என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூரில் தின்னூர் அம்மன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ரேகா (வயது 30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ரேகா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரேகாவுக்கு திருமணம் ஆகி 6½ ஆண்டுகள் ஆவதால் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
    வேப்பனப்பள்ளி அருகே ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஐப்பிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 35). இவரது ஷேர் ஆட்டோவில், முத்துராமன் உள்பட 7 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வேப்பனப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது கோவிந்தன் (33) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். தமிழக எல்லையான அரியனப்பள்ளி அருகில் வந்த போது ஷேர் ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கோவிந்தன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஷேர் ஆட்டோவும் கவிழந்தது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள், உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    3 ஆம்புலன்சு உடனே சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. காயம் அடைந்த 8 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விபத்து குறித்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒன்னுப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த வெங்கடசாமி (வயது 40), மாதேஷ் (28), ரவிக்குமார் (27), வெங்கடேஷ் (26), கிருஷ்ணமூர்த்தி (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது.
    தளி அருகே காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையை கடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து ஆங்காங்கே நின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி, கொல்லப்பள்ளி, கண்டகானபள்ளி, தாவரகரை, மேடு முத்துக்கோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் காட்டுயானை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றித்திரிகிறது. பகல் நேரங்களில் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் இந்த யானை இரவு நேரத்தில் கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி செல்கிறது.

    இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல இந்த காட்டுயானையால் கிராம மக்கள் தினமும் அச்சமடையும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கிராமப்பகுதிகளில் சுற்றித்திரியும் இந்த காட்டுயானை தாக்கி விடுமோ என்று கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று தளி அருகே காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையை கடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து ஆங்காங்கே நின்றனர். பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்ற பிறகு வாகன ஓட்டிகள் சென்றனர். இந்த யானையை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஜவளகிரி வனச்சரகர் சுகுமார், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    தென்பெண்ணை ஆற்றில் குளித்த போது தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரிந்து வரும் மாதையன். இவரது மகன் ஹரிராஜ் (வயது17).

    இந்த நிலையில் நேற்று ஹரிராஜ், தனது தாயாருடன் திம்மாபுரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் துணி துவைக்க சென்றார்.

    அப்போது தென் பெண்ணை ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்லாதே என அவரது தாய் கூறினார் ஆனாலும் அவரது பேச்சை கேட்காமல் ஆழமான பகுதியில் சென்று குளித்த ஹரி ராஜ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டதும் அவரது தாய் பதறிப்போய் கூச்சலிட்டார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் ஆற்றில் ஹரி ராஜ் அடித்து செல்லப்பட்டார்.


    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் ஹரிராஜை தேடும் பணியை தீவிர படுத்தினார். உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினார். அப்போது ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இருந்து ஹரிராஜ் உடல் மீட்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஹரிராஜ் உடலை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லஞ்ச புகாரில் கைதான ஓசூர் பெண் அதிகாரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    ஓசூர்:

    வேலூர் தொரப்பாடியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தொழில்நுட்ப கல்வி கோட்ட பொறியாளராக ஷோபனா (வயது 58) என்பவர் பணியாற்றி வந்தார்.

    இவர் மீது அரசு கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் கட்டிட அனுமதி மற்றும் ஆய்வு செய்வது போன்ற பணிகளில் ஒப்பந்தத்தாரர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து கடந்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காண்டிராக்டர்களிடம் இவர் லஞ்ச பணம் கேட்டதாக மீண்டும் புகார்கள் வந்ததால் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. ( வேலூர் பொறுப்பு) கிருஷ்ணராஜன் தலைமையில் வேலூர் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நவம்பர் 2-ந் தேதி இரவு வேலூர் அரியலூரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே அதிகாரி ஷோபனாவின் காரை சோதனை செய்தனர்.

    அப்போது காரில் இருந்த ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேலூரில் அவர் தங்கியிருந்த குடியிருப்பிலும், தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    இந்த 2 இடங்களிலும் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 300 -ம், 35 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் , மற்றும் பினாமி பெயர்களில் இருந்த 14 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வங்கி லாக்கர் சாவி, 11 வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது பெண் அதிகாரி ஷோபனாவை போலீசார் கைது செய்யவில்லை. மேலும் உயர் அதிகாரிகளும் ’சஸ்பெண்ட்’ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

    இதைத்தொடர்ந்து கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வில் ஷோபனா கடந்த சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அங்கு பணியில் சேராமல் விடுப்பில் இருந்து வந்தார். லஞ்ச புகாரில் சிக்கி கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்த பிறகும் ஷோபனாவுக்கு பதவி உயர்வு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பெண் அதிகாரி ஷோபனா மீதான வழக்கு வேலூரில் இருந்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து திருவண்ணாமலை டி.எஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.மேலும் ஓசூரில் உள்ள ஷோபனாவின் 

    வீட்டுக்கு நேற்று மதியம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். ஆனால் அவர் வீட்டை விட்டு வெளயே வரவில்லை. மெயின் கேட்டும் பூட்டப்பட்டு இருந்தது. 

    இதையடுத்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.

    இதைதொடர்ந்து வீட்டுக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், ஷோபனாவிடம் சுமார் 2 மணிநேரம் விசாரணை செய்தனர். பின்னர் மேல் விசாரணைக்காக வேலூருக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் இந்த வழக்கு தொடர்பான ஷோபனாவை கைது செய்தனர். தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று கொரோனை பரிசோதனை செய்யப்பட்டது.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். 

    சூளகிரி அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 48). தையல் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் கோபசந்திரம் பக்கமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நாகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குருபரப்பள்ளி போலீசார் பந்தாரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளர் கந்தசாமி (46) என்பவரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    போலி ஆவணங்கள் தயாரித்து சிமெண்டு மூட்டைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழ் செவல்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 47). இவர் தனியார் சிமெண்டு நிறுவனத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவேரிப்பட்டணம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் காவேரிப்பட்டணம் அருகே பென்னேஸ்வரமடம் சிவன் கோவில் அருகில் நின்ற டாரஸ் லாரியை தான் சோதனை செய்தேன். அதில் 50 கிலோ எடை கொண்ட 49 சிமெண்டு மூட்டைகளும், டிரைவரும் மாயமாகி விட்டனர். மேலும் லாரியின் டிரைவர் போலியாக ஆவணங்கள் தயாரித்து சிமெண்டு மூட்டைகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 36). பெயிண்டர். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சத்யமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அருப்புக்கோட்டை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்த போலீசார் ஏட்டு இளங்குமரனை தேடி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்படி, துணை சூப்பிரண்டு சகாயஜோஸ் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து, போலீஸ்காரர்கள் செல்வக்குமார், பரமசிவம், சிவக்குமார், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படையும், காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீசார்கள் சிவபாலன், கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படையும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் காந்திநகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரை சோதனை செய்தபோது அதில் 6 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனைத் தொடர்ந்து 6 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அவர்கள் கடந்த மாதம் 26-ந் தேதி அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசனை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் என தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் கஞ்சநாயக்கன்பட்டி கோபிகண்ணன் (வயது 30), ராஜபாளையம் சம்பத் குமார் (51), திருமங்கலம் மகேஸ்வர்மா (27), அஜய்சரவணன் (29), மதுரையைச் சேர்ந்த அலெக்ஸ்குமார் (36), மூர்த்தி (34) என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த கார் தான் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த ரூ.88 ஆயிரம், 2 பவுன் தங்க நகை, கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஏட்டு இளங்குமரன் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது.

    அவர் கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தான் கணேசன் வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்து விட்டதால் கணேசன் தனியாக வசிப்பதை அறிந்த இளங்குமரன், தனது சகோதரர் சம்பத்குமாரிடம் தெரிவித்து கும்பலாக வந்தால் நகை, பணம் கொள்ளையடிக்கலாம் என திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.

    அதன் பேரில் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான சம்பத்குமார் உள்பட 6 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் ஏட்டு இளங்குமரனை தேடி வருகின்றனர்.

    கைதான அலெக்ஸ் குமார், மூர்த்தி ஆகியோர் மீது கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தது.



    கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் மழை வெள்ளம் தேங்காத அளவுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    சென்னை:

    சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்கி உள்ளது.

    சென்னையில் தி.நகர், கே.கே.நகர், மாம்பலம், மேற்கு மாம்பலம், கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம், புளியந்தோப்பு, எழும்பூர், வேளச்சேரி, மேடவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலை கமி‌ஷனர் அலுவலகம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளது.

    கடந்த ஒரு வாரமாக மழை நீர் வடிந்த இடங்களில் எல்லாம் தற்போது மீண்டும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

    மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.

    சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. இதில் தாழ்வான இடங்களில் உள்ள 500 தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.

    கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது.

    இதையடுத்து மீண்டும் மழை வெள்ளம் தேங்காத அளவுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வடிகால்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுரை வழங்கி உள்ளார்.

    பொதுமக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலர் தங்களது வீடுகளில் தேங்கும் குப்பைகளை கால்வாயில் கொட்டுவதும், மழை வெள்ளம் தேங்கி இருக்கும் நிலையிலும் குப்பைகளை வெள்ளத்திலேயே வீசுவதும் பல இடங்களில் தற்போதும் தொடருகிறது.

    இது தொடர்பாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள். குப்பைகள் கால்வாய்களில் தேங்குவதாலேயே தண்ணீர் வடியாமல் உள்ளது எனவும் கால்வாய்களை பராமரிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×