என் மலர்
கள்ளக்குறிச்சி
- தி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் சுமார் 25 ஆயிரம் பேர் வரவேற்பளித்தனர்.
- தி.மு.க. தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
திருக்கோவிலூர்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளருமாண உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு இன்று காலை 10.45 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மணலூர்பேட்டைக்கு வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சருமான எ.வ.வேலு முன்னிலையில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் சுமார் 25 ஆயிரம் பேர் வரவேற்பளித்தனர்.
மேளதாளம், வான வேடிக்கை முழங்க, பூரண கும்ப கலசத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பறை இசை, பம்பை, மயிலாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், கொம்பை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தவிர 3 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தனி மேடைகளில் கலை குழுவினரின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வரவேற்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றினார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிளுடன் புறப்பட்டு லா.கூடலூர் கிராமத்திற்கு சென்றார்.
அங்கு நடைபெற்ற தி.மு.க. தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், திருக்கோவிலூர் ஒன்றிய குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார், ரிஷிவந்தியம் ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன், மணலூர்பேட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் எம்.ஜெய்கணேஷ் பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் பாலாஜிபூபதி, மாவட்ட ஆவின் துணைச் சேர்மன் பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்பட தி.மு.க, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- 2½ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
- திருடர்கள் பிடித்து இழுத்ததில் நகை அறுந்து ஒரு பகுதி திருடர்கள் கையில் சிக்கியது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம் (வயது58). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றாா். இந்நிலையில் மர்மநபர்கள் செல்லம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் செல்லத்தின் வீட்டின் எதிரே உள்ள சின்னராஜ்(54) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2½ பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் சின்னராஜ் வீட்டின் அருகில் உள்ள அன்னபாக்கியம்(70) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அங்கிருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்தனர். பின்பு அங்கு தூங்கிக்கொண்டிருந்த அன்னபாக்கியம் என்பவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது எழுந்த அன்னபாக்கியம் நகையை தனது கைகளால் பிடித்து கொண்டு சத்தம் எழுப்பினார், இருப்பினும் திருடர்கள் பிடித்து இழுத்ததில் நகை அறுந்து ஒரு பகுதி திருடர்கள் கையில் சிக்கியது. இதையடுத்து அந்த நகையுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இது குறித்த தகவலின் பேரில் ரிஷிவந்தியம் போலீசாார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் இருந்த தடயங்கள் சேகரித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- வடசிறுவள்ளூர் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
- விஜயன் என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரியூர், வடசிறுவள்ளூர் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(வயது23) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று வட சிறுவள்ளூரை சேர்ந்த விஜயன்(25) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். உடன் அவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- ரூ.95 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே உள்ள வாணாபுரத்தில் இயங்கிவரும் கஸ்தூரிபாய் காந்தி பாலிக வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படித்து வரும் மாணவிகளின் வசதிக்காக அங்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் ரூ.95 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று (புதன்கிழமை) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி புதிதாக கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்அதே பகுதியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி யிலும் ஆய்வு செய்தார். அப்போது அங்கி ருந்த 1ம் வகுப்பு மாணவர்களிடம் பாடப்புத்தகத்தை வாசிக்க சொல்லி அவர்களின் கல்விதிறனை ஆய்வு செய்தார், மேலும் அருகில் இயங்கி வரும் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களிடமும் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, ஒன்றிய தி.மு.க.செயலாளர்கள் பெருமாள். துரைமுருகன், பாரதிதாசன், ஒன்றியக்குழு துணை தலைவர் அண்ணா துரை மற்றும் கட்சி நிர்வாகி கள் பலர் உடன் இருந்தனர்.
- மரசிற்ப பொதுப்பணி கூட்டமைப்பு கட்டிடத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை குறித்து 2 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
- ஓவியம் மற்றும் சிற்பக்கலை குறி்த்து பயிற்சி அளித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தஞ்சாவூர் கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் சென்னை தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள மாவட்ட மர சிற்பக் கலைஞர்கள் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு விருக்ஷா - மரசிற்ப பொதுப்பணி கூட்டமைப்பு கட்டிடத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை குறித்து 2 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கி பயிற்சி முகாமில் தொடக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன் வரவேற்றார். இதில் ஓவியர்கள் அய்யப்பா, ராஜப்பா, தமிழ்நாடு தொழில், புத்தக நிறுவன திட்ட முன்னோடி செந்தமிழ் அரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மர சிற்பக் கலைஞர் சக்திவேல் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஓவியம் மற்றும் சிற்பக்கலை குறி்த்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
- காலை 9.20 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கொடியேற்றுகிறார்.
- அனைவரும் வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பயனாளிகள், தி.மு.க.தொண்டர்கள் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு பொதுப் பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (19- ந் தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் காலை 9.20 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கொடி யேற்றுகிறார். காலை 9.40மணிக்கு கூவனூரில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதி 2022- 2023ன்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை திறப்பு விழாநடக்கிறது.
காலை 10 மணிக்கு மாடாம்பூண்டியில் கருணா நிதி நூற்றாண்டு விழா கொடியேற்றியும், காலை 10.30 மணியளவில் லா.கூடலூர் தியாகதுருகத்தில் பால் முகவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியிலும், தொடர்ந்து மதியம் 12 மணி யளவில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பகல் 12.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திலும், மாலை 5 மணியளவில் உலகங்காத்தான் கிராமத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
பின்னர், மாலை 6.15 மணிக்கு மாடூர் ஏ.என்.பி திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடி களுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாலை 7.15 மணியளவில் எலவனாசூர்கோட்டையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கொடியேற்று விழாவிலும், நிறைவாக மாலை 7.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை லலிதா திருமண மண்டபத்தில் திமுக சமூக வலைதள செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடலும், தி.மு.க.முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் கள்ளக் குறிச்சி மாவட்டதைச் சேர்ந்த பொது மக்கள், பயனாளிகள், தி.மு.க. முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ஆலத்தூர் மற்றும் புதுப்பட்டு துணை மின் நிலையம்
- பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ஆலத்தூர் மற்றும் புதுப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சங்கராபுரம், பாண்டலம், குளத்தூர், வடசிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், ஆரூர், கிடங்குடையாம்பட்டு, ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், ஜவுளிகுப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கள்ளிப்பட்டு, கொசப்பாடி, கூடலூர், மோட்டாம்பட்டி, புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், ராவத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை,
பாவளம், ஆலத்தூர், அழகாபுரம், திருக்கனங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், காந்திநகர், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமனத்தம், கல்லேரிகுப்பம், பழையசிறுவங்கூர், சித்தேரிபட்டு, காந்திநகர், சோழம்பட்டு, நெடுமானூர், சேஷசமுத்திரம், சூ.பாலப்பட்டு, தண்டலை, பெருவங்கூர், ரோடுமாமந்தூர், சிறுவங்கூர், மேலப்பட்டு, கீழப்பட்டு, தொன்னந்தூர், சிங்காரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்ம ஜோதி தலைமையிலான காவலர்கள் வளையாம் பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த குமார் (வயது 43) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் குமாரை கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
- கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன்மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராய ஊழல்களை கண்டுபிடித்து போலீசார் அழித்து வருகின்றனர். நேற்று முன்தினம் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல்ஹக் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண் டு மோகன்ராஜ் தலைமையில் கொண்ட போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது கோவில் மொழிபட்டு கிராமம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய மூன்று பிளாஸ்டிக் பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட தலைமறைவான குற்றவாளி வெங்கட்ராமன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
- பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.
- கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 44). இவர் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு செல்ல செம்பாக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.பஸ் நிலையத்தில் அய்யப்பன் அருகே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் அய்யப்பனின் பின் பாக்கெட்டில் இருந்த ரூ.600 பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது, அய்யப்பன் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள், தப்பியோடிய 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், பணத்தை பறிமுதல் செய்து அய்யப்பனிடம் கொடுத்தனர்.
மேலும், 2 வாலிபர்களையும் கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு (வயது 35), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (22) என்பதும் தெரியவந்தது.அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்திலும் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.
- பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்ட சைபர் வலைதள பக்கத்தை ஆய்வு செய்தனர். அப்போது டிவிட்டர் வலைதளத்தில் கடந்த 4-ந் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை விமர்சித்தும் அவரது புகைப்படத்தை பகிர்ந்து மதரீதியாக விமர்சித்தும் அதன் மூலம் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலும் இரு மதத்தினரிடையே பகைமை உணர்ச்சியும் வெறுப்பையும் தூண்டும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்திலும் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் கட்டிமுத்து என்பவர் இதனை டிவிட்டரில் பதிவிட்டது தெரியவந்தது. அதன்படி கட்டிமுத்து மீது கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி பரப்புவோர் மீது காவல் துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மகன்கள் அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
- உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 65) தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (55). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் சின்னதம்பியும், லட்சுமியும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக சின்னதம்பி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் சரியாகவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த சின்னதம்பி கடந்த 13-ந் தேதி இறந்தார்.
கணவரின் பிரிவை தாங்க முடியாமல் வீட்டில் லட்சுமி அழுது கொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். இருப்பினும் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று லட்சுமி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதைபார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், சின்னதம்பி உடலை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லட்சுமியின் உடலையும் அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






