search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட 6 கொள்ளையர்களையும், அவர்களை பிடித்த தனிப்படையினரையும் காணலாம்
    X
    கைது செய்யப்பட்ட 6 கொள்ளையர்களையும், அவர்களை பிடித்த தனிப்படையினரையும் காணலாம்

    அருப்புக்கோட்டை கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கைது- திட்டம் வகுத்து கொடுத்த போலீஸ் ஏட்டை தேடும் பணி தீவிரம்

    அருப்புக்கோட்டை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்த போலீசார் ஏட்டு இளங்குமரனை தேடி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்படி, துணை சூப்பிரண்டு சகாயஜோஸ் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து, போலீஸ்காரர்கள் செல்வக்குமார், பரமசிவம், சிவக்குமார், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படையும், காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீசார்கள் சிவபாலன், கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படையும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் காந்திநகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரை சோதனை செய்தபோது அதில் 6 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனைத் தொடர்ந்து 6 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அவர்கள் கடந்த மாதம் 26-ந் தேதி அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசனை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் என தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் கஞ்சநாயக்கன்பட்டி கோபிகண்ணன் (வயது 30), ராஜபாளையம் சம்பத் குமார் (51), திருமங்கலம் மகேஸ்வர்மா (27), அஜய்சரவணன் (29), மதுரையைச் சேர்ந்த அலெக்ஸ்குமார் (36), மூர்த்தி (34) என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த கார் தான் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த ரூ.88 ஆயிரம், 2 பவுன் தங்க நகை, கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஏட்டு இளங்குமரன் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது.

    அவர் கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தான் கணேசன் வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்து விட்டதால் கணேசன் தனியாக வசிப்பதை அறிந்த இளங்குமரன், தனது சகோதரர் சம்பத்குமாரிடம் தெரிவித்து கும்பலாக வந்தால் நகை, பணம் கொள்ளையடிக்கலாம் என திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.

    அதன் பேரில் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான சம்பத்குமார் உள்பட 6 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் ஏட்டு இளங்குமரனை தேடி வருகின்றனர்.

    கைதான அலெக்ஸ் குமார், மூர்த்தி ஆகியோர் மீது கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தது.



    Next Story
    ×