search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரியை முற்றுகையிட்ட விவசாயிகள், பொதுமக்கள்
    X

    கல்குவாரியை முற்றுகையிட்ட விவசாயிகள், பொதுமக்கள்

    • தூசியால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு விடுத்தனர்.
    • முதல்கட்டமாக தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை அடுத்த மாஸ்திபாளையம் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கல்குவாரி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

    குவாரியை சுற்றிலும் மாஸ்தி பாளையம், இரும்பறை, பட்டக்கா ரம்பாளையம், இட்டிடே பாளையம், பாசக்குட்டை, மொக்கையூர், தாச க்காளியூர், சண்முகாபுரம், ஓதிமலை கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கல்குவாரியில் பாறை வெடிப்பதனால் ஏற்படும் தூசி சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் பரவி வருகிறது.

    இந்த காற்று மாசுபாட்டால் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் மேயக்கூடிய இடங்களிலும் தூசி படிந்து இருக்கிறது.

    இதனை கால்நடைகள் சாப்பிடுவதால் வயிற்று கோளாறு ஏற்பட்டு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.

    மேலும் வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்கள் மீது தூசு படிவதால் அவை போதிய அளவில் வளர்ச்சி அடையாமல் மகசூல் பாதிக்கப்படுகிறது. எனவே மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகளும், கனிம வளத்துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதனிடையே தூசி பரவுவதை தடுக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பொதுமக்கள் கல்குவாரி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து விவசாயி ரமேஷ் கூறுகையில், இந்த கல்குவாரியால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓதிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வழித்தடம் மறிக்கப்பட்டு இந்த கல்குவாரி செயல்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக கூறியும் இன்று வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே இந்த கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்றார்.

    விவசாயி பொன்னுசாமி கூறும்போது, கல்குவாரியி்ல் சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன்படுத்துவதால் நிலத்தடி போர்வெல் பாதிக்கப்பட்டு தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது. வருடத்தில் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. அப்போது பயிரிட்டால் கல்குவாரியின் உரிமையாளா் எங்களை மிரட்டுகிறார்.

    இதனை அரசின் கவனத்திற்கு தெரிவிப்பதற்காகவே நாங்கள் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மூலம் எங்களின் போராட்டத்தை முதல்கட்டமாக தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×