என் மலர்
கரூர்
கரூர்,
கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக இராணுவ வீரர்களுக்கு அனுப்புவதற்காக ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி பரணி பள்ளி வளாகத்தில் தொடங்கியது. 7வது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்விற்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் தலைமை தாங்கினர். தேசிய மாணவர் படை தமிழ்நாடு இரண்டாவது பட்டாலியன் தலைமை அதிகாரி லெப்டிணன்ட் கர்னல் அருண் குமார் ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.இது குறித்து தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் ராமசுப்ரமணியன் கூறுகையில், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த நற்செயலை செய்வதில் பரணி பார்க் கல்விக் குழுமம் மிகவும் பெருமைக்கொள்கிறது. கடந்த 2017 முதல், கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் சார்பாக எல்லையைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கு ராக்கிகளை அனுப்பி வருகிறோம். 2017-ல் 15 ஆயிரம் ராக்கிகள், 2018-ல் 16 ஆயிரம் ராக்கிகள், 2019-ல் ஒரு லட்சம் ராக்கிகள் மற்றும் 2020, 2021-ல் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் ராக்கிகள் அனுப்பப்பட்டன. (கோவிட் தொற்று நோய் இருந்தபோதிலும் அனுப்பப்பட்டன). கடந்த 2022-ம் ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ராக்கிகள் அனுப்பப்பட்டன. அதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் அழைத்துப் பாராட்டியது மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்திய, முப்படைகளுக்கு நமது மகிழ்ச்சி மற்றும் நன்றியின் அடையாளமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் திருக்குறள் ராக்கிகளை தயார் செய்து வருகிறோம். திருக்குறள் எண் 766ஐ 18 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து பதித்துள்ளோம். என்று அவர் கூறினார்.இந்நிகழ்வில் பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர் பரணி பார்க் தேசிய மாணவர் படை அலுவலர் செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளப்பட்டி நகராட்சி பெண் தலைவரை மாற்ற கோரி கவுன்சிலர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
- 20 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையர் பால்ராஜை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி 27 வார்டுகள் கொண்டது. இதில் நகர்மன்ற பெண் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த முனவர் ஜான் பதவி வகித்து வருகிறார். இவர் நகராட்சிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை முறையாக செய்யாமல், கழிவுநீர் வடிகால், மின்விளக்கு, சின்டெக்ஸ் தொட்டி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொள்முதல் செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனையின்றி தன்னிச்சையாக முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றுவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து நகர் மன்ற பெண் தலைவரை மாற்ற கோரி, தி.மு.க.வைச் சேர்ந்த துணைத் தலைவர் தோட்டம் பஷீர் உள்ளிட்ட 18 தி.மு.க. கவுன்சிலர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர், சுயேச்சை கவுன்சிலர் என 20 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையர் பால்ராஜை சந்தித்து புகார் மனு அளித்தனர். இது குறித்து புகார் மனு அறித்த கவுன்சிலர்கள் கூறும்போது, நகர் மன்ற தலைவரை மாற்றாத பட்சத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
- அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ.2.16 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது
- போதிய லாபம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
வேலாயுதம்பாளையம்,
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்நிலக்கடலை காய் 27.78 குவிண்டால் எடை கொண்ட 85-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.35-க்கும், சராசரி விலையாக ரூ.78.30-க்கும் என ரூ 2 லட்சத்து 16ஆயிரத்து 348-க்கு விற்பனையானது.
- கரூர் வேளாளர் மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் தினவிழா நடைபெற்றது
- தாய்ப்பால் கொடையாளர் கௌசல்யா அருண்குமார் பங்கேற்பு
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உப்புப்பாளையத்தில் செயல்பட்டு வரும் கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தொடங்கி வைத்தார். கல்லூரின் அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மனோ சாமுவேல் தலைமை வகித்தார்.இவ்விழாவிற்கு சான்றிதழ் பெற்ற தாய்பால் ஆலோசகர் மற்றும் ஆதினி தாய்ப்பால் தான நிறுவனர் கௌசல்யா அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், நன்மைகள் குறித்தும் மாணவிகளிடையே கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் 300- க்கும்மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
- செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள கிரானைட் கடை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடைபெற்று வருகிறது.
- செங்குந்தபுரத்தில் உள்ள இளந்தளிர் பைனான்ஸ் நிதி நிறுவனம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.
கரூர்:
தமிழக அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது குடும்ப வீடு கரூர் மண்மங்கலம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ளது. இவரின் தம்பி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவரது வீடு மற்றும் அமைச்சரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மே மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் அப்போது சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறையினரை தி.மு.க.வினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் துணை ராணுவ படை போலீஸ் பாதுகாப்புடன் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அமைச்சரின் நண்பர்கள் சங்கர், கொங்கு மெஸ் மணி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. பின்னர் 2-வது முறையாக நடந்த சோதனை 8 நாட்கள் நீடித்தது.
இதில் பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி வீடுகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு சீல் வைத்தனர்.
அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதற்கிடையே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த காரணத்தால் அவர் வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் ஆயர்தீர்வை துறை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 11-ந்தேதி 3-வது முறையாக செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 4-வது முறையாக தற்போது அமலாக்கத்துறை கரூரில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அமலாக்கத்துறையினர் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கோவை சாலையில் உள்ள சங்கர் வீடு மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனம், செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மற்றும் தனலட்சுமி உரிமையாளர் வீடு ஆகிய 4 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். சங்கர் வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை 9 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் வீட்டில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை உடனடியாக உறுதிபடுத்த இயலவில்லை. இந்த சோதனையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- புகளூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு கண்ணாடி வழங்கும் விழா நடைபெற்றது
- நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் மாணவிகளுக்கு கண்ணாடி வழங்கினார்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் பள்ளி மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு பள்ளியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடி வழங்கி கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியினை சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.விழாவில், கண் மருத்துவர் முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர்கள், தலைமையாசிரியை, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. மாநாட்டிற்கான பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டும் பணி கரூரில் தொடங்கியது
- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
கரூர்,
மதுரையில் அதிமுக மாநாடு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கரூரில் மாநாடு தொடர்பாக 100 ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் செய்யும் பணியினை முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி, அவைத்தலைவர் திருவிகா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், மதுரையில் நடைபெறும் இந்த மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும் . இந்த மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் தி.மு.க. ஆட்சியை விட்டு அகற்றப்படும். மாநாட்டிற்காக சுவர் விளம்பரமும் செய்து வருகிறோம் அதை சிலர் தடுத்து வருகின்றனர் . அதனால் மாநாட்டு கூட்டத்தை தடுத்து விட முடியாது. அரசுப் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு என்று வரைமுறை இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் மீறி பேருந்து முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். இது வரை முறை மீறிய செயல். இதனால் விபத்துக்கள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்
- கரூரில் காகித ஆலை ஊழியர் மகள் மாயமானார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (50). இவர் புகளூர் காகித ஆலையில் நிரந்தர ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் புவனேஸ்வரி (22).பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் குணசேகரன் காகித ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டு பணிகள் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தனது மகள் புவனேஸ்வரியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த குணசேகரன், அவரது உறவினர்கள், நண்பர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று புவனேஸ்வரியை தேடிப் பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை, இது குறித்து புவனேஸ்வரியின் தந்தை குணசேகரன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கரூர் - திருச்சி சாலையில் குவிந்துள்ள மணலை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- விபத்து ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் அகற்ற வேண்டுகோள்
கரூர்,
கரூர் - திருச்சி பைபாஸ் சாலையில், வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் இருந்து மாயனூர் வரை சீத்தப்பட்டி, உப்பிடமங்கலம், புலியூர், உள் வீரராக்கியம் ஆகிய பகுதி பிரிவுகள் அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த மேம்பால பகுதிகளில் மணல் படிந்துள்ளன. அதிக காற்றின் காரணமாக தற்போது வழக்கத்தை விட அதிகளவு மணல் குவிந்துள்ளன. இதன் காரணமாக பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி விடும் இருசக்கர வாகன ஓட்டிகள், மணல் குவியலில் சறுக்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலை ஓர மணல் குவியலை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
- குளித்தலையில் பைக் மோதிய விபத்தில் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்
- இருவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
கரூர்,
குளித்தலை அடுத்த, வதியம் பஞ்., நடு வதியம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் (வயது 44). இவரது மகன் சரண்குமார்(வயது 16) இருசக்கர வாகனத்தில் குளித்தலை நோக்கி சென்றார். சுங்ககேட் மணப்பாறை நெடுஞ்சாலையில் இருந்து அருகே வந்த பைக், சிறுவன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் சரண்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர், கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சிறுவனின் தந்தை கலையரசன் கொடுத்த புகார்படி, பைக்கை ஓட்டி வந்த வாலாந்தூர் கிராமத்தை சேர்ந்த கிருத்திக் பாலாஜி, பைக் உரிமையாளர் குளித்தலை அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவர் மீது, குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேட்டமங்கலத்தில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது பொருட்கள் நாசமானது
- தாய், மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் வேட்டமங்கலத்தில் உள்ள காலனியில் சின்னையன், பாப்பாத்தி, என்ற தம்பதியினருக்கு கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு வீடு வழங்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து போன பிரேம்குமார் குமார் என்பரின் மனைவி பவித்ரா(25) தனது 7 மாத குழந்தையுடன் இந்த வீட்டில் குடியிருந்து இருந்து வந்தார். பவித்ரா குழந்தையுடன் வெளியில் சென்றிருந்த நேரத்தில், தொகுப்பு வீட்டின், மேற்கூரையும் சுவர்களும் இடிந்து விழுந்தது.இதனால் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமாயின. இது குறித்து வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு, பவித்ரா தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் நாட்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர், ஜேசிபி இயந்திரம் வரவழைத்து, இடிந்து விழுது கிடந்த சுவர்களையும், பாதியில் நின்ற சுவர்களையும் அப்புறப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி கூறினர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (60). இவரது மகன் கிஷோர் (13). இவர் வேட்டமங்கலம் பி.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வேலாயுதம்பாளையம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் நொய்யல்- வேலாயுதம் பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேமங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி தார் சாலையின் ஓரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கிஷோருக்கு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிஷோரின் தாய் மணிமேகலை வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






