என் மலர்tooltip icon

    கரூர்

    • கரும்புத்தோட்டம் அருகே திடீர் தீவிபத்து ஏற்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே உள்ள கரும்பு தோட்டம் அருகே இருந்த முள்வேலிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கரும்பு தோட்டங்களுக்கும், குடியிருப்பு வீடுகளுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • கரூர் அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதி கோரி மனு
    • கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர் நாள் கூட்டத்தில் கரூர் மாவட்டம், ரெங்கநாதன் பேட்டை சட்டப்பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஞானசேகர் வழங்கிய மனுவில், 'கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இருபாலரும் பயின்று வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சிறப்பாக பயின்று கடந்த கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். தற்போது இப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் தேவைப்படுகிறது. எனவே, வகுப்பறை கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளியின் நுழைவு வாயில் பாதையில் மழைக்காலங்க ளில் தண்ணீர் தேங்குகிறது. எனவே, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

    • கரூரில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • தற்போது ரூ.180 வரை விற்கப்படுகிறது

    கரூர்,

    தக்காளியின் விலை தற்போது உச்சத்தை தொட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ. 100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் வேளாண்மைத்துறை சார்பில் குறிப்பிட்ட சில ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.இருப்பினும் தற்போதைய நிலையில் கரூர் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நியாயமான விலையில் தக்காளி கிடைக்கவும் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய பொருளான தக்காளி விலை உயர் வால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி, குறைந்த விலைக்கு தக்காளி கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மது விற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    கரூர்,

    தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோகைமலை சந்தைபேட்டையில் உள்ள இட்லி கடையில் அதே பகுதியை சேர்ந்த அழகுக்குமார் (வயது 44) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். இதேபோல் புன்னம் சத்திரம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே மது விற்று கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம் வள்ளுவகுடி பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (33) என்பவரை வேலாயும்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • லேப்டாப்-செல்போன் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டார்
    • கடையில் விற்கப்பட்ட லேப்டாப்-சென்போனை போலீசார் மீட்டனர்

    கரூர்.

    தவுட்டுப்பாளையம் அருகே உள்ள கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர்கள் மாதவன், மாதேஸ்வரன். இந்தநிலையில் மாதவன் வீட்டில் இருந்த லேப்-டாப் மற்றும் மாதேஸ்வரன் என்பவர் வீட்டில் இருந்த செல்போன் ஆகியவை திருடுபோனது. இதுகுறித்து 2 பேரும் தனித்தனியாக வேலாயுதம்பாயையம் போலீசிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கட்டிப்பாளையம் கிணற்றுமேட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் லேப்-டாப் மற்றும் செல்போனை திருடி கரூர் பழைய அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் செல்போன் கடையில் லேப்-டாப் மற்றும் செல்போனை ரூ.2 ஆயிரத்திற்கு விற்றதும் தெரியவந்தது.இதையடுத்து அந்த கடைக்கு சென்ற போலீசார் லேப்-டாப் மற்றும் செல்போனை மீட்டனர். பின்னர் அந்த சிறுவனை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாயமான புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டு உள்ளார்
    • கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஆற்றில் வீசியதாக கைதான 4 உறவினர்கள் பரபரப்பு வாக்குமூலம்

