என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் அருகே உள்ள சிந்தகம்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் பர்கூர்- பசவண்ண கோவில் சாலையில் மேல்கொட்டாய் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் நடந்து சென்ற சீனிவாசன் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த சீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சீனிவாசன் இறந்து விட்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கல்லாவி போலீசார் நாகமரத்துப்பள்ளம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற அதே ஊரை சேர்ந்த சின்னப்பன் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல சிங்காரப்பேட்டை போலீசார் சிங்காரப்பேட்டையில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் பாவக்கல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி ராசுவீதியை சேர்ந்த சாதிக் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 700 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.4 ஆயிரம் ஆகும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    தொழிலில் பங்குதாரராக இணைந்தால் லாபத் தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 கோடியே 60 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பழைய மத்திகிரியை சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 46). இவருடன், அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினர் பழகி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ரவிச்சந்திரன் தனது தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால் வரும் லாபத்தில் பங்கு தொகை தருவதாக ஜெயலட்சுமியிடம் கூறினார். அதை நம்பி ஜெயலட்சுமி ரூ.50 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ரவிச்சந்திரன் அவருக்கு லாபத்தில் பங்கு அளித்தார்.

    இதையடுத்து ரவிச்சந்திரன் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி பணம் பெற்று கொடுத்தால் லாபத்தில் பங்கு தருகிறேன் என கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஜெயலட்சுமி தனக்கு தெரிந்தவர்களிடம் வங்கி பண பரிவர்த்தனை மூலமாக ரூ.5 கோடியே 60 லட்சம் பெற்று கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட ரவிச்சந்திரன் அதன் பிறகு லாபத்தில் சரிவர பணம் கொடுக்க வில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் ரவிச்சந்திரன் தனது குடும்பத்துடன் மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயலட்சுமி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி விசாரணை நடத்தி ரவிச்சந்திரன், அவருடைய மனைவி லதா, மகன் ராகுல் மற்றும் சுபாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
    குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தண்ணீர் தேங்காமலும் தண்ணீர் தொட்டிகளை சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு பாதிப்பை காட்டிலும், இந்த ஆண்டு பாதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 40 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்காமலும், கொசுப்புழுக்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    கந்திகுப்பம் அருகே முதியவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் குரும்பர் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது75). அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (33) உறவினர்கள். இவர்களுக்குள் நில தகராறு இருந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் துரைசாமியை கிருஷ்ணன் தரப்பினர் தாக்கினார்கள். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி, கிருஷ்ணன் (33), சீதாராமன் (51) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா பெத்தனப்பள்ளி அருகே உள்ள வேட்டியம்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 30). இவர் கிட்டம்பட்டி இந்தியன் வங்கி முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். அதே போல கிருஷ்ணகிரி பழையபேட்டை மதர்சாய்பு தெருவை சேர்ந்தவர் அப்துல் சத்தார் (28) தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணகிரி போலீசில் புகார் செய்தனர். இதேபோல ராமாபுரம் திருமலை நகரை சேர்ந்தவர் இளவரசன் (35). இவர் பந்தாரப்பள்ளி அருகே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து இளவரசன் குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில் கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த சண்முக சுந்தரம் (50) என்பவர் இந்த 3 மோட்டார்சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி அருகே சூதாடிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி அருகே உள்ள வலசை கவுண்டனூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ராமமூர்த்தி, வேடியப்பன், சரவணன், ஞானவேல் ஆகியோர் போலீசாரை கண்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அங்கிருந்த 7 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்டு யானைகள் மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு வந்துள்ளதால் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்களும் விவசாயிகளும் பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தமிழக எல்லையில் கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் மீண்டும் 8 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையில் இருந்து வந்த ஒற்றையானை 2 வரை கொன்ற சம்பவத்தை அடுத்து காட்டு யானைகள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டி அடிக்கப்பட்டது.

    தற்போது இந்த யானைகள் மீண்டும் தமிழக எல்லையான கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகளை தமிழக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் துரத்தி அடித்து வருகின்றனர்.

    அப்போது 2 குழுக்களாக காட்டுயானைகள் பிரிந்து உள்ளதால் வனத்துறையினர் யானைகளை விரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுயானைகளை துரத்த 10-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் யானைகளை கண்காணித்து துரத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகிறனர்.

    காட்டுயானைகள் இருவரை கொன்ற சம்பவத்திற்கு பிறகு மீண்டும் காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்கு வந்துள்ளதால் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்களும் விவசாயிகளும் பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.
    ஓசூர் அருகே ஏரியை உடைத்ததாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் ஒன்றியம் ஒன்னல்வாடி ஊராட்சிக்குட்பட்ட சோமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை உடைத்ததாக, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூபதி, ஒன்னல்வாடி ஊராட்சி தலைவர் மாதேஷ் ஆகியோர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓசூர் கோகுல் நகர் மகாராஜா அவுட் பகுதியை சேர்ந்த சிவா (வயது31), வினோத் (38), சிவகுமார் (42), பாலக்கோடு அருகே பூதிப்பட்டியை சேர்ந்த பெருமாள் (61) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் சுண்ணாம்பு ஜீபியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி ஜெயா (வயது 62). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஓசூர் பூ மார்க்கெட்டுக்கு வேலைக்காக சென்றார். பின்னர் வேலை முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டில் பெட்டியில் வைத்திருந்த 1¾ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பணிக்கு வராமல் வருகை பதிவேட்டை முறைகேடாக பயன்படுத்திய சத்துணவு மைய அமைப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா மஞ்சுகொண்டப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை பார்வையிட்டார். அந்த நேரம் சத்துணவு மையத்தில் இருக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் பொருட்கள் இல்லை. இது தொடர்பாக அவர் பள்ளியின் தலைமை ஆசிரியர், சத்துணவு மைய உதவியாளரிடம் விசாரணை நடத்தினார்.

    அதில் சத்துணவு அமைப்பாளர் சவிதா என்பவர் பணிக்கு வராமல் இருந்ததும், பணியாற்றுவதை போல வருகை பதிவேட்டை முறைகேடாக பயன்படுத்தியதும், சத்துணவு மைய அரிசி, பருப்பு, முட்டை போன்ற உணவு பொருட்களை வீட்டில் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் கலெக்டரிடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.

    இந்த விசாரணையை தொடர்ந்து மஞ்சு கொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் சவிதாவை தற்காலிக பணியிடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டார். இதே போல புகாரின் பேரில் அஞ்செட்டி தாலுகா பெல்பட்னி சத்துணவு அமைப்பாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
    வேப்பனப்பள்ளி அருகே புகையிலை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி போலீசார் நேற்று முன்தினம் பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தினர். அப்போது குட்கா பொருட்கள் விற்றதாக நாகராஜபுரம் கோவிந்தசாமி (வயது 37), சவுளூர் கூட்ரோடு குமார் (44), வேப்பனப்பள்ளி நசீமா (33) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ×