என் மலர்
மதுரை
- மதுரை-தூத்துக்குடி சுற்றுச்சாலையில் மண்டேலா நகர் ஈச்சனேரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
- விபத்து குறித்து அரசு பஸ் டிரைவரான ராஜசேகர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கூடக்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் (வயது21), பார்த்தசாரதி(18). இவர்கள் இருவரும் கட்டிட வேலை பார்த்து வந்தனர். இன்று காலை கட்டிட வேலைக்காக மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தனர்.
மதுரை-தூத்துக்குடி சுற்றுச்சாலையில் மண்டேலா நகர் ஈச்சனேரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ், வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதியது.
இதில் நிலை தடுமாறிய அவர்கள், மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அவர்கள் சுதாரித்து எழுவதற்கு முன் இருவரின் மீதும் அரசு பஸ் ஏறி இறங்கியது. இதனால் முனீஸ்வரன், பார்த்தசாரதி ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பஸ் மோதி பலியான 2 வாலிபர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவரான ராஜசேகர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட வேலைக்கு சென்ற 2 வாலிபர்கள் அரசு பஸ்சில் சிக்கி உடல்நசுங்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- உசிலம்பட்டி அருகே உள்ள எம்.பாறைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
- பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
உசிலம்பட்டி:
பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலும் கடந்த 17-ந் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆவின் நிறுவனத்துக்கு குறைத்து பால் வழங்கி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டியில் நேற்று பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று உசிலம்பட்டி அருகே உள்ள எம்.பாறைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்கள் தாங்கள் கொண்டு வந்த 100 லிட்டர் பாலை சாலையில் கொட்டினார்கள். மேலும் தங்களது கறவை மாடுகளுடன் வந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து பால் உற்பத்தியாளர்கள் நலசங்க தலைவர் பெரியகருப்பன், செயலாளர் உக்கிரபாண்டி ஆகியோர் கூறியதாவது:-
பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் கடந்த 17-ந் தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த போராட்டம் அடுத்தடுத்த பகுதிகளுக்கு விரிவடைந்து வருகிறது. இதனால் அரசு பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்திற்கு விரைவில் உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
- சிறிது தூரம் சென்றபோது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் 2 பேரையும் அந்த கும்பல் காரில் கடத்திச்சென்றது.
- கடத்தலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சகாதீன் (வயது33). இவர் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று சகாதீன் சொக்கிகுளத்தை சேர்ந்த நண்பர் ஷாகுல் அமீது என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சிறிது தூரம் சென்றபோது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் 2 பேரையும் அந்த கும்பல் காரில் கடத்திச்சென்றது.
இதற்கிடையே கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் சகாதீன் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் கணவரை கடத்தியுள்ளோம். அவரை உயிருடன் விட வேண்டும் என்றால் ரூ. 50 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன அவர் ரூ.1 லட்சம் திரட்டியுள்ளார். அதனை கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் மோட்டார் சைக்கிளில் வந்து வாங்கிச்சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் மறுநாள் காலை மனைவியிடம் செல்போனில் பேசிய சகாதீன் தான் ஜெய்ஹிந்து புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று சகாதீனை பார்த்தனர். அப்போது அவர் தலையில் வெட்டுக்காயங்களுடன் சிகிச்சை பெறுவது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனையின் பேரில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது, பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தொடர்பாக சகாதீனுக்கும், முனிச்சாலை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த ஆத்தீப்(27) என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் ஆத்தீப், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சகாதீனை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சகாதீன், கடத்திய ஆத்தீப் மற்றும் உடந்தையாக இருந்த அப்துல் இம்ரான் (23), அகில் ஆசீப்(24), முகமது சபீக்(23) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திருமணிசெல்வம், ஹரி, வாசீம், அருள், வசந்த் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.
- நடந்து செல்வோரை குறிவைத்து செல்போன் பறித்துச்செல்கின்றனர்.
- அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்து செல்வோரை குறிவைத்து செல்போன்கள் பறித்துச் செல்லும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் நடந்து செல்வோரை தாக்கி செல்போனை பறித்துச் செல்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் விளாத்தூரை சேர்ந்தவர் ரகு(28). மதுரை வந்திருந்த இவர், ஆரப்பாளையம் டி.டி.ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ரகுவை வழிமறித்து செல்போனை பறித்துச் சென்றனர்.