    தொட்டியம், 

    கரூர் மாவட்டம், கருப்பம்பட்டியை சேர்ந்த மணியின் மகன் கிருஷ்ணமூர்த்தி(வயது 25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர், கருப்பம்பட்டியை சேர்ந்த கோபிகாவை(19) காதலித்து கடந்த மாதம் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோபிகா, கிருஷ்ணமூர்த்திக்கு தங்கை உறவு முறை என்றும், இதனால் இவர்கள் திருமணம் செய்து கொண்டது கோபிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த 21-ந் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக ஆஜராக திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள கோர்ட்டுக்கு காரில் வந்தார். பின்னர் அவர் கோர்ட்டில் இருந்து அதே காரில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.இதற்கிடையே இது பற்றி அறிந்த கோபிகாவின் உறவினர்கள் மற்ெறாரு காரில் அங்கு வந்தனர். கிருஷ்ணமூர்த்தியை பிடித்து அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.இந்நிலையில் வெகு நேரம் ஆகியும் கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பாததால் கோபிகா கவலை அடைந்தார். மேலும் இது குறித்து தொட்டியம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தியை காரில் கடத்தியதாக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த புதுக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீநாத் (24), கார்த்திக் (25), கோயம்பள்ளியை சேர்ந்த சரவணன் (29), கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி, கடந்த 24-ந் தேதி சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.ஆனால் கிருஷ்ணமூர்த்தி மீட்கப்படவில்லை. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கோபிகாவின் அண்ணன் ரவிவர்மன்(22), அவரது நண்பர் தினேஷ்(33), கோபிகாவின் தாய் ஹேமலதா(37), அவரது தாய் பாப்பாத்தி(57) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில், சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தியை காரில் கடத்திச்சென்ற அவர்கள், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை தஞ்சை மாவட்டம், சுக்காம்பாறை காவிரி ஆற்றில் வீசிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதையடுத்து கடத்தல் என்று பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றி, ரவிவர்மன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக கோபிகாவின் சித்தி இந்திரா, சித்தப்பா பிரகாஷ், ரவிவர்மனின் நண்பர்கள் பத்திரி, மோகன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இதற்கிடையே சுக்காம்பாறையில் உள்ள ஆற்றில் கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் அவரது உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கிணற்றில் மின் மோட்டார் பழுது பார்த்த போது தண்ணீரில் மூழ்கி ஒருவர் பலியானார்
    • தீயணைப்பு துறையினர் வந்து உடலை மீட்டனர்

    குளித்தலை, 

    குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்தலூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மின் மோட்டார் பழுதடைந்ததை சரி செய்வதற்காக ஆர்ச்சம்பட்டியைச் சேர்ந்த ரங்கதுரை (45) பழுது பார்த்துக் கொண்டிருந்த பொழுதுகயிறு கிணற்றில் தவறி விழுந்தவிட்டது, கிணற்றில் கயிறை எடுக்கச் செல்லும் பொழுது கிணற்றில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழப்பு, இவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர், உடலை குளித்தலை போலீசார் கைப்பற்றி உடல் கூறு பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,இறந்த ரங்கதுரை ஆர்ச்சம்பட்டி ஊராட்சி மன்றத்தில் ஐந்தாவது வார்டு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது, இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தி.மு.க.வை சேர்ந்த 15 பேர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்
    • கரூர் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கி தொடர்டையவர்கள்

    கரூர்,

    கடந்த மே மாதம் 26-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட வந்தனர். அப்போது அசோக் குமார் வீட்டில் சோதனை தொடங்க வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி பெண் அதிகாரிகளை தாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.அதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் இடங்களில் நடைபெற்ற சோதனையையும், தடுத்ததாக கூறப்படுகிறது.திமுகவினரால் தாக்கப்பட்டு சோதனைக்கு வந்த வருமான வரித்துறை பெண் அதிகாரி காயத்ரி உட்பட நான்கு பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது கரூர் நகர காவல் துறையிலும் மற்றும் தாந்தோனிமலைக காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு கரூர் மாநகராட்சி கவுன்சிலர் இரண்டு பேர் உட்பட 19 நபர்களை கைது செய்தனர்.இந்நிலையில் ஜாமீன் கோரி திமுகவினர் மனு தாக்கல் செய்தனர். மனுவானது முதன்மை அமர்வு நீதிபதி அம்பிகாவிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜாமீன் தரக் கூடாது என வாதம் முன்வைத்த நிலையில், நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது நீதிமன்றம். தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கானது விசாரணை நடைபெற்ற நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது, அதிகாரிகளை தாக்கியது, ஆவணங்களை எடுத்துச் சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மற்றும் முன்ஜாமினை ரத்து செய்யக் கோரியும், வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஜாமீன் ரத்து செய்யப்பட்ட அனைவரும் மூன்று நாட்களில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.மேலும், கரூர் நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என உத்தரவிட்டார். இந்நிலையில் திமுக கவுன்சிலர்களான லாரன்ஸ், பூபதி மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஜோதி பாசு, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் ஜிம் பாலாஜி, அருண்குமார உட்பட 15 பேர் இன்று காலை கரூர் கோர்ட்டில் ஆஜராகினர். இதில் 11 பேர் கரூர் ஜே. எம்.கோர்ட் நீதிபதி அம்பிகாவதி முன்பும், நான்கு பேர் கரூர் ஜே.எம்.இரண்டாவது கோர்ட்டில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் ஆஜராகி உள்ளனர். மீதமுள்ள நான்கு பேர் இன்று கோர்ட்டில் ஆஜராகாததால் அவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி அதிகாரி உடல் நசுங்கி பலி
    • படுகாயம் அடைந்த நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

    குளித்தலை, 

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரோடு ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 34). இவர் அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.மதுரை மாவட்டம் வில்லாபுரம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (37) . இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.நண்பர்களான இவர்கள் இருவரும் கோவையில் நேற்று நடைபெற்ற தனியார் வங்கி மேலாளர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றனர். பின்னர் ஒரு காரில் இருவரும் வீடு திரும்பினர்.இந்த கார் நேற்று நள்ளிரவு குளித்தலை அருகே திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் வந்த போது விபத்துக்குள்ளானது.திருச்சியில் இருந்து கரூர் நோக்கி தைல மரம் ஏற்றிச் சென்ற லாரியும் அந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.இதில் கார் தூக்கி வீசப்பட்டு சாலையோரம் கவிழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சீதாராமன் இடுப்பாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருச்சி மேலாளர் விக்னேஷ் படுகாயத்துடன் தப்பினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து இறந்த சீதாராமனின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.சீதாராமனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். உறவினர்கள் அவரை தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்துள்ளனர்.மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்தில் கணவர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வரத்து குறைவால், ஏலம் மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்ந்தது
    • வெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் , மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம் ,நல்லிக்கோயில், கொங்கு நகர், நடையனூர் ,கவுண்டன் புதூர் ,பேச்சிப்பாறை, நன்செய் புகளூர், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெட்டி செல்வதற்காக புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2700 வரை விற்பனை செய்து வருகின்றனர்.இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லமானது, ஏலம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வெல்லம் வாங்கும் வியாபாரிகள், தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,250-க்கும், அச்சுவெல்லம் ரூ1210 க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,290க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ 1,250க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ2700 வரை விற்பனையாகிறது. வெல்லம் உற்பத்தி குறைவால், விலை அதிகரித்துள்ளது . இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் திடீர் என்று தீப்பற்றி எரிந்தது.
    • வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் -வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் இருந்து திருக்காடுதுறை செல்லும் பிரிவு சாலை அருகே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது .அதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கழிவுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • அனுமதியின்றி இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது
    • அதிகாரிகள் உடனடி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம், உப்புப்பாளையம், பசுபதிபாளையம், தென்னிலை, பரமத்தி காரு டையாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கல்குவாரிகள் அரசு அனுமதி அளித்ததற்கு மேல் குழி தோண்டப்பட்டு பாறைகள் வெட்டப்பட்டு வருகிறது. பல கல்குவாரிகள் அனுமதி பெறாமல் வெட்டப்பட்டு வருகிறது. மேலும் அனுமதி முடிந்தும் பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் உள்ள கல்குவாரி பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி, கல்குவாரியில் வாகனங்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு, பகல் பாராமல் கல்குவாரியில் வெடி வைப்பதால் அருகாமையில் உள்ள வீடுகள் அதிர்கின்றன. சுற்றுப்புற சூழல் பாதிப்படைந்து வருகிறது. எனவே கனிமவளத்துறை அதிகாரிகள் நியாயமான, நேர்மையான முறையில் ஆய்வு செய்து கல்குவாரி அதிபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×