என் மலர்tooltip icon

    மதுரை

    • பல கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜசேகரனை கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை முரட்டான்பத்திரி பகுதியில் போலி டாக்டர் ஒருவர் வீட்டில் மருத்துவம் பார்த்து வருவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    அதன்பேரில் மருத்துவத் துறை இணை இயக்குநர் செல்வராஜ் தலைமையில் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் இருசப்பன் மற்றும் மருந்து ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் முரட்டான்பத்திரி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது புதுஜெயில் ரோடு மில் காலனியில் வசிக்கும் ராஜ சேகரன் (வயது 48) என்பவர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ராஜசேகரன் டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், அவர் மதுரை நரிமேடு பகுதியில் செயல் பட்டு வரும் ஒரு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார் என்பதும், இந்த அனுபவத்தின் மூலம் அவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.

    இதுமட்டுமின்றி அவர் பல கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருத்து வக்குழுவினர் கரிமேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜசேகரனை கைது செய்தனர்.

    • திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.
    • சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் களம் கண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.

    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்க 750 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

    மாடுபிடி வீரர்களுக்காக கரடிக்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 5 மருத்துவர்கள், 25பேர் கொண்ட மருத்துவக் குழு மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. மாடுபிடி வீரர்கள் போதை வஸ்து சாப்பிட்டுள்ளனரா? அவர்களது உடலில் காயம் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் பங்கேற்றனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடக்கவிழா நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    போட்டிகள் மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்றது. சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் களம் கண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.

    போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் கட்டில், பீரோ, அண்டா, குத்துவிளக்கு, சைக்கிள், தங்க காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் காயமடைந்தால், அவர்களை மருத்துவ மனைக்கு கொண்டுசெல்ல 5 ஆம்புலன்சுகள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. 2 கால்நடை அவசர ஊர்திகளும் தயாராக இருந்தன.

    ஜல்லிக்கட்டு நடந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் மேற்பார்வையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 30-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • 2-ந்தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும்.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் குறிப்பிடத்தக்கது சித்திரை திருவிழாவாகும். இந்த விழா 12 நாட்கள் கொண்டாடப்படும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து மீனாட்சி-சுந்தரேசுவரரை வழிபடுவார்கள்.

    சித்திரை திருவிழா நடக்கும் 2 வாரங்கள் மதுரை மாநகரம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று(23-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன.

    காலை 10 மணி அளவில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பட்டர்கள் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிட்டனர்.

    சித்திரை விழா நடக்கும் நாட்களில் சுவாமி அம்பாள் சகிதம் தினந்தோறும் காலை, இரவு ஆகிய 2 வேளைகளிலும் கற்பக விருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்பட பல்வேறு வாகனங்களில், வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது 4 மாசி வீதிகளிலும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வலம் வந்தார். மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா புறப்பட்டார். இன்று இரவும் சுவாமிகளின் ரத வீதி உலா நடக்கிறது.

    நாளை (24ந்தேதி) சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். 3-ம் நாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுவாமி கைலாச பர்வதம் வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் காட்சியளிப்பார்கள். வருகிற 26-ந்தேதி தங்க பல்லக்கு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    27-ந்தேதி வேடர் பரி லீலை நடைபெறும். அப்போது சுவாமிகள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்கள். 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சைவசமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை நடக்கிறது. அன்று சுவாமிகள் ரிஷப வாகனத்தில் காட்சியளிப்பார்கள். 29-ந்தேதி நந்திகேஸ்வரர் யாளி வாகனத்தில் சுவாமிகள் எழுந்தருளுவார்கள்.

    வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் உலா வருவார். அடுத்த மாதம்(மே) 1-ந்தேதி(திங்கட்கிழமை) திக் விஜயம், இந்திர விமான உலா நடக்கிறது.

    2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று இரவு யானை வாகனம், புஷ்ப பல்லக்கில் சுவாமிகள் வலம் வருவார்கள். 3-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை சுவாமிகள் சப்தவர்ண சப்பரத்தில் உலா வருவார்கள். 4-ந்தேதி(வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.

    • சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.
    • எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன.

    மதுரை:

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் தங்களது மூதாதையரைவிட அதிகமாக சம்பாதித்துள்ளனர். அது பிரச்சினையாகி வருகிறது.

    அதனை எப்படி கையாளுவது? எப்படி சிக்கிக்கொள்ளாமல் இருப்பது? ரூ.10 கோடி, ரூ.20 கோடி என்று அவர்கள் சிறுக சிறுக குவித்தது தோராயமாக ரூ.30 ஆயிரம் கோடி இருக்கும் என்று உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த ஆடியோவில் ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழி பெயர்ப்பும் இடம் பெற்றிருந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. நான் அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள இலாகாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன்.

    எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன. எங்களை பிரிப்பதற்காக எந்த ஒரு நாசவேலையை செய்தாலும் வெற்றி பெறாது.

    அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அதற்கு தொழில்நுட்ப ரீதியாக என்னிடம் ஆதாரம் உள்ளது. 26 நொடிகள் ஓடும் அந்த ஆடியோவில் முதல் சில விநாடிகள் வேறொரு கிளிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. எஞ்சிய உரையாடலில் குரல் தெளிவாக இல்லை. வேண்டும் என்றே சப்தம் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் தவிர இந்த தொலைபேசி அழைப்பில் பின்னணி சத்தம் எதுவும் இடம்பெறவில்லை. எனவே நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய வீட்டில் பொருட்கள் திருடிய 6 பேரை கைது செய்தனர்.
    • கே.கே. நகரில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார்.

    மதுரை

    எஸ்.ஆலங்குளம், குமரன் நகரை சேர்ந்தவர் பால் பெஞ்சமின் (30). இவர் கட்டுமான மேற்பார்வையாளராக உள்ளார். கே.கே. நகரில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார். சம்பவத்தன்று காலை ஊழியர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த இரும்பு வெட்டும் எந்திரம், டைல்ஸ் வெட்டும் எந்திரம் ஆகிவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் டைல்ஸ் வெட்டும் மிஷின், இரும்பு வெட்டும் எந்திரம் பறிமுதல் செய்யப்ப ட்டது. இதுதொ டர்பாக ஆழ்வார்புரம் ஆசைதம்பி (27), ஜெய்ஹிந்த்பு ரம் மணிகண்டன் (29), நாராய ணசெட்டி தெரு விஜய் (37), காக்கா தோப்பு கண்ணன் (40), ராஜகம்பீரம் பாலமுருகன் (8), ஒத்தக்கடை செல்வராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர்.

    • நிரம்பி வெளியேறும் சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    மதுரை

    மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தென்னோ லைகாரத் தெருவில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன.

    குறுகிய சந்துகளை கொண்ட இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைகள் நிரம்பி வெளியேறி வரு கின்றன. பழைய பாதாள சாக்கடை குழாய்கள் இருப்பதால் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.

    பாதாள சாக்கடைகள் நிரம்பி கழிவு நீர் வெளி யேறுவதால் காம்பவுண்டு களிலும், வீடுகளுக்குள்ளும் சாக்கடை நீர் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக தென்னோலைக்கார தெருவில் சுகாதார சீர்கேடு அடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அந்த தெருவில் வசிக்கும் பொது மக்கள் கூறுகையில், தினந்தோறும் சாக்கடை நிரம்பி வழிவது நடந்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை புகார் தெரி வித்தும் கண்டு கொள்ள வில்லை.

    ஊழியர்களை அழைத்தால் அதிக அளவில் பணம் கேட்கிறார்கள். சாக்கடை பிரச்சினை காரணமாக தெருவில் நடந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ளது. எனவே இதுதொடர்பாக கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

    மதுரை

    மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரி தலைவர் மற்றும் தாளாளர் எம்.எஸ்.ஷா , தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தபசு கண்ணன், கல்வியியல் கல்லூரி முதல்வர் வெண்ணிலா ஆகியோர் பேசுகிறார்கள்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். பேராசிரியர் ராம சீனிவசான் சிறப்புரை யாற்றுகிறார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    • மதுரையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
    • தமிழக அரசின் தொழிற் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    மதுரை

    மதுரை மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசின் 12 நேர வேலை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி பெரியார் பஸ் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் பாவேல்சிந்தன், செயலாளர் செல்வா, நிர்வாகிகள் வேல்தேவா, நிருபனா, நவீன், கவுதம், பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தமிழக அரசின் தொழிற் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • நடப்பாண்டில் மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
    • மதுரையில் சர்வதேச ரோட்டரி தலைவர் பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரையில் ரோட்டரி தலைவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் 1500-க்கும் மேற்பட்ட ரோட்டரி ஆளுநர்கள், முன்னாள் ஆளுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சர்வதேச ரோட்டரி சங்க தலைவர் கார்டன் மெக்கனரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரோட்டரி இயக்கத்தில் உலகம் முழுவதும் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.80 லட்சம் பேர் உள்ளனர். 200 நாடுகளில் ரோட்டரி சங்கம் சேவை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பெண்கள் முன்னேற்றம், ஆரோக்கியம் நல்வாழ்வு, கல்வி மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு உதவும் வகையில், ரூ.28 ஆயிரம் கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். நடப்பாண்டில் (2023-24) மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    பொதுமக்கள் மன நோயாளிகளை கனிவுடன் பார்க்கும் வகையில் மாற்றுவோம். சென்னை எழும்பூரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் மென்டல் ஹெல்த் மையம், ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரோட்டரி மண்டல முன்னாள் ஆளுநர் முருகானந்தம், பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், முன்னாள் ஆளுநர் குமணன், ஆனந்த ஜோதி, கார்த்திக், இந்நாள் ஆளுநர் ஜெரால்டு, அடுத்த நிதி ஆண்டுக்கான ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    மதுரை பசுமலை ஓட்டலில் ரோட்டரி சங்க கூட்டத்துக்கான ஏற்பாடு களை வெங்கடேஷ், முரு கையா பாண்டியன், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது.
    • ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மதுரை

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று- ரமலான் மாத நோன்பு. நோன்பின்போது அவர்கள் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

    ரமலான் மாதம் முதல் நாள் தொடங்கி 30 நாட்க ளும் கடுமையாக நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்கள், மற்றொரு கடமையான ஏழை-எளியோருக்கு ஜகாத் உதவிகளை வழங்கி வரு வார்கள்.

    ரமலான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பிறகு, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்படும். அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தி னர். இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து 'ஈதுல் பித்ர்' என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது. அதன்படி மாப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். ரம்ஜான் சிறப்பு தொழுகை முடிவில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா தொற்று போன்ற பேரிடர்கள் நீங்க வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு துஆ செய்தனர்.

    • எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைப்போம்.
    • ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தீர்மானங்களை நிறைவேற்றினார்.

    மதுரை

    மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனி சாமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக, அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது.

    அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி கீழ்க்கண்ட தீர்மானங் களை நிறைவேற்றினார்.

    அ.தி.மு.க. இயக்கத்தின் 28 ஆண்டுகாலம் பொதுச் செயலாளராக பொறுப் பேற்று அம்மா பல்வேறு சாதனைகளை உரு வாக்கி காட்டினார்கள். அவரது மறைவிற்குப் பிறகு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக் கப்பட்ட எடப்பாடியார் முதன் முதலாக மதுரைக்கு வருகிறார். அவருக்கு அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படு கிறது.

    கட்சியின் பொன்விழா ஆண்டையொட்டி, ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்த, பொதுச் செயளாலர் எடப்பாடி யாருக்கு அம்மா பேரவை யின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியாரை முதல்- அமைச்சராக அரியணை யில் அமர்த்திட அயராது உழைத்திட அம்மா பேரவை, மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. வீர சபதம் ஏற்கிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், டாக்டர் பி.சரவணன், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டிற்கு 5 லட்சம் இளைஞர்களை அணி திரட்டுவோம் .
    • இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் பேட்டியளித்தார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் வருகிற 24-ந்தேதி திருச்சி யில் மாநாட்டை நடத்துகிறார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கழகத்தின் 51-வது ஆண்டுவிழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக இளை ஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், நிருபர்களிடம் கூறியதா வது:-

    அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். எந்தவித பதவி ஆசையும் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் கழகத்தை கட்டிக்காக்கின்ற விசுவாசி. கடைக்கோடி தொண்டனின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வத்தால் தான் இயக்கத்தை வழிநடத்த முடியும். வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடக்கும் முப்பெரும் விழாவில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அணி, அணியாக திரண்டு வந்து பங்கேற்க வேண்டும்.

    இந்த விழாவில் 5 லட்சம் இளைஞர்களை திரட்டு வோம். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாநாடு பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ. முன்னாள் எம் பி கோபாலகிருஷ்ணன், முருகேசன்,மாநில நிர்வாகி மருதுஅழகுராஜ், இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜமோகன், மாணவரணி மாநில துணை செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் சோலை குண சேகரன் ஆகியோர் வர வேற்றனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஆட்டோ கருப்பையா, கண்ணன், கெம்பையா, பவுன்ராஜ், நாச்சியப்பன், கிரி, சாத்தன உடையார், பத்ரி முருகன், புல்லட் ராமூர்த்தி, இன்பம்,முத்து,பாரப்பத்தி ஊராட்சித்தலைவர் முத்தையா,மற்றும் மேலூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×