ரிஷிவந்தியத்தில் 3 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

2½ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். திருடர்கள் பிடித்து இழுத்ததில் நகை அறுந்து ஒரு பகுதி திருடர்கள் கையில் சிக்கியது.
ரிஷிவந்தியத்தில்  3 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம் (வயது58). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றாா். இந்நிலையில் மர்மநபர்கள் செல்லம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். 

பின்னர் செல்லத்தின் வீட்டின் எதிரே உள்ள சின்னராஜ்(54) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2½ பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் சின்னராஜ் வீட்டின் அருகில் உள்ள அன்னபாக்கியம்(70) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அங்கிருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்தனர். பின்பு அங்கு தூங்கிக்கொண்டிருந்த அன்னபாக்கியம் என்பவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது எழுந்த அன்னபாக்கியம் நகையை தனது கைகளால் பிடித்து கொண்டு சத்தம் எழுப்பினார், இருப்பினும் திருடர்கள் பிடித்து இழுத்ததில் நகை அறுந்து ஒரு பகுதி திருடர்கள் கையில் சிக்கியது. இதையடுத்து அந்த நகையுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இது குறித்த தகவலின் பேரில் ரிஷிவந்தியம் போலீசாார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் இருந்த தடயங்கள் சேகரித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com