search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடந்து செல்வோரை குறிவைத்து செல்போன் பறிக்கும் கும்பல்
    X

    நடந்து செல்வோரை குறிவைத்து செல்போன் பறிக்கும் கும்பல்

    • நடந்து செல்வோரை குறிவைத்து செல்போன் பறித்துச்செல்கின்றனர்.
    • அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்து செல்வோரை குறிவைத்து செல்போன்கள் பறித்துச் செல்லும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் நடந்து செல்வோரை தாக்கி செல்போனை பறித்துச் செல்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் விளாத்தூரை சேர்ந்தவர் ரகு(28). மதுரை வந்திருந்த இவர், ஆரப்பாளையம் டி.டி.ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ரகுவை வழிமறித்து செல்போனை பறித்துச் சென்றனர்.

    சூர்யாநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(47). இவர் கூடல்நகர் ரோட்டில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் செல்போனை பறித்துச் சென்றது. இதுதொடர்பாக கரிமேடு, கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை அய்யனார்புரம் மண்டபம் தெருவை சேர்ந்தவர் ராமர்(20). இவர் சம்பவத்தன்று பனையூர் பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றார். அப்போது அவரது செல்போன் திருடு போனது. இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் செல்போனை திருடியது பனையூர் கீழத்தெருவை சேர்ந்த ராமு(37), சிவகங்கை மாவட்டம் புலியூர் மேலத்தெருவை சேர்ந்த பால்பாண்டி(39) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    மதுரை ஆலங்குளம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரோஸ்கான்(47). தனியார் மது பாரில் காவலாளியாக பணிபுரியும் இவர் சம்பவத்தன்று பாரில் உள்ள அறையில் தூங்கினார். அப்போது மர்ம நபர் அவரது செல்போனை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×