என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மஞ்சபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (55). விவசாயி. இந்நிலையில் வயலுக்கு சென்ற இவர் அங்கிருந்த கிணற்றின் அருகே படுத்து தூங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி, பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தீயணைப்பு வீரர்கள் மூலம் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 200 பேருக்கு மட்டுமே வழங்க சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • இந்த ஓட்டலில் ஒரு சிக்கன் பிரியாணி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி :

    10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதனை வாங்க வியாபாரிகள், பஸ் கண்டக்டர்கள் உள்ளிட்டவர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா, செல்லாதா என பெரும்பாலான மக்கள் இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதனை அறித்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தேடி எடுத்தனர். சிலர் தங்களுக்கு தெரிந்த கடைகளுக்கு சென்று 10 ரூபாய் நாணயங்களை வாங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் சிக்கன் பிரியாணி வாங்க சம்பந்தப்பட்ட அந்த ஓட்டலுக்கு சென்றனர். பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், அங்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை 10 மணி முதலே முண்டியடித்து கொண்டு வரிசையில் நின்றனர்.

    இந்த நிலையில் காலை 11 மணிக்கு ஓட்டல் ஊழியர்கள் பொதுமக்களிடம் 10 ரூபாய் நாணங்களை பெற்று கொண்டு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கினர்.

    200 பேருக்கு மட்டுமே வழங்க சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 200 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிரியாணி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுத்து வரும் நிலையில் ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வழக்கமாக இந்த ஓட்டலில் ஒரு சிக்கன் பிரியாணி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நேற்று 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாக ஓட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

    • காட்டுக்கொட்டாயை சேர்ந்த நடராஜன் கட்டிட தொழிலாளி.
    • எதிர்பாராத விதமாக நடராஜன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே நெடுமானூர் கிராமம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் நடராஜன் (வயது43) கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாத்தி (38). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நடராஜன், தனது வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக நடராஜன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் நிலையம் மற்றும் அதன் வளாகம் சுகாதாரமாக இருக்கிறதா என்றும் பார்வையிட்டார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்து வழக்குகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலக கோப்புகள் மற்றும் பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் போலீஸ் நிலையம் மற்றும் அதன் வளாகம் சுகாதாரமாக இருக்கிறதா என்றும் பார்வையிட்டார். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்து வழக்குகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார். ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • 19- ந் தே‌தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • உலகங்காத்தான் பகுதியில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 19- ந் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் அவர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. இதையொட்டி உலகங்காத்தான் பகுதியில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பயனாளிகள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு பணிகள், வாகனங்கள் வந்து செல்வதற்கான பணிகள், தற்காலிக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து பணிகளை விரை ந்து மேற்கொள்ள பொது ப்பணித்துறை மற்றும் இதர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

    அப்போது கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் கட்டுமானப் பணிகள்) மாலா, கள்ளக்குறிச்சி தாசில்தார் சத்தியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • சத்யா, பக்கிரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • எந்தவித அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க உளுந்தூர்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருநாவலூர்:

    உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவைச் சேர்ந்தவர் சத்யா (வயது 42). கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. துணை செயலாளர். அதே பகுதி கார்நேசன் தெருவை சேர்ந்தவர் பக்கிரி (52). ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு பக்கிரி திருச்சி நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த சத்யா, பக்கிரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இத்தகவல் பரவி இருதரப்பினரும் அங்கு ஒன்று கூடினர். இதில் பக்கிரியை பா.ம.க. பிரமுகர் சத்யா தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் பக்கிரி புகார் அளித்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் சத்யா மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். இதனை தொடர்ந்து அங்கு எந்தவித அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க உளுந்தூர்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • நயினார்பாளையம் 4 முனை சந்திப்பிலிருந்து சின்னசேலம் செல்லும் வழியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
    • ஒரு தனி நபருக்காக 2 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாமல் 100 மீட்டர் மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்றியுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமரன் (வயது 65 )கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருவதாகவும், மகன் சுரேஷ் திருமணமாகி வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு நயினார்பாளையம் 4 முனை சந்திப்பிலிருந்து சின்னசேலம் செல்லும் வழியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை நயினார் பாளையம் கிராமத்தை சேர்ந்த குமரனுக்கு குத்தகைக்கு விட்டதாக கூஇவர்களுடைய நிலத்தின் அருகே செல்வம் என்பவருடைய நிலம் இருக்கிறது .

    செல்வம் நிலத்திற்கு செல்ல வழி இல்லை. எனவே இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்பு குமரனிடம் தன்னுடைய நிலத்திற்கு செல்ல உங்களுடைய பட்டா நிலத்தில் 2 சென்ட் நிலம் கொடுங்கள். அதற்கு பதிலாக பணம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் .அதற்கு குமரன் மறுப்பு தெரிவித்ததால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.இந்தநிலையில் குமரன் நிலத்திற்கு அருகே நீர்நிலை புறம்போக்கு இருப்பதை அறிந்த செல்வம் பொதுப்பணி துறைக்கு நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.இது சம்பந்தமாக நீர்நிலை புறம்போக்கை அகற்ற போகிறோம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் ஏதும் கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை ேஜ.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றியது. இதில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள நீர் நிலை கால்வாய் ஆக்கிரமிப்பை குமரனுக்கு சொந்தமான நிலத்தில் மட்டுமே அகற்றியுள்ளனர்.

    ஆக்கிரமிப்பை அகற்றும் போது தென்னை மரத்தை பெண் ஒருவர் கட்டிபிடித்து அழுத்த காட்சி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.பொதுவாக விவசாய நிலத்தில் பயிர்கள் இருந்தால் அதற்கான கால அவகாசம் வழங்கி பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது அரசு வழிமுறைகளில் ஒன்றாகும். இதனை மீறி ஒருதலை பட்சமாக பொதுப்பணித்துறை செயல்பட்டதாக கூறப்படுகிறது . இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்தார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார் ஒரு தனி நபருக்காக 2 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாமல் 100 மீட்டர் மட்டுமே ஆக்கிரமிப்பை பொதுப்பணி துறை அதிகாரிகள் அகற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம்.
    • 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம். இந்நிலையில் இன்று காலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் போலீஸ் நிலையத்திலிருந்து அலுவலக பணி காரணமாக வெளியில் சென்றனர். அப்போது 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது. அப்போது பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    • 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வரும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான முறையில் வேலை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    • வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அதனை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அதனை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் போலீஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் ந ரசிம்மஜோதி மற்றும் ேபாலீசார் உடன் இருந்தனர்.

    • வேப்பூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது எதிரே வந்த கார் மோதியது.
    • காரை பரி சோதனை செய்தபோது போதை பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுக்கா கோலத்துகோம்பை கிராமத்தைச் சேர்ந்த வர் வேலாயுதம் ( வயது 65 ) இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தங்கதுரையும்( வயது 23) என்பவரும் கீழ்குப்பம் அருகே உள்ள செம்பா குறிச்சி கிராமத்திற்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் சென்று மீண்டும் வாழப்பாடிக்கு செல்ல குரல் மும்முனை சந்திப்பில் உள்ள வேப்பூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது எதிரே வந்த கார் மோதியது.

    இதில் வேலாயுதம், தங்கதுரை ஆகியோருக்கு பலத்த அடிப்பட்டது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற காரை அப்பகுதி வாலிபர்கள் பின் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்தனர். அந்தக் காரை வாசுதேவனூர் அருகே உள்ள சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் அடிப்பட்ட இருவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை பரி சோதனை செய்தபோது போதை பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 44 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 70 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற டிரைவரை காரில் இருந்த ஆதார் கார்டில் உள்ள முகவரியை வைத்து தேடிவந்த நிலையில் சின்னசேலம் மூங்கில் பாடி ரோட்டில் வசித்து வந்த டிரைவர் ஆதிராஜாராமை ( வயது35) அதிரடியாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது .

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள காரணை பெருச்சானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தினால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரணைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம் முகையூர், ஆ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர்,சி.மெய்யூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், பில்ராம்பட்டு, பரனூர், சித்தாமூர், காடகனூர் ஆகிய ஊர்களில் மின்விநியோகம் இருக்காது . இத்தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×