search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உசிலம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி இன்றும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
    X

    உசிலம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி இன்றும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

    • உசிலம்பட்டி அருகே உள்ள எம்.பாறைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
    • பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

    உசிலம்பட்டி:

    பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திலும் கடந்த 17-ந் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆவின் நிறுவனத்துக்கு குறைத்து பால் வழங்கி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டியில் நேற்று பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று உசிலம்பட்டி அருகே உள்ள எம்.பாறைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்த 100 லிட்டர் பாலை சாலையில் கொட்டினார்கள். மேலும் தங்களது கறவை மாடுகளுடன் வந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து பால் உற்பத்தியாளர்கள் நலசங்க தலைவர் பெரியகருப்பன், செயலாளர் உக்கிரபாண்டி ஆகியோர் கூறியதாவது:-

    பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் கடந்த 17-ந் தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த போராட்டம் அடுத்தடுத்த பகுதிகளுக்கு விரிவடைந்து வருகிறது. இதனால் அரசு பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்திற்கு விரைவில் உரிய தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

    Next Story
    ×