என் மலர்
மதுரை
- கோவில் திருவிழாவில் திருடிய 2 பேர் சிக்கினர்.
- போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே அத்திப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இங்கு சாமி கும்பிடுவதற்காக அழகன்ராஜ் (வயது 63) என்பவர் நடந்த வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார்.
சுதாரிக் கொண்ட அழகன்ராஜ் அங்கிருந்தவர்கள் உதவி யுடன் அந்த நபரை பிடித்து சாப்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த பிச்சைபாண்டி (51) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
அதே திருவிழாவிற்கு வந்திருந்த மாரியப்பன் (47) என்பவரிடம் ரூ.5 ஆயிரத்தை வழிப்பறி செய்து ஒரு வாலிபர் தப்பி செல்ல முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படை த்தனர். விசாரணையில் அவர் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யன்கோ வில்பட்டியை சேர்ந்த ரமேஷ் (40) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
- மின் அமைப்பாளர்கள் சங்க கொடியேற்று விழா நடந்தது.
- செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் மின்சார அலுவலகம் முன்பு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க அலங்காநல்லூர் கிளை சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி கொடியேற்று விழா நடந்தது.
தலைவர் ரவி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர்கள் அலிமுதின், சுப்பாரயலு, செயலாளர் வெள்ளைகங்கை, பொருளாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். கவுரவ ஆலோசகர் விநாயக ராஜா வரவேற்றார்.
அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், சத்தியசீலன் ஆகியோர் நன்றி கூறினர்.
- ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
மதுரை
வாடிப்பட்டி வட்டார வைகை இருசக்கர வாகன மற்றும் மெக்கானிக்கல் பொதுநல சங்கம் சார்பில் மே தின விழா, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாநில தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ரமேஷ்குமார் அறிக்கை வாசித்தார்.
வல்லப கணபதி கோவிலில் இருந்து ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்கள் பேரணியாக சென்றனர். வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
மாலையில் மழலையார் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சிவஞானம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
- ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர்.
- சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறுவது சித்திரை திருவிழா.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர்புரியும் திக்கு விஜயம் நேற்று இரவு நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.
கோவிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல வகை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலை 7.45 மணி அளவில் முதலாவதாக திருக்கல்யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார்கள்.
அதன் பின் திருக்கல்யாண வைபவங்கள் தொடங்கியது. மீனாட்சி அம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடதுபுறம் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையும் எழுந்தருளினர்.
மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி மற்றும் தங்க காசு மாலை, பச்சைக்கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்திருந்தார்.சுவாமி சுந்தரேசுவரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். பிரியாவிடை சிவப்பு பட்டு அணிந்திருந்தார்.
திருக்கல்யாண நிகழ்வு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டது. மேலும் சங்கல்பம், கணபதி ஹோமம், புண்ணிய வாசனம், பஞ்சகாவியம் நவதானியமிடும் பாலிகா பூஜை நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், மீனாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து பவளக்கனி வாய் பெருமாள், தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் இசைக்க மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மீனாட்சி அம்மனாக கார்த்திக் பட்டரும், சுந்தரேசுவரராக பிரபு பட்டரும் வேடம் தரித்திருந்தனர். அவர்கள் இருவரும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் சுந்தரேசுவரராக வேடமணிந்திருந்த பிரபு பட்டர், வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார்.
அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர்.
திருமண நிகழ்ச்சியை கோவிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும் மற்றும் சித்திரை வீதி, மாசி வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரைகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டு களித்தனர்.
சுவாமிகள் திருக்கல்யாணம் நடந்தபோது, கோவிலின் உள்ளேயும், வெளிபுறத்திலும் திரண்டிருந்த பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர்.
திருக்கல்யாணம் முடிந்த பின்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். திருக்கல்யாணத்தை பார்த்தால் வீட்டில் திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இதனால் சுவாமி திருக்கல்யாணத்தை காண ஏராளமானோர் திரளுவார்கள். அதேபோல் இந்த ஆண்டும் பலர் திரண்டனர். பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக சுவாமியும், அம்மனும் பழைய கல்யாண மண்டபத்தில் இன்று முழுவதும் எழுந்தருளி இருப்பார்கள்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.
சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள். அதனை காண ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள்.
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
- இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 5-ந் தேதி சித்திரை மாத பவுர்ணமி, 3-ந் தேதி பிரதோஷம் என்பதால் வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற நாளை (புதன்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
10 வயதுக்கு உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக் கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இந்த மாதம் சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.
- இன்று இரவு திக்குவிஜயம் நடைபெறுகிறது.
- நாளை இரவு சுவாமி அம்பாள் மணக்கோலத்தில் வீதி உலா வருகின்றனர்.
மதுரை நகரின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவில் நேற்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. இன்று இரவு திக்குவிஜயம் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (2-ந் தேதி) கோலாகலமாக நடக்கிறது.
கோவிலின் வடக்கு-மேற்கு ஆடி வீதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருமணம் நடக்கும் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆகியோர் பல்லக்கில் புறப்பட்டு வந்தனர்.
முன்னதாக நாளை அதிகாலை 4 மணியளவில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை இரவு சுவாமி அம்பாள் மணக்கோலத்தில் யானை-ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.
பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த கோவில் மற்றும் சித்திரை, மாசி வீதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பக்தர்கள் தங்களது வாகனங்களை எந்த எந்த பகுதிகளில் நிறுத்துவது தொடர்பாக மாநகர போலீசார் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு போக்குவரத்து இடையூறை தவிர்க்கும் வகையில், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள நான்கு ஆவணி, மாசி, வெளி வீதிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி இன்று இரவு 11 மணியில் இருந்து ஆவணி மூலவீதிகளில் வாகனங்கள் செல்லவோ, நிறுத்தவோ அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் அன்று அனுமதி அட்டை இல்லாத இருசக்கர-நான்கு சக்கர வாகனங்கள் கிழக்கு, தெற்கு, வடக்கு மாசி வீதிகளில் நிறுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் வடக்கு-மேலமாசி வீதி சந்திப்பு வழியாக, தானப்பமுதலி தெருவில் மேற்கு ஆவணி மூலவீதியிலும், பிங்க் நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் கட்டப்பொம்மன் சிலை, நேதாஜி ரோடு வழியாக வாகனங்கள் நிறுத்த அனுமதி தரப்பட்டு உள்ளது. கீழ ஆவணி மூலவீதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.
இது தவிர மற்ற மாசி வீதிகளில் பகல் 12 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே கோட்டனம் பட்டியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் தனது வீட்டுக்கு நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் சீதாலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து சீதா லட்சுமி மகன் ராம்ராஜ் சாப்டூர் போலீசில் புகார் செய்தார் .
அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- மதுரைக்கு பவளக்கனிவாய் பெருமாள்-சுப்பிரமணியசுவாமி இன்று புறப்பாடாகிறார்கள்.
- மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுப்ப தற்காக பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.
திருப்பரங்குன்றம்
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி நாளை (2-ந் தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. பெற்றோர் திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் இன்று மாலை 5 மணிய ளவில் மதுரைக்கு புறப்பாடாகிறார்கள்.
அவர்களுடன் மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுப்ப தற்காக பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.
மதுரை செல்லும் சுப்பிரமணிய சுவாமி வருகிற 4-ந் தேதி வரை ஆவணி மூல வீதிகளில் தெய்வானையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
5-ந் தேதி மாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் வந்தடைவார். அவருடன் பூ பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைவார்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- மாற்றுக் கட்சியினரை கவர்ந்த பிரதமர் மோடியின் மனதின் குரல்.
- திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி செல்வேந்திரன் பா.ஜ.க.வில் இணைந்தார்.
மதுரை
மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமாரின் வன்னி வேலம்பட்டி கிராமத்தில் பிரதமர் மோடியின்
100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதனை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் சுப்பலா புரம் சென்றார். அங்கு திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி செல்வேந்திரன் பா.ஜ.க.வில் இணைந்தார். இதில் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் காளி தாஸ், மண்டல் தலைவர் சாமி ரங்கையா, துணை தலைவர் அய்யனார் கண்ணன், பொதுச் செயலாளர் கருப்பசாமி, நிர்வாகிகள் செல்வம், திருப்பதி, சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மேற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்பட 320 இடங்களில் பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பானது .
- ஆண்களுக்கு இணையாக பெண்கள் உழைக்கின்றனர்.
- கட்டிட வேலை மற்றும் சிறு சிறு வியாபாரங்களில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை
உலகம் இயங்குவதற்கு தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. காட்டை வயலாக்கி நாட்டை வளமாக்கி வருபவர்கள் தொழிலாளர்கள். இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க தொழிலாளர்கள் படாதபாடு படுகிறார்கள்.
கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலை யில் நகரங்களில் பல்வேறு பணிகளை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற தொழில் நகரங்கள் முன்னேற்றத்திற்கு தொழி லாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலில் சாதனை படைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் தொழிலாளர்கள். மதுரை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஒருவரின் வருமானம் போதாது என்பதால் பெண்களும் கட்டாயமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்கள் செய்யும் கடினமான வேலைகளையும் பெண்கள் செய்து வருகின்றனர்.
கொளுத்தும் வெயிலில் கட்டிட வேலை மற்றும் சிறு சிறு வியாபாரங்களில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல குடும்பங்களில் ஆண்கள் மது குடித்துவிட்டு குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் பெண்கள் வீதிக்கு வந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தற்போது ராணுவத்தில் கூட பெண்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு தொழிலா ளர்களும் தங்கள் குடும்ப நலனுக்காக பல்வேறு துன்பங்களை தாங்கிக் கொண்டு தினம் தினம் உழைத்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளும் நம்பிக்கையுடன் சுயதொழில் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம், கோவில் உள்ளிட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருமானம் பெறுகின்றனர்.
தொழிலாளர்களை நினைவு கூற வைக்கும் இந்த மே தின நாளில் அனைவரும் உழைத்து உயர உறுதிமொழி ஏற்போம்.
- கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கரிமேடு போலீசில் புகார் செய்தார்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் நூர் முகமது (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் நூர் முகமது ரம்ஜான் விடு முறைக்காக, மதுரை பழங்காநத்தத்தில் வசிக்கும் மாமா-சித்திக் வீட்டுக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் பைபாஸ் ரோடு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் 2 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி நூர் முகமது வைத்திருந்த 'செல்போனை கொடு' என்று கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரை கத்தியால் குத்தி காயப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து அந்த கும்பல் நூர் முகமது விடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி நூர் முகமது கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரது உருவங்கள் பதிவாகி இருந்தன. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட அருள்தாஸ்புரம் தவளை என்ற சரவணன் (22), கரிமேடு யோகானந்த சாமி மடம் தெரு, ஹனிபா மகன் சல்மான் அகமது (19) ஆகியோரை கைது செய்தனர்.
- சாலையோரங்கள் சேறும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
- பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. 3 நாட்களாக மாலை நேரத்தில் பெய்து வரும் இந்த மழையால் மதுரை நகரின் பல பகுதிகளில் சாலை யோரம் மழை நீர் தேங்கி உள்ளது. பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையோரமும் மழை நீர் தேங்கி சேறு சகதியுமாக மாறிப்போய் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காளவாசல்
இதேபோல காளவாசல் சிக்னல்-தேனி பிரதான சாலையில் சிறிய மழைக்கே தண்ணீர் குளம்போல் தேங்கி சகதியாக கிடப்பதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் கடைவீதிகளில் உள்ள சாலைகளிலும் பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் ஓட்டல்க ளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மதுரை நகரின் பல்வேறு இடங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. ஆனால் மாநகராட்சி எந்த வித நடவடிக்கையும் எடுக் காமல் இருந்து வருகிறது.
சித்திரை திருவிழா நடந்து வரும் நிலையில் இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். மெத்தனம் காட்டினால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடி
மேலும் நகரின் குறுகிய சாலைகளில் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை அனுமதிப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை யும் போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர்.
மதுரை மாநகரில் மழை பெய்தால் தண்ணீர் வடிய முடியாத சூழ்நிலை பல இடங்க ளில் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






