search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்குவாரி லாரிகளை இயக்க வேண்டும் - தாசில்தார் அறிவுறுத்தல்
    X

    ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    பல்லடத்தில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்குவாரி லாரிகளை இயக்க வேண்டும் - தாசில்தார் அறிவுறுத்தல்

    • பல்லடம் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
    • லாரிகளுக்கு போலீசார் சுமார் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி,நடு வேலம்பாளையம்,கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி கடந்த 4 நாட்களாக அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற 10க்கும் மேற்பட்ட கேரளா மாநில லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அந்த லாரிகளுக்கு போலீசார் சுமார் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்தனர்.இதற்கிடையே, கனிம வளங்களை அதிக அளவில் எடுத்துச் செல்வதை தடுத்து நிறுத்த விட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியோர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், போலீசார் மற்றும் வருவாய்த்துறை நடவடிக்கையால் தற்பொழுது வெளி மாநில லாரிகள் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன், என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.

    கல்குவாரி மற்றும் பாரம் ஏற்பட்ட லாரிகளை புலத் தணிக்கை செய்ய உள்ளோம். கிராமப்புற சாலைகள் பழுதடையாமல் அனுமதிக்கப்பட்ட பாரம் கொண்ட லாரிகளை பயன்படுத்த வேண்டும்என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் சுப்ரமணியன், திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×