சூர்யாநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(47). இவர் கூடல்நகர் ரோட்டில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் செல்போனை பறித்துச் சென்றது. இதுதொடர்பாக கரிமேடு, கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை அய்யனார்புரம் மண்டபம் தெருவை சேர்ந்தவர் ராமர்(20). இவர் சம்பவத்தன்று பனையூர் பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றார். அப்போது அவரது செல்போன் திருடு போனது. இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் செல்போனை திருடியது பனையூர் கீழத்தெருவை சேர்ந்த ராமு(37), சிவகங்கை மாவட்டம் புலியூர் மேலத்தெருவை சேர்ந்த பால்பாண்டி(39) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
மதுரை ஆலங்குளம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரோஸ்கான்(47). தனியார் மது பாரில் காவலாளியாக பணிபுரியும் இவர் சம்பவத்தன்று பாரில் உள்ள அறையில் தூங்கினார். அப்போது மர்ம நபர் அவரது செல்போனை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டை தலைநிமிரச்செய்யும் சமூகநீதிக்கான பட்ஜெட் என பசும்பொன் பாண்டியன் பாராட்டு தெரிவித்தார்.
- மதுரை மெட்ரோ ெரயில் திட்டம் ரூ. 8,500 கோடியில் செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்க றிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது-
தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை கடந்தாண்டு ரூ.62ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு ரூ.30கோடியாக குறைக்கப்பட்டிருப்பதும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 8,500 கோடியில் செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
குறிப்பாக குடும்பத்தலை விகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றிப்பதோடு பெண்கள் மகிழ்ச்சி கடலில் உள்ளார்கள். மேலும் ஏரி, குளங்கள் சீரமைப்பு, பன்னோக்கு மருத்துவ மனைகள், 16.500மெகாவாட் புதிய மின்திட்டங்கள் என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கான திட்டங்க ளை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்,
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்படும் வகையில் ரூ. 500கோடி மதிப்பில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப் படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வருங்காலங்களில் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது என்பதை தி.மு.க. அரசு எதிர்காலத்தில் சரி செய்யும் என்று நம்புகிறேன்.
இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுவதை நிதிநிலை அறிக்கை உறுதி செய்திருக்கிறது. இது தமிழ்நாட்டை தலை நிமிரச்செய்யும் சமூக நீதிக்கான பட்ஜெட்டாகும்.
தி.மு.க.வின் திராவிட முன்மாதிரி அரசு உருவாக்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கையை தயாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜ னுக்கும் எனது சார்பாகவும், அ.தி.ம.மு.க. சார்பாகவும் பாராட்டுக் களையும், வாழ்த்துக்க ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மதுரை அருகே பேரையூரில் ராணுவ வீரர் மனைவியிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- வீடு புகுந்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை கைது செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூரை சேர்ந்தவர் ராஜா, ராணுவ வீரர். இவரது மனைவி நந்தினி(வயது30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று இரவு காற்றுக்காக நந்தினி வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது. இதை நோட்டமிட்ட மர்ம நபர் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்குள் நைசாக புகுந்து தூங்கிக் கொண்டிருந்த நந்தினி கழுத்தில் கிடந்த நகையை பறித்தான்.
அப்போது திடுக்கிட்டு எழுந்த நந்தினி, நகையை இறுகப்பிடித்துக்கொண்டார். ஆனாலும் திருடன் கழுத்தில் இருந்த 4½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான். இதுகுறித்து நந்தினி பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பேரையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நகை, பணம் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தி.மு.க. அரசின் பட்ஜெட் காகித பூ; மக்களுக்கு எந்த நன்மையும் தராது என முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன் பேசினார்.
- தி.மு.க. தாக்கல் செய்த பட்ஜெட் ஸ்டாலின் குடும்பத்தை பாதுகாக்கும் பட்ஜெட்டாக உள்ளது.
மதுரை
ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகர் அம்மா பேரவையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட பேரவை அலுவலகத்தில் நடந்தது.
இதில் தூய்மை பணியா ளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட பேரவை செயலாளரும், முன்னாள் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.சரவணன் வழங்கி பேசியதாவது:-
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கிளைக் கழக செயலாளர், ஒரு அடிமட்ட தொண்டர் உழைப்பால் முதல்-அமைச்சராகவும், கட்சியின் பொதுச் செயலாளராக வர முடியும் என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை, சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க. தான் காவல் அரணாக உள்ளது என்று கூறிவருவது உண்மையல்ல.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிறுபான்மை இன மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி னார்கள். புனித ஜெருேசலம் செல்லவும், மெக்கா பயணம் மேற்கொள்ளவும் சிறுபான்மையின மக்களுக்கு மானியத்தை அதி.மு.க. அரசு வழங்கியது.
