என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    மத்திகிரி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்திகிரி:

    மத்திகிரி அருகேயுள்ள நாகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் கிரண் (வயது 28). விவசாயி. இவருக்கும், பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கிரண் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், வானம் மேகமூட்டமாக உள்ளது.

    ராணிப்பேட்டையில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
    புவனேஷ்வர் குமார், அஸ்வின் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட் வீழ்த்த தீபக் சாஹர் 42 ரன்களும், முகமது சிராஜ் 39 ரன்களும் வாரி வழங்கினர்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யர் அறிமுகம் ஆனார்.

    நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் புவி வீசிய முதல் ஓவரில் க்ளீன் போல்டானார். அடுத்து மார்ட்டின் கப்தில் உடன் மார்க் சாம்மேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    சாப்மேன் 50 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்ட்டின் கப்தில் 42 பந்தில 70 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் விளாசியது. இதனால் நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் அடித்துள்ளது. 

    இந்திய அணி வீரர்கள்

    புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், அஸ்வின் 4 ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முகமது சிராஜ் 39 ரன்களும், தீபக் சாஹர் 42 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
    சூளகிரி பகுதியில் திருட்டு போன 41 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சூளகிரி:

    சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இதில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி தனிப்படை போலீசார், சூளகிரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக 2 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பர்கூர் அருகே குண்டியால் நத்தம் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது26), திருப்பத்தூர் மாவட்டம் சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த அரசன் (24), சந்தோஷ் (19) மற்றும் திருவேங்கடம் (31), வேலூர் மாவட்டம் பனந்தோப்பை சேர்ந்த சதீஷ்குமார் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஓசூர், சூளகிரி, குருபரப்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பல ஊர்களில் இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி வேறு மாவட்டங்களில் விற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 41 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். இதையடுத்து தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில்அடைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பார்வையிட்டார். தொடர்ந்து அவர் தனிப்படை போலீசாரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளிலும், மெயின் ரோடுகளிலும் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தக்கூடாது.

    மேலும் இரு சக்கர வாகனங்களை வாங்கும்போது, ஆவணங்கள் சரியாகஉள்ளதா? என்று சரிபார்த்து வாங்கவேண்டும். திருட்டு வாகனங்களை பணம் கொடுத்து வாங்கி ஏமாறக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
    குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் பள்ளி மாணவியை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார், சிறுமியின் தாயார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி அருகே கிருஷ்ணாபுரம் அடுத்த சி.மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிந்தாமணி. இவரது மனைவி கவுரம்மாள். இவர்களது மகன் கார்த்திக் (வயது 25). இவருக்கும், பாலக்கோடு பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது.

    இந்த குழந்தை திருமணம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் புஷ்பநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் விசாரணை நடத்தியதில் குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் பள்ளி மாணவியை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார் கவரம்மாள், சிறுமியின் தாயார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் சந்தைபேட்டை பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாடிய காவேரிப்பட்டணம் ஜோதிபுரம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 29), வீராசாமி (45), சந்தப்பள்ளம் சத்யமூர்த்தி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புகையிலைப் பொருட் களை காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பதுக்கி வைத்து பல்வேறு பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியில் வடக்கு போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 

    தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரித்த போது நல்லூர் நாச்சிபாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் (35) என்பதும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. புகையிலைப் பொருட்களை காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பதுக்கி வைத்து பல்வேறு பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து காலேஜ் ரோட்டில் உள்ள கடையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு 45 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    மேலும் சிலம்பரசனுக்கு உதவியாக இருந்த முகமது ரியாஸ் (25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வெவ்வேறு இடங்களில் 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 38). நேரலகிரி அரசு பள்ளி ஆசிரியரான இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கொல்லபாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை குருபரப்பள்ளியில் நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. ஓசூர் துர்கா நகரை சேர்ந்த கோடீஸ்வரன் (32) என்பவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. மேலும் ஓசூர் குமுதேப்பள்ளி எல்லம்மாகொத்தூரை சேர்ந்த மஞ்சுநாத் (36) என்பவரது மோட்டார் சைக்கிளும், தேன்கனிக்கோட்டை தாலுகா மாடக்கல் பக்கமுள்ள திம்மனப்பட்டியை சேர்ந்த குழந்தைவேல் (39) என்பது மோட்டார் சைக்கிளும், பர்கூர் வெங்கடசமுத்திரம் பையனூரை சேர்ந்த அல்தாப் உசேன் (29) என்பவரது மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்து அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலயைங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
    உடுமலை அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
    தாராபுரம்:

    கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    உடுமலை அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் இன்று 2-வது நாளாக கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கான காரணமான ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    பர்கூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் இறந்த சம்பவத்தையடுத்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். கான்டிராக்டர். இவரது மனைவி பிரின்சி. இவர்களது மகன் ஹரிஹரசுதன் (வயது 7). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாணவனுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து சிறுவனை மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக வள்ளுவர்புரம் கிராமத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மேலும் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் நடந்த 8-வது கட்ட தடுப்பூசி முகாமில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 18½ லட்சத்தை தாண்டியது.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் ஏற்கனவே 7 கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று 8-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 17 லட்சத்து 96 ஆயிரத்து 974 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. இதில் முதல் தவணையாக 13 லட்சத்து 3 ஆயிரத்து 794 பேருக்கும், 2-வது தவணையாக 4 லட்சத்து 93 ஆயிரத்து 80 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது.

    8-ம் கட்ட முகாமில் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் என 600 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள் வர, வர தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நேற்று 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 63 ஆயிரத்து 429 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 18 லட்சத்து 60 ஆயிரத்து 503 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராயக்கோட்டை அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த முடிதிருத்தும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக தொழிலாளியின் பெற்றோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 25). முடிதிருத்தும் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இவர் 14 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இதற்கு சக்திவேலின் தந்தை செல்வம் (50), தாயார் வசந்தா (49) ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ரேணுகா தேன்கனிக் ்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சம்பூரணம் விசாரித்து சக்திவேலை கைது செய்தார்.

    அவர் மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக போக்சோ பிரிவிலும், குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக சக்திவேலின் தந்தை செல்வம், தாயார் வசந்தா ஆகியோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ×