என் மலர்
நீங்கள் தேடியது "Kalquari"
- தூசியால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு விடுத்தனர்.
- முதல்கட்டமாக தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை அடுத்த மாஸ்திபாளையம் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கல்குவாரி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
குவாரியை சுற்றிலும் மாஸ்தி பாளையம், இரும்பறை, பட்டக்கா ரம்பாளையம், இட்டிடே பாளையம், பாசக்குட்டை, மொக்கையூர், தாச க்காளியூர், சண்முகாபுரம், ஓதிமலை கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கல்குவாரியில் பாறை வெடிப்பதனால் ஏற்படும் தூசி சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் பரவி வருகிறது.
இந்த காற்று மாசுபாட்டால் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் மேயக்கூடிய இடங்களிலும் தூசி படிந்து இருக்கிறது.
இதனை கால்நடைகள் சாப்பிடுவதால் வயிற்று கோளாறு ஏற்பட்டு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.
மேலும் வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்கள் மீது தூசு படிவதால் அவை போதிய அளவில் வளர்ச்சி அடையாமல் மகசூல் பாதிக்கப்படுகிறது. எனவே மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகளும், கனிம வளத்துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே தூசி பரவுவதை தடுக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பொதுமக்கள் கல்குவாரி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயி ரமேஷ் கூறுகையில், இந்த கல்குவாரியால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓதிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வழித்தடம் மறிக்கப்பட்டு இந்த கல்குவாரி செயல்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக கூறியும் இன்று வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே இந்த கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்றார்.
விவசாயி பொன்னுசாமி கூறும்போது, கல்குவாரியி்ல் சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன்படுத்துவதால் நிலத்தடி போர்வெல் பாதிக்கப்பட்டு தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது. வருடத்தில் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. அப்போது பயிரிட்டால் கல்குவாரியின் உரிமையாளா் எங்களை மிரட்டுகிறார்.
இதனை அரசின் கவனத்திற்கு தெரிவிப்பதற்காகவே நாங்கள் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மூலம் எங்களின் போராட்டத்தை முதல்கட்டமாக தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்.
- ரோடுகளுக்கு தண்ணீர் விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- மண்புழுதி பறக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில் கைவிடப்பட்ட பழைய கல்குவாரி உள்ளது. இதில் உள்ள தண்ணீரை கல்குவாரி லாரிகள் மூலம் எடுத்துச் சென்று கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி செயல்படும் பகுதிகளில் உள்ள ரோடுகளுக்கு தண்ணீர் விட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த ரோடுகளில் கல்குவாரி லாரிகள் செல்லும் போது மண்புழுதி பறக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சுக்கம்பாளையம் பகுதியில் தண்ணீர் எடுக்கச் சென்ற 2 லாரிகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை நடைபெறு வதாகவும், இதனால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு இங்குள்ள விவசாய கிணறுகள் வற்றி விடுவதாகவும், பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) பல்லடம் தாலுகா அலுவ லகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- பல்லடம் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
- லாரிகளுக்கு போலீசார் சுமார் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி,நடு வேலம்பாளையம்,கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி கடந்த 4 நாட்களாக அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற 10க்கும் மேற்பட்ட கேரளா மாநில லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த லாரிகளுக்கு போலீசார் சுமார் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்தனர்.இதற்கிடையே, கனிம வளங்களை அதிக அளவில் எடுத்துச் செல்வதை தடுத்து நிறுத்த விட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியோர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், போலீசார் மற்றும் வருவாய்த்துறை நடவடிக்கையால் தற்பொழுது வெளி மாநில லாரிகள் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன், என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
கல்குவாரி மற்றும் பாரம் ஏற்பட்ட லாரிகளை புலத் தணிக்கை செய்ய உள்ளோம். கிராமப்புற சாலைகள் பழுதடையாமல் அனுமதிக்கப்பட்ட பாரம் கொண்ட லாரிகளை பயன்படுத்த வேண்டும்என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் சுப்ரமணியன், திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அனுமதியின்றி இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது
- அதிகாரிகள் உடனடி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம், உப்புப்பாளையம், பசுபதிபாளையம், தென்னிலை, பரமத்தி காரு டையாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கல்குவாரிகள் அரசு அனுமதி அளித்ததற்கு மேல் குழி தோண்டப்பட்டு பாறைகள் வெட்டப்பட்டு வருகிறது. பல கல்குவாரிகள் அனுமதி பெறாமல் வெட்டப்பட்டு வருகிறது. மேலும் அனுமதி முடிந்தும் பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் உள்ள கல்குவாரி பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி, கல்குவாரியில் வாகனங்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு, பகல் பாராமல் கல்குவாரியில் வெடி வைப்பதால் அருகாமையில் உள்ள வீடுகள் அதிர்கின்றன. சுற்றுப்புற சூழல் பாதிப்படைந்து வருகிறது. எனவே கனிமவளத்துறை அதிகாரிகள் நியாயமான, நேர்மையான முறையில் ஆய்வு செய்து கல்குவாரி அதிபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தலைமுறைவான ராமையாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- திட்டமிட்டு ஜகபர் அலியை கொலை செய்தேன்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவர் திருமயம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு செயலாளராகவும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.
சமூக ஆர்வலரான இவர் திருமயம் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டி வந்தார். மேலும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து குவாரி அதிபர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. ஆனால் அபராத தொகை வசூலிக்கப்படவில்லை
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அபராத தொகை வசூலிக்காதது குறித்து மீண்டும் ஜகபர் அலி அரசு அதிகாரிகளை கேள்வி எழுப்பினார்.
மேலும் 20 ஆயிரம் டாரஸ் லாரி அளவுக்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு அனுமதி இல்லாத இடத்தில் கொட்டப்பட்டு உள்ளது என உதவி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
அதை தொடர்ந்து அந்த கனிம வளம் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் இரவோடு இரவாக அகற்றும் பணி பணி நடைபெற்றுள்ளது. இது குறித்து கடந்த 13-ந் தேதி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் அரசு அலுவலர்களிடம் கனி கனிமவள கொள்ளை குறித்து மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி ஸ்கூட்டரில் சென்றபோது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். முதலில் திருமயம் போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவரது மனைவி மரியம் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்ததால் அவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் எனவும் திருமயம் போலீசில் புகார் செய்தார். பின்னர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய புலன் விசாரணையில் 2 கல்குவாரி அதிபர்கள் சேர்ந்து திட்டமிட்டு அவரை லாரி ஏற்றி கொலை செய்தது அம்பலமானது. அதைத் தொடர்ந்து திருமயம் பகுதியை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் முருகானந்தம் (56 ) போலீசில் சரணடைந்தார்.
இதை தொடர்ந்து லாரியை ஏற்றி சமூக ஆர்வலரை கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் காசிநாதன் (45) கைது செய்யப்பட்டார். இவர் சமூக ஆர்வலரின் நடமாட்டத்தை கண்காணித்து முருகானந்தத்திற்கு தகவல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை பின்னணியில் கல்குவாரி உரிமையாளர்களான திருமயம் பாப்பாத்தி ஊரணியைச் சேர்ந்த ராசு (54), அவரது மகன் தினேஷ் (28) மற்றும் மற்றொரு கல்குவாரி உரிமையாளரான ராமையா ஆகியோர் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த கொலையை திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் கல்குவாரி அதிபர் ராசு மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
தலைமுறைவான ராமையாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கைதான லாரி உரிமையாளர் முருகானந்தம் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கல்குவாரி அதிபர்கள் ராசு மற்றும் ராமையா ஆகியோரின் சதி திட்டத்தின் படி திட்டமிட்டு ஜகபர் அலியை கொலை செய்தேன். அவர் மசூதியில் இருந்து திரும்பி வரும் வழி குறித்து எனது மினி லாரி டிரைவர் காசிநாதனை கண்காணிக்க செய்து தகவல் அளிக்க சொன்னேன்.
அவரும் அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து எனக்கு தகவல் அளித்தார். அதன் பின்னர் அவர் மீது திட்டமிட்டபடி மினி லாரியை மோதச் செய்தேன். முதல் முறை மோதியபோது படுகாயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் ஒருவேளை உயிர் பிழைத்து விடுவார் எனக் கருதிய நான் 2-வது முறை மீண்டும் மோதி அவரை கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர் கொலையும், லாரி உரிமையாளரின் வாக்குமூலமும் மீண்டும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.