search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மோடி அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு உரிமை கொண்டாடும் காங்கிரஸ் எம்.பி.
    X

    மோடி அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு உரிமை கொண்டாடும் காங்கிரஸ் எம்.பி.

    • பா.ஜ.க.வும், காங்கிரசும் திட்டத்திற்கு உரிமை கொண்டாடி அடித்துக்கொள்வதால் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • திட்ட பணிகள் நிறைவேற இருவேறு கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    கரூர்:

    நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 508 ரெயில் நிலையங்கள் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் புதுப்பிக்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் கரூர், தஞ்சாவூர் உட்பட 18 ரெயில் நிலையங்கள் ரூ.515 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

    அதனை தொடர்ந்து கரூர் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதி மணி அந்த அடிக்கல்லை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட முதன்மை திட்ட மேலாளர் அணில்குமார் பஞ்ஜியார், கரூர் உதவி கலெக்டர் ரூபினா, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தின் படி கரூர் ரெயில் நிலையத்தில் லிப்ட், நகரும் படிக்கட்டு, பயணிகள் காத்திருப்பு அறை, பயணிகள் உள்ளே, வெளியே செல்ல தனித்தனி வழிகள் உள்ளிட்ட வசதிகள் ரூ.34 கோடியில் அமைக்கப்படுகிறது. மேற்கண்ட பணிகளை அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதற்கு காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகளும் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.ஜோதிமணி நிருபர்களிடம் கூறும்போது, கரூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தி மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கடந்த 2020-ம் ஆண்டு கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் தற்போது ரூ.34 கோடியில் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.

    இதனை பா.ஜ.க. ஏற்க மறுத்தது. அந்த கட்சியின் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், கரூருக்கு வந்திருந்த மத்திய ரெயில்வே இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷிடம், கரூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தக் கோரி பா.ஜ.க. சார்பில் கடிதம் அளித்திருந்தோம்.

    அதன் அடிப்படையிலேயே கரூர் ரெயில் நிலையத்தை ரெயில்வே அமைச்சகம் தேர்வு செய்து நிதி ஒதுக்கி உள்ளது என்றார்.

    இது குறித்து பயணிகள் தரப்பில் கூறும் போது, நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் பா.ஜ.க.வும், காங்கிரசும் திட்டத்திற்கு உரிமை கொண்டாடி அடித்துக்கொள்வதால் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே திட்ட பணிகள் நிறைவேற இருவேறு கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×