என் மலர்
செய்திகள்

வண்டிக்காரதெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்த போது எடுத்த படம்.
தஞ்சை மாவட்டத்தில் 8-வது கட்ட முகாமில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தஞ்சை மாவட்டத்தில் நடந்த 8-வது கட்ட தடுப்பூசி முகாமில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 18½ லட்சத்தை தாண்டியது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் ஏற்கனவே 7 கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று 8-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 17 லட்சத்து 96 ஆயிரத்து 974 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. இதில் முதல் தவணையாக 13 லட்சத்து 3 ஆயிரத்து 794 பேருக்கும், 2-வது தவணையாக 4 லட்சத்து 93 ஆயிரத்து 80 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது.
8-ம் கட்ட முகாமில் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் என 600 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள் வர, வர தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நேற்று 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 63 ஆயிரத்து 429 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 18 லட்சத்து 60 ஆயிரத்து 503 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






