என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    பாரூர் அருகே கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    போச்சம்பள்ளி தாலுகா அரசம்பட்டி அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் பாஷா. இவரது மனைவி தில்சாத் (வயது 39). சம்பவத்தன்று இவர் போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தில்சாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிசசைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தில்சாத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கல்லாவி:

    ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளி ஊராட்சி புதுக்காலனி, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சில தினங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இதுவரை தண்ணீர் ஏற்றி கிராமமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. மினி குடிநீர் தொட்டி பழுதடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலை திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிங்காரப்பேட்டை போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி சீராக குடிநீர் வழங்கவும், பழுதடைந்த மினி குடிநீர் தொட்டியை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    அஞ்செட்டியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள அத்தி நத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவி அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் அஞ்செட்டி டாக்டர் அசோக் மற்றும் மருத்துவ குழுவினர் பெண்கள் விடுதியில் தங்கி உள்ள மாணவி உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

    அவருக்கு வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மருத்துவ குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
    பாரூர் அருகே கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    போச்சம்பள்ளி தாலுகா அரசம்பட்டி அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் பாஷா. இவரது மனைவி தில்சாத் (வயது 39). சம்பவத்தன்று இவர் போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த தில்சாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிசசைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தில்சாத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது மகனை கொலை செய்த பெண்ணுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    கிருஷ்ணகிரி:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சிவானந்தம். ராணுவ வீரர். இவரது மனைவி வனிதா (வயது 29). இவர்களது மகன் நந்தீஸ்குமார் (4). இந்த நிலையில் வனிதாவுக்கும், அதே ஊரை சேர்ந்த கார் டிரைவரான கார்த்திக்ராஜா என்கிற சிவகார்த்திக் (28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறுவனுடன் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததாக நந்தீஸ்குமாரை, வனிதாவும், கார்த்திக்ராஜாவும் அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி நந்தீஸ்குமாரை அவர்கள் 2 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவனை தூக்கி கொண்டு ஊருக்கு சென்று வருகிறோம் என வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு கிருஷ்ணகிரி வந்தனர். வரும் வழியிலேயே நந்தீஸ்குமார் இறந்து விட்டான்.

    இதையடுத்து கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள மலையடிவாரத்திற்கு சிறுவன் நந்தீஸ்குமாரின் பிணத்தை எடுத்து சென்று வனிதாவும், சிவகார்த்திக்கும் புதைத்துவிட்டு, மீண்டும் திருப்பதிக்கு சென்றனர். அப்போது அவர்களிடம் வீட்டின் உரிமையாளர், எங்கே குழந்தை? என கேட்டுள்ளார். அதற்கு உடல் நிலை சரியில்லாததால் ஊரிலேயே குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து திருப்பதி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை அடித்து கொன்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் திருப்பதி போலீசார் கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து சிறுவன் நந்தீஸ்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பார்த்தனர். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்ராஜா மற்றும் வனிதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். அவ்வாறு வந்த கார்த்திக்ராஜா தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி கலைமதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை அடித்துக்கொலை செய்த வனிதாவுக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
    குருபரப்பள்ளி அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதி 2 பேர் பலியானார்கள்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பந்திகுறி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 40). கார் டிரைவர். இவரது நண்பர்கள் சின்னசூளாமலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் ஸ்டீபன் (28), திம்மராஜ் (40). இவர்கள் 3 பேரும், நேற்று முன்தினம் இரவு வேப்பனப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

    வேப்பனப்பள்ளி-குந்தாரப்பள்ளி சாலையில் நரணிகுப்பம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதியது. இந்த விபத்தில் டிரைவர் ரவி, ஸ்டீபன் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் திம்மராஜ் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த திம்மராஜை, மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடமலம்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி தாலுகா பட்டகாப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அவர் வடமலம்பட்டி பகுதியில் கட்டிடம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை மின்சார வயரில் பட்டது.

    இதில் மின்சாரம் தாக்கி முருகேசன் தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஓசூர்:

    திருப்பூரை சேர்ந்தவர் ரகு. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு பெங்களூரு நோக்கி காரில் சென்றார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.

    இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டபள்ளி காட்டுப்பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் கார் சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் வேகமாக மோதியது.

    இதில், காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரின் முன்பக்கம் அமர்ந்திருந்த ரகுவின் மகள் சுபிட்ஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் ரகு மற்றும் அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    உத்தனப்பள்ளி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அஞ்சலகிரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லகுமம்மா (வயது 31). சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த லகுமம்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போதும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஓசூர் தொகுதிக்குட்பட்ட மத்திகிரி, கொத்தூர், டி.வி.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் கட்சி நிர்வாகிகளுடன் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போதும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும். தமிழகத்தில் மீண்டும் அதி.மு.க. ஆட்சி மலர ஆதரவு தாருங்கள். வாக்காளர்கள் எதிர்க்கட்சியினரின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள். ஓசூர் தொகுதி மேலும் முன்னேற்றம் அடைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்று பேசினார்.

    வேட்பாளருடன், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் மாநகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பி.ஆர்.வாசுதேவன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், மாநகர அவைத்தலைவர் முத்துராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ராமு மற்றும் அ.தி.மு.க. மற்றும், கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
    ஊத்தங்கரை அருகே கதவணி பஸ் நிறுத்தம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தக்கட்டி சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மைசூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரூ.95 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த மகாதேவா என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.95 ஆயிரத்தை பறிமுதல் செய்து தேன்கனிக்கோட்டை தேர்தல் அதிகாரி ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். ஊத்தங்கரை அருகே கதவணி பஸ் நிறுத்தம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.75 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.75 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    தமிழ்நாட்டில் போட்டியிடும் 20 தொகுதிகளிலும் பா.ஜனதா டெபாசிட் பெற முடியாத அளவுக்கு தோல்வியை தழுவ வேண்டும் என்று முத்தரசன் பேசியுள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டசபை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.ராமச்சந்திரனை ஆதரித்து அந்த கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

    தமிழ்நாட்டில் தளி உள்பட 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிற பா.ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெற முடியாத அளவுக்கு தோல்வியை தழுவ வேண்டும். தமிழகத்திற்கு துரோகம் விளைவித்த அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று நிறைவேற்றி தருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×