என் மலர்tooltip icon

    கரூர்

    • குளித்தலை அருகே பைக் மோதிய விபத்து கூலித்தொழிலாளி பலியானார்
    • பாலவிடுதி போலீசார் உடலை கைப்பற்றி, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கடவூர் சுருமான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47) கூலித்தொழிலாளி. இவர், தனக்கு சொந்தமான, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில், கடவூர்-இடையப்பட்டி நெடுஞ்சாலை, சுருமான்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே, மற்றொரு,' 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் அதிவேகமாக வந்தவர், பெருமாள் ஓட்டிவந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பெருமா ளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அருகிலி ருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து புகார்படி, பால விடுதி போலீசார், விபத்தை ஏற்படுத்திய சுருமான்பட்டியை சேர்ந்த டிராவல்ஸ் வேன் டிரைவர் அறிவுநீதி (வயது 32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • மகளிர் சுய உதவி குழுவுக்கு சுழல் நிதிக்கடன் வழங்கப்படும்
    • கரூர் மாவட்டம் கலெக்டர் பிரபு சங்கர் அறிவித்து உள்ளார்

    கரூர், 

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கரூர் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட் சிகளில் வசிக்கும் 18 வயது நிரம்பிய ஏழை குடும்பங்களை சேர்ந்த மகளிரை கொண்டு புதிதாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட உள்ளது. புதிதாக துவங்கப்படும் குழுக்களுக்கு சுழல்நிதியாக ரூ.10ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.2லட்சம் முதல் 20 லட்சம் வரை வங்கி கடன் பெற்றுத் தரப்படும். இந்த கடனிற்கு 7 சதவீதத்திற்கு மேல் வட்டி மானியமும் வழங்கப்படும். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மாநக ராட்சி, பள்ளப்பட்டி, புகளூர், குளித்தலை நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் உள்ள இதுவரை மகளிர் குழுவில் இணையாத பெண்கள் உடனடியாக மகளிர் குழுவில் இணைந்து அனைத்து பயன்களையும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், மணவாசி நடுநிலை பள்ளிக்கு ‘புதிய பாரத எழுத்தறிவு’ விருது வழங்கப்பட்டு உள்ளது
    • எழுதபடிக்கத்தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டது

    கரூர்,

    தமிழகத்தில், மத்திய அரசு சார்பில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில், 'புதிய பாரத எழுத்தறிவு' திட்ட செயல்படுத்தப்படுகிறது. இதில், எழுத்தறிவு மட்டுமல்லாது வங்கி ஏ.டி.எம்., அஞ்சலக பயன்பாடு குறித்து பயிற்சிகள் தரப்படுகிறது. இதில், மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும் மையம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மணவாசி நடுநிலைப்பள்ளி சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரைச்செல்வி, தலைமை ஆசிரியர் தேன்மொழி தன்னார்வலர் வசந்தி ஆகியோருக்கு, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா வாழ்த்து தெரிவித்தார்.

    • க.பரமத்தி அருகே கள் விற்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • வாட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த கள் பறிமுதல்

    கரூர்,

    க.பரமத்தி அடுத்த தென்னிலை சுற்று பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி கள் இறக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் கருஞ்செல்லிபாளையம் என்ற இடத்துக்கு சென்றனர். பாளையத்தை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பாலசுப்பிரமணி (எ) பாலுகுட்டி(வயது 47) என்பவர் நிலத்தில் அனுமதியின்றி கள் இறக்கி வாட்டர் பாட்டிலில் விற்பனை செய்து கொண்டிருப்பது, தென்னிலை போலீ சாரால் கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தென்னிலை அருகே கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், 

    ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பழனி(வயது 44). இவர் தென்னிலை, மொஞ்சனூர் அருகே கருஞ்செல்லிபாளையம் பகுதியில் வேட்டாங்காடு தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி கடந்த 2 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரது மனைவியுடன், போனில் பேசியபோது வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார். பலமுறை தொடர்பு கொண்டும் கிடைக்காததால் அவரது மனைவி, தோட்ட உரிமையாளர் முத்துச்சாமிக்கு தகவல் கூறி உள்ளார். இதன் காரணமாக முத்துச்சாமி வந்து பார்த்தார். அப்போது மயக்க நிலையில் இருந்த பழனியை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து பழனி மர்மமாக இறந்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோட்டக்குறிச்சி அருகே கருப்பண்ணசாமி கோவிலில் ஆடி மாத சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
    • கருப்பண்ணசாமிக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி அருகே குன்னிகாட்டூர் பகுதியில் உள்ள கருப்பண்ணசாமிக்கு ஆடி பதினெட்டு முடிந்த மூன்றாவது நாள் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜையை முன்னிட்டு கருப்பண்ணசாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கருப்பண்ணசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கருப்பண்ண சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • வேட்டமங்கலம் அருகேவீட்டு கதவின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது
    • வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே ஒரம்புப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 44). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ஓலப்பாளையத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். முத்தூரில் நிதி நிறுவனத்தை பார்த்துக் கொண்டு அங்கிருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் ஓலப்பாளையம் வந்து விவசாய பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு வந்து விட்டு விவசாய பணிகளை செய்துவிட்டு முத்தூரில் உள்ள தனது நிதி நிறுவனத்திற்கு சென்று விட்டார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டுகதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து பீரோவுக்குள் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து சந்திரசேகரன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார் . புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • பா.ஜ.க.வும், காங்கிரசும் திட்டத்திற்கு உரிமை கொண்டாடி அடித்துக்கொள்வதால் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • திட்ட பணிகள் நிறைவேற இருவேறு கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    கரூர்:

    நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 508 ரெயில் நிலையங்கள் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் புதுப்பிக்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் கரூர், தஞ்சாவூர் உட்பட 18 ரெயில் நிலையங்கள் ரூ.515 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

    அதனை தொடர்ந்து கரூர் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதி மணி அந்த அடிக்கல்லை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட முதன்மை திட்ட மேலாளர் அணில்குமார் பஞ்ஜியார், கரூர் உதவி கலெக்டர் ரூபினா, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தின் படி கரூர் ரெயில் நிலையத்தில் லிப்ட், நகரும் படிக்கட்டு, பயணிகள் காத்திருப்பு அறை, பயணிகள் உள்ளே, வெளியே செல்ல தனித்தனி வழிகள் உள்ளிட்ட வசதிகள் ரூ.34 கோடியில் அமைக்கப்படுகிறது. மேற்கண்ட பணிகளை அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதற்கு காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகளும் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.ஜோதிமணி நிருபர்களிடம் கூறும்போது, கரூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தி மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கடந்த 2020-ம் ஆண்டு கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் தற்போது ரூ.34 கோடியில் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.

    இதனை பா.ஜ.க. ஏற்க மறுத்தது. அந்த கட்சியின் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், கரூருக்கு வந்திருந்த மத்திய ரெயில்வே இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷிடம், கரூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தக் கோரி பா.ஜ.க. சார்பில் கடிதம் அளித்திருந்தோம்.

    அதன் அடிப்படையிலேயே கரூர் ரெயில் நிலையத்தை ரெயில்வே அமைச்சகம் தேர்வு செய்து நிதி ஒதுக்கி உள்ளது என்றார்.

    இது குறித்து பயணிகள் தரப்பில் கூறும் போது, நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் பா.ஜ.க.வும், காங்கிரசும் திட்டத்திற்கு உரிமை கொண்டாடி அடித்துக்கொள்வதால் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே திட்ட பணிகள் நிறைவேற இருவேறு கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    • கரூர் குப்பை கிடங்கு தீ 6 நாட்களுக்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
    • தொடர்ந்து தண்ணீர் தெளித்து அணைக்கப்பட்டது

    கரூர்,

    கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து கரூர், புகழூர், அரவக்குறிச்சி, முசிறி தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 5 நாட்களாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனாலும் முழுவதுமாக தீயை அணைக்க முடியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அதனை முழுவதுமாக அணைத்தனர். இதனால் கரூர் வாங்கல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • தவுட்டுப்பாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
    • நீண்ட லாரிகளை இரவு நேரங்களில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரைக்கு சுமார் 360 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை அதிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் புதிய பாலம் வழியாக போலீஸ் செக் போஸ்ட் அருகே வந்தது.போலீஸ் செக்போஸ்ட் அருகே செல்லும் போது சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதால் போலீஸ் செக்போஸ்ட் அருகே அதிக நீளமான காற்றாலை விசிறி இறக்கையை நீளமான லாரியில் கொண்டு செல்லும் போது காற்றாலை விசிறி இறக்கையுடன் லாரி செல்ல முடியாமல் நீண்ட நேரம் தடுமாறிக் கொண்டு மிகவும் மெதுவாக சென்றது.அதன் காரணமாக மிகவும் நீளமான காற்றாலை இறக்கைகளை லாரிகளில் கொண்டு சென்றதால் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி ஆற்று பாலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் ,வேன்கள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து காற்றாலை விசிறி ரெக்கை கொண்டு செல்லும் லாரிக்கு பின்னால் வரிசையாக அணிவகுத்து மெதுவாக சென்றன.இதனால் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து பாலத்துறை மேம்பாலம் வரை ஏராளமான வாகனங்கள் இறக்கையை ஏற்றி செல்லும் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பகலில் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது. பகல் நேரங்களில் வரும்போது அனைத்து வாகனங்களும் நீண்ட நேரம் மெதுவாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளை இரவு 10 மணிக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பன்னம் சத்திரம் பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது
    • விரைவில் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன .இந்த கடைகளில் அதிகளவு பிளாஸ்டிக் பைகள், கேரிபேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் கப்புகள், அழுகிய காய்கறிகள், அழுகிய பொருட்களை தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளையும் தார் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.மழை நீர் கொட்டி கிடைக்கும் கழிவுகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு புழுக்கள் உற்பத்தியாகி ஆயிரக்கணக்கான கொசுக்கள் உருவாகிறது. இந்த கொசுக்கள் அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ள குடியிருப்பு வாசிகளை தீண்டுவதால் டெங்கு ,மலேரியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் இப்பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கரூர் மாவட்டம் புகழுரில், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • 2 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்பட உள்ள உணவு கூடத்திலும் ஆய்வு

    வேலாயுதம்பாளையம்,

    புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் இயக்குனர் திடீர்ஆய்வு மேற்கொண்டார்.கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியில் உள்ள பழைய காகித ஆலை பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்னால் முதலமைச்சரின் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்திற்காக உணவுகள் தயாரிப்பதற்காக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.இங்கு புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிகள் என சுமார் 2000 பேருக்கு உணவு பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது.இந்த சமையல் கூடத்தில் கம்யூனிட்டி கிச்சன் கட்டிடத்தையும். புகழூர் நகராட்சிக்கு சொந்தமான காகித ஆலைக்குபின்னால் உள்ள கந்தசாமி பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் நுண் உரம் தயாரிக்கும் மையத்தினையும், மற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் இயக்குனர் விஜயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் போது புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சிகளின் சேலம் மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன், புகழூர் நகராட்சிஆணையாளர்(பொ) பால்ராஜ்,துப்புரவு ஆய்வாளர் வள்ளி ராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×