மதுரை தெற்கு தொகுதியில் சவுராஷ்டிரா இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை தெப்பக் குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி 40 ஆண்டு கால கோரிக்கையை நிறை வேற்றி தந்தார் எடப்பாடி பழனிசாமி.
குறிப்பாக நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மக்களின் கோரிக்கையான வைகை ஆற்றில் 2 தடுப்பணைகள், உயர் மட்ட மேம்பாலங்கள், மதுரை அரசு மருத்துவ மனையில் கூடுதல் கட்டி டங்கள் என மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் வைத்தேன்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து ஒரே ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதுதான் மக்களுக்கு பயன் தரும் பட்ஜெட்டாகும்.
தற்பொழுது 3 முறை பட்ஜெட்டை தி.மு.க. தாக்கல் செய்துள்ளது. மக்களுக்கான திட்டங்கள் எதுவுமில்லை.
தி.மு.க.வின் பட்ஜெட் காகித பூவாக உள்ளது. இந்த பட்ஜெட் மக்களுக்கு எந்த நன்மையும் தராது. கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டுள்ள பட்ஜெட் மக்களை காக்கும் பட்ஜெட்டாக இருந்தது. தற்போது தி.மு.க. தாக்கல் செய்த பட்ஜெட் ஸ்டாலின் குடும்பத்தை பாதுகாக்கும் பட்ஜெட்டாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- இளம்பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- அவர் கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என தெரியவந்தது.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஞானகுரு. இவரது மனைவி தங்கேஸ்வரி(வயது40). இவர்களது மகள் கவிதா. நேற்று திருநகரில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக தங்கேஸ்வரி தனது மகளுடன் புறப்பட்டார். இதற்காக வத்திராயிருப்பில் இருந்து பஸ்சில் திருமங்கலம் வந்த அவர்கள் திருநகர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது திடீரென ஒரு வாலிபர் கவிதா அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். உடனே அங்கு ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த விருதுநகரை சேர்ந்த சில போலீசார் விரைந்து செயல்பட்டு நகை பறித்த அவரை விரட்டிச்சென்று பிடித்தனர். திருமங்கலம் நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து(29) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
- ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக வாலிபர் ஒருவர் ரூ. 10 லட்சம் மோசடி செய்தார்.
- இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுஷா புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது55). இவர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எனது மகன் பிரகாஷ் வேலை தேடிக்கொண்டி ருந்தார். அப்போது நண்பர் மூலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கருத்தபட்டியை சேர்ந்த தங்கமாயன்(35) என்பவர் அறிமுகமானார். அவர் உங்களது மகனுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் தேவைப்படு வதாகவும் கூறினார்.
இதை நம்பி தங்கமாயனிடம் பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சம் வரை கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்ட அவர் ஹவுரா ரெயில் நிலையத்தில் வேலைக்கு சேர்வதற்கான ஆணையை வழங்கினார்.
அதனை எனது மகன் கொண்டு சென்று விசாரித்த போது போலியானது என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நான் பணத்தை திருப்பித்தருமாறு கேட்கேன். ஆனால் அவர் பணத்தை தராமல் கடந்த ஒரு வருடமாக பல்வேறு காரணங்களை கூறி வருகிறார். எனவே தங்கமாயனிடம் இருந்து ரூ.10 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம்நகர் போலீசார் தங்கமாயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தமிழக பட்ஜெட்டில் உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
- உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் ஏழை, எளியோர்கள் பயனடைந்துள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் பயனடைவார்கள். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் ஏழை, எளியோர்கள் பயனடைந்துள்ளனர்.
தி.மு.க. அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கை யில் தெரிவித்த திட்டமான பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டத்தை 2-வது ஆண்டிலேயே அறிவித்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். இது மிகப்பெரிய செலவுத்திட்டம் ஆகும்.
அதேபோல் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இது வரவேற்க வேண்டிய விஷயம். வளர்ச்சி தான் ஒரு தேசத்தை மேம்படுத்துமே தவிர வாய் வார்த்தை அல்ல என்பதை தமிழக நிதி அமைச்சர் புரிந்து கொண்டுள்ளார். அவரை பாராட்டுகிறேன். கடும் நிதி நெருக்கடியிலும் தமிழக பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அம்மா பட்டி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், நகர தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, கவுன்சிலர் அமுதா சரவணன், நகர துணைத் தலைவர் சரவணன், நகர செயலாளர் ராஜாதேசிங், நிர்வாகிகள் காளியப்பன், பெருமாள், பாலசுப்பிரமணி, சங்கரலிங்கம், குழந்தைவேல், அக்கையா சாமி, விமல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு வாலிபர் மற்றும் 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.
- வேலை தேடி வந்து மதுரையில் தங்கியிருந்த நிலையில் வடமாநில வாலிபர் கொள்ளையில் ஈடுபட்டது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரை சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் முருகவேல். இவர் அம்மன் சன்னதி விட்டவாசல் பகுதியில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பல லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு முருகவேல் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்று விட்டனர்.
இதுபற்றி அறிந்த முருகவேல் அதிர்ச்சி அடைந்தார். அவர் கடையில் ரூ.10 லட்சம் கொள்ளை போனது பற்றி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கி விட்டு கைவரிசையை காட்டியது தெரிய வந்தது. இருந்தபோதிலும் ஒரு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.
கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரின் முகம் மற்றும் உடல் பகுதியை மறைக்கும் வகையில் ஆடை அணிந்து சென்று திருடியது கண்டறியப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் தலைமையில் மீனாட்சி கோவில் போலீஸ் சரக உதவி கமிஷனர் காமாட்சி மேற்பார்வையில் விளக்குத்தூண் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு வாலிபர் மற்றும் 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது.
பிடிபட்ட வாலிபர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இர்ஷாத் என்பவரின் மகன் ஷபாஸ் (வயது 21) என்பதும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களில் 2 பேர் அவரது சகோதரர்கள் என்பதும், இன்னொருவர் உறவினர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கொள்ளையன் ஷபாஸ் அளித்துள்ள வாக்குமூலத்தில், வேலை தேடி மதுரைக்கு வந்ததாகவும், அப்போது திருட்டில் ஈடுபட முடிவு செய்து திரிந்தபோது சம்பந்தப்பட்ட கண்ணாடி கடையில் தினமும் பல லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறுவதை பார்த்ததும் அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும், இதற்காக அவர் தனது சகோதரர்கள் மற்றும் உறவினரை அழைத்து வந்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
வேலை தேடி வந்து மதுரையில் தங்கியிருந்த நிலையில் வடமாநில வாலிபர் கொள்ளையில் ஈடுபட்டது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரை மண்டல நிர்வாகிகள் கலந்்தாய்வு கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல கலந்்தாய்வுக்கூட்டம் செல்லூர் கண்மாய்கரை ரோடு லூர்து அன்னை பேப்பர் ஸ்டோர் வளாகத்தில் நடந்தது.
மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். தங்கராஜ், சில்வர்சிவா, குட்டி என்ற அந்தோணிராஜ், ஸ்வீட்ராஜன், ஜெயகுமார், தேனப்பன், வக்கீல் கண்ணன், சூசை அந்தோணி முன்னிலை வகித்தனர்.
ஆன்லைன் வர்த்த கத்துக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் சுதேசி வணிகத்தை வலியுறுத்தும் வணிகர் தின சிறப்பு மாநாடு சென்னையில் நடத்துவது குறித்து ஆலோசனை பெறப்பட்டது.
தீர்மானங்கள்
வணிகர்களுக்கு பாதுகாப்பாக செயல்படும் ஒரே சங்கம் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மட்டுமே. ஆகையால் சங்கத்தின் மாநிலத் தலைவா் முத்துக்குமார் தலைமையில் நடைபெறும் 40-வது வணிகர் தின மாநாட்டை மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். சென்னையில் நடைபெறும் 40-வது வணிகர் தின மாநாட்டுக்கு மதுரை மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகள் தலைமையில் வேன்களில் செல்வது என்றும், மதுரை மண்டலம் சார்பில் ஒரு பஸ்சில் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆன்லைன் மூலம் ெபாருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆன்லைன் மூலம் நடைபெறும் வியாபாரம் ஏமாற்றப்படுகிறது என்பதால் மக்கள் நேரடியாக அருகே உள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் சுருளி, ஆனந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், பிச்சைப்பழம், தேனப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் இதில் கலந்து பங்கேற்றனர்.






