நிலையில், சென்னை தடுமாறுகிறது. திருப்புகழ் ஐ.ஏ.ஏஸ், மோடியின் அன்பை பெற்றவர். மோடியிடம் பாடம் கற்றவர். அவரது தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து உள்ளது. அதனால் சிறப்பாக பணியாற்றுவார்.
பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி மதியம் 1.50 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அதன் பிறகு 2.20 மணிக்கு திண்டுக்கல் காந்திகிராமம் செல்கிறார். அங்கு அவருக்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் உள்ள காய்கறி சந்தைக்கு நேரில் சென்று வியாபாரிகளிடம் குறைகளை கேட்டார்.
அப்போது தமிழக அரசின் சொத்துவரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து, பா.ஜ.க. வர்த்தக அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
அப்போது தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வை வாபஸ் பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள், மனுக்களை கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அண்ணாமலை, இதுகுறித்து மத்திய அரசுக்கு தெரிவிப்பதாக கூறினார்